பாசஞ்சர் ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்ற திடீர் உத்தரவு: பயணிகள் அதிர்ச்சி
ஒரு பக்கம் கொரோனா வைரஸ் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் மாநில மற்றும் மத்திய அரசுகள் வருமானத்தைப் பெருக்குவதற்காக மறைமுகமாக பல கட்டணங்களை உயர்த்தி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்த பொதுமக்களுக்கு நேரடியாக பணம் கொடுத்து உதவாமல் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை மட்டும் மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. இந்தத் திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை ஒதுக்குவதாக அறிவித்தும், இன்று பசியுடன் இருக்கும் பொதுமக்களுக்கு எந்தவித பயனும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மற்றொரு அதிர்ச்சியாக பாசஞ்சர் பயணிகள் ரயில்களை உடனடியாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆக மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 30 பாசஞ்சர் ரயில்கள் இயங்கிவரும் நிலையில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களில் உள்ள பாசஞ்சர் ரயில்களையும் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்ற ரயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது
பாசஞ்சர் ரயில்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் பயணித்து வந்த நிலையில் தற்போது எக்ஸ்பிரஸ் ரயிலாக அவை மாற்றப்படுவதால் கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்படும் என்பது குறிப்பிடதக்கது. ஏற்கனவே வேலையின்றி வருமானம் இன்றி இருக்கும் பொது மக்கள் தற்போது எக்ஸ்பிரஸ் ரயிலாக பாசஞ்சர் ரயில்கள் மாற்றப்படுவது குறித்த செய்தியால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்