1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 21 மார்ச் 2024 (22:00 IST)

ராமநாதபுரத்தில் சுயேட்சை சின்னத்தில் போட்டி..! ஓபிஎஸ் அறிவிப்பு..!!

ops annamalai
பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் தான் போட்டியிடப் போவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
 
பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஓபிஎஸ் அணியினர், மக்களவைத் தேர்தலில் மூன்று தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தி இருந்தனர். ஆனால்  ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்படும் என்றும் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
 
இந்த நிலையில் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். காலை 10 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் பல மணி நேரம் நீடித்தது.
 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு முழு ஆதரவளிப்பதாக தெரிவித்தார். பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் தான் போட்டியிடப் போவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
 
தொண்டர்களின் பலத்தை நிரூபிக்கவே ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுவதாகவும், எங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க விரும்பியதாகவும், இரட்டை இலை சின்னம் இல்லாததால் ஒரு தொகுதியில் போட்டியிடுவதாகவும் ஓபிஎஸ் விளக்கம் அளித்தார்.
 
இரட்டை இலை சின்னத்தை பெறவே தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்த அவர்,  பாஜக கூட்டணியில் தனக்கு உரிய அங்கீகாரமும், அன்பும் உள்ளது என்றார். மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மோடி பிரதமர் ஆவார் என்றும் கூறினார். 

 
அண்மையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி வந்தபோது, தன்னிடம் இருந்து மைக்கை பிடிங்கியதாக சில தொலைக்காட்சிகள் தவறான செய்திகளை வெளியிட்டதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.