வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 31 மார்ச் 2023 (18:05 IST)

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கலாஷேத்ரா ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும்! - சீமான்

கலாஷேத்ரா கல்லூரியில் பணியாற்றி வரும் பேராசிரியர் உள்பட 4 பேர் பாலியல் துன்புறுத்தல் அளிப்பதாகவும், அவர்களை கல்லூரி இயக்குனர் பாதுகாப்பு அளிப்பதாகவும் கூறி, மாணவிகள் 2 வது நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கலாஷேத்ராவில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, கட்டாயம நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் இன்று மகளிர் ஆணைய தலைவர் குமாரி மாணவிகளிடம் விசாரித்து வருகிறார்.

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கலாஷேத்ரா ஆசிரியர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை திருவான்மியூர் கலாசஷேத்ரா அறக்கட்டளையின்கீழ் இயங்கி வரும் ருக்மணி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவமாணவிகள் பலருக்கும் அங்குப் பணியாற்றும் நான்கு ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

இக்கொடுமைக்கு எதிராக மாணவிகள் வீதியில் இறங்கி போராடியும், தொடர்புடைய ஆசிரியர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்யாமல் ஒருதலைச்சார்பாக நடந்துகொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது.

பாலியல் தொல்லை தொடர்பாக மாணவிகளும், தேசிய மகளிர் ஆணையமும் புகாரளிப்பதும் பின் அதனைத் திரும்பப்பெற்றுக் கொள்வதுமான தொடர் நிகழ்வுகள்,
குற்றவாளிகளைப் பாதுகாக்க திரைமறைவில் கல்லூரி நிர்வாகம் அதிகார அச்சுறுத்தலின் மூலம் மிகப்பெரிய அழுத்தம் அளிப்பதையே உறுதிப்படுத்துகிறது.

ஆகவே, தமிழ்நாடு அரசு இனியும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் கலாஷேத்ரா நிர்வாகத்திற்குத் துணைபோகாமல், பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை உடனடியாக கல்லூரயிலிருந்து நிரந்தரப் பணி நீக்கம் செய்வதோடு, அவர்களை விரைந்து கைது செய்து பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உரிய நீதி கிடைக்கச் செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

அநீதிக்கு எதிராகப் போராடும் மாணவிகளின் அறப்போராட்டம் வெல்லும் வரை நாம் தமிழர் கட்சி தோள் கொடுத்துத் துணை நிற்கும் என்று உறுதியளிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.