ராமேஸ்வரம் - விமர்சனம்!
|
இலங்கையிலிருந்து அகதியாக ராமேஸ்வரம் வருபவன் ஜீவன். அவன் மீது பரிவு காட்டுகிறாள் உள்ளூர் பெரிய மனிதரின் மகள் வசந்தி. அவளைத் தவிர்த்து வந்தவன் ஒருகட்டத்தில் நேசிக்கிறான். காதல் இறுகுகிறது. அவள் வீட்டில் எதிர்ப்பு. ஜீவன் தன் ஊர் மக்களுடன் தாயகம் செல்கிறான் - காதலியைக் கைப்பிடிக்க வருவேன் என்று சொல்கிறான். திரும்பி வருவதற்குள் வசந்திக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. திரும்பி வந்து காதலியைக் கைப்பிடித்தானா என்பதுதான் கதை.
ஒரு காதல் கதையைச் சொல்ல இலங்கை அகதிகள் என்கிற பின்புலத்தை அழகாக வடிவமைத்து இருக்கிறார் இயக்குநர். அந்தக்களமே படத்துக்கு புது நிறத்தைத் தந்துள்ளது.
காதலின் வலிமையை மட்டுமல்ல, அகதிகளின் வலியையும் அழகாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
ராமேஸ்வரம் அதனைச் சுற்றியுள்ள கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலப்பகுதியை இவ்வளவு அழகாக யாரும் காட்டியிருப்பார்களா? திறமையான ஒளிப்பதிவால் இது சாத்தியப்பட்டு இருக்கிறது.
அந்த வானத்தையும் மண்ணையும் ஒரே பிரேமில் காட்டி 'எல்லோரையும் கூட்டிப்போக கப்பல் வருமா' என்கிற பாடல் வரிகளும், காட்சிகளும் படு அழகு.
|
சிறிது நேரமே வந்து செத்துப் போகிற மணிவண்ணன், ஜீவனின் தாத்தாவாக நெஞ்சில் நிற்கிறார்.
பாவனாவின் அப்பாவாக வரும் லால் கோபம், அன்பு, பாசம், பரிவு எல்லாமும் காட்டியிருக்கிறார் நடப்பில்
"உங்க ஊரையும் எங்க ஊரையும் கடல் பிரிச்சிருக்கலாம். ஆனா கீழே பூமி ஒட்டிக்கிட்டுத்தான் இருக்கு" என்கிற வசனம் தொடங்கி படம் முழுதும் பொறிதட்டும் எளிமையான வலிமையான வசனங்கள் நிறைய உண்டு.
அகதிகளின் வாழ்க்கை நிலையைக் காட்டுவதாலோ என்னவோ படத்தில் ஓர் அசாதாரண சோகம் இழையோடுகிறது.
நிருவின் இசை படத்திற்கு பெரிய பலம். பாடல்களில் மட்டுமல்ல, பின்னணியிலும் நிரு தன்னை நிரூபித்துள்ளார்.
|
