மு.க.அழகிரி பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி போலீசார் விசாரணை!
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் விக்கிரமங்கலம் ரோட்டில் நாகமலை அடிவாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரிக்கு சொந்தமான 24 ஏக்கர் தென்னந்தோப்பில் பங்களா உள்ளது.
விசேஷ நாட்களில் மற்றும் வார இறுதி நாட்களில் மு.க. அழகிரி குடும்பத்துடன் இங்கு வந்து தங்கி இப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு உதவிகள் செய்வது வழக்கம்.
மேலும், முக்கிய தினங்களிலும் குடும்பத்துடன் இங்கு வந்து பொழுதை கழித்து செல்வார்.
இந்த நிலையில், இரவு நேரத்தில் பங்களாவில் புகுந்த மர்ம நபர்கள் அங்குள்ள நீச்சல் குளம் அறைகள் போன்றவற்றில் உள்ளே நுழைந்து கதவை உடைத்து திருட முயற்சித்துள்ளதாக தெரிகிறது.
இங்கே இரவு காவலர் பணியில் இருந்த நிலையிலும் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பண்ணை வீட்டின் மேலாளர் குட்டி என்பவர் காடுபட்டி போலீசில் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார்.
புகார் குறித்து, காடுபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.