வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 31 மார்ச் 2023 (08:14 IST)

யூடியூபர் மணீஷ் காஷ்யப் சிறையில் அடைப்பு!

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர் தாக்கப்படுவதாக தவறான வீடியோ பதிவு செய்த பீகார் யூடியூபர் மனீஷ் காஷ்யப்பிற்கு ஏப்.03 தேதி வரை போலீஸ் காவலில் விசாரணை செய்ய அனுமதி  அளித்து மதுரை மாவட்ட  நீதிமன்ற நடுவர் நீதிபதி  டீலா பானு  உத்தரவு.
 
தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர் தாக்கப்படுவதாக  அவதூறாக வீடியோ பதிவிட்டு பீகார் யூட்யூபர் மனீஷ் காஷ்யப் பீகார் போலீசாரால் சிறையில் அடைக்கப்பட்டார்.  
 
இவர் மீது மதுரை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பிடிவார்ட் அடிப்படையில் தனிப்படை போலீசார் பீகார் சென்று அவரை மதுரை அழைத்து வந்து மாவட்ட நீதிமன்ற நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி டீலா பானு முன்பு பீகார் யூடியூபர் மனீஷ் காஷியப் ஆஜர் படுத்தப்பட்டார்.
 
யூட்யூபர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஒரே குற்றத்திற்கு பீகார், மதுரை,திருப்பூர் என பல்வேறு இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் இவரை முறையாக கைது செய்வதற்கான ஆவணம் சமர்பிக்காமல் காவல்துறை இவரை கைது செய்து அழைத்து வந்து இருக்கிறார்கள். எனவே அவருக்கு பெயில் வழங்க வேண்டும். போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 
 
இதற்கு அரசு தரப்பில் வாதாடி வழக்கறிஞர் இவர் தவறான வீடியோ பதிவின் மூலம் நாட்டு மக்கள் மத்தியில் இருக்கும் சகோதரத்துவம் சீர்குலைக்கப் பார்க்கிறார். இவரை கைது செய்து போலீசார் விசாரணைக்குட்படுத்தினால் மட்டுமே இவரின் பின்னால் மூளையாக செயல்பட்டவர் யார் என தெரிய வரும் என்றார். மேலும் 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென தெரிவித்தார்.
 
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,பீகார் யூடியூபர் மனீஷ் காஷ்யப்பிற்கு மார்ச் -30 முதல் ஏப்.3 தேதி வரை 3  நாள்   போலீஸ் காவலில் விசாரணை செய்ய அனுமதி  அளித்து மதுரை மாவட்ட  நீதிமன்ற நடுவர் நீதிபதி  டீலா பானு  உத்தரவு வழங்கினார்.