திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (12:11 IST)

நேரடி நியமனங்கள் சமூக நீதி மீதான தாக்குதல்.! மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!!

Stalin
மத்திய அரசின் உயர் பதவிகளில் நேரடி நியமனங்கள், சமூக நீதி மீதான நேரடி தாக்குதல் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சமூகநீதியை நிலைநாட்டவும், இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்து அது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்யவும் கீழ்க்காணும் நடவடிக்கைகளை உடனே மேற்கொண்டாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
 
லேட்டரல் என்ட்ரி என்பது சமூகநீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதல். தகுதிமிக்க பட்டியல் - பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்குரிய வாய்ப்புகளை உயர்மட்டத்தில் தட்டிப் பறிப்பது ஆகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மத்திய அரசு இதனைக் கைவிட்டு, நிரப்பப்படாமல் இருக்கும் ஓ.பி.சி, எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்குரிய பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் நியாயமான, சமத்துவமான முறையில் பதவிஉயர்வு வழங்கப்படுவதை உறுதிசெய்திட வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். தொடக்கத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வருகிற 'க்ரீமி லேயர்' முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

அதற்கு முன்பு, பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் க்ரீமி லேயருக்கான வருமான உச்ச வரம்பை இனியும் தாமதிக்காமல் உடனடியாக உயர்த்திட வேண்டும் என்றும் அனைத்திற்கும் மேலாக, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

 
வரலாறு நெடுக தங்களுக்குரிய பங்கு மறுக்கப்பட்ட, நம் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட இது அவசியம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.