அதானி விமானத்தை பயன்படுத்தினாரா மோடி? – ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு பாஜக எம்.பி பதில்!
அதானியின் விமானத்தை பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாக ராகுல்காந்தி வைத்த குற்றச்சாட்டினால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு எழுந்தது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அதானி குழும பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. இன்று நடந்த கூட்டத்தொடரில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, பிரதமர் மோடி தனது நண்பர் அதானியை காக்க நினைப்பதாகவும், அதானியின் விமானத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரதமர் மோடி சென்று வந்ததாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது. பிரதமர் குறித்து அவதூறு பரப்புவதாக ராகுல்காந்திக்கு கண்டனம் தெரிவித்த பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே மக்களவையில் இன்று உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதானியின் தனி விமானத்தை பிரதமர் மோடி பயன்படுத்தினார் என்று யாராவது நிரூபித்தால் தான் பதவி விலக தயார் என்று கூறியுள்ளார். மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ராகுல்காந்தி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு உரிய சான்றுகளை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவரது எம்.பி அந்தஸ்தை இழக்க நேரிடும். பிரதமர் மோடி பிரதமரான பிறகு அதானியின் விமானத்தை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை” என்று கூறியுள்ளார்.
Edit by Prasanth.K