1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. தீபாவளி மலர்
Written By

லட்சுமி குபேர பூஜை எவ்வாறு செய்வது...?

லட்சுமி குபேர பூஜை செய்ய தீபாவளி திருநாள் உகந்தது. மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில்  பூராட்டாதி  நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வது மிகுந்த பலன்களை தரும். 

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை  5 மணி முதல் இரவு 8  மணி வரை குபேர காலமாகும். இந்த பூஜை சிறப்பு மிக்கது. குபேரன் தனது செல்வம் அனைத்தையும் இழந்து நின்றபோது லட்சுமி தேவியை வணங்கி  எந்திரத்தைப்  பெற்றான். அந்த எளிய குபேர பூஜையை விரதமிருந்து செய்தால் நலம் விளையும். இதை செய்வதால் கடன்கள்  தீரும். செல்வம் பெருகும்.  ஆண்டுக்கு 2 முறை செய்தால் பணத்தட்டுப்பாடு இருக்காது.
 
வட இந்தியாவில், தீபாவளி அன்று இரவில் குபேரனை விசேஷமாக, தங்க, வெள்ளி நாணயங்களை வைத்து வழிபடும் பழக்கம் உள்ளது.
 
லட்சுமி குபேர பூஜை: லட்சுமி குபேர பூஜை என்பது வேத மந்திரங்கள் ஓத கலசம் வைத்து செய்யப்பட வேண்டும். சாதாரணமாக வீட்டில்  நாமே செய்வது என்றால் பூஜை மாடத்தில் லட்சுமி குபேர படத்தினை வைத்து இருபக்கமும் குத்து விளக்கு ஏற்ற வேண்டும். இப்படத்திற்கு  முன்பாக பெரிய வாழை இலை வைத்து அதில் நவ தானியங்களை தனித்தனியாக பரப்பி வைக்க வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர்  நிரம்பிய சொம்பை வைத்து அதில் மஞ்சள் கலந்து பின் மாவிலை சொருகி அதன்மேல் ஓர் மட்டை தேங்காய் வைத்திட வேண்டும். அதற்கு  மஞ்சள் குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரித்திட வேண்டும்.
 
பின் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையை ஆரம்பித்திட வேண்டியதுதான். நமக்கு தெரிந்த விநாயகர் துதி மற்றும் பாடல்களை  பாடி பூஜையை செய்ய வேண்டும். பின் மகாலட்சுமியை வணங்கி போற்றி வழிபட வேண்டும். அதன்பின் குபேர மந்திரங்கள் (அ) “குபேராய  நமஹ” “தனபதியே நமஹ” என 108 முறை சொல்லி தாமரை இதழ்கள் (அ) பூக்களால் பூஜிக்க வேண்டும். தாமரை மலர் லட்சுமி மற்றும்  குபேரனுக்கு உகந்த மலர்.
 
பின் நைவைத்தியமாக இனிப்புகள் மற்றும் பால் பாயாசம் போன்றவை வைத்து பூஜை முடித்திட வேண்டும். பூஜையில் தட்சணையாக காசுகள்  வைக்கப்பட வேண்டும். அதனை பூஜை முடிந்தவுடன் எடுத்து நமது பெட்டகங்களில் வைத்துவிடலாம். சிலர் தாம்பூலங்களையும், காசுகளையும்  தானமாக வழங்கிடுவர். லட்சுமி குபேர பூஜை தீபாவளி தினத்தில் செய்யும்போது வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதுடன் குபேரன் சகல  ஐஸ்வர்யத்தையும் வாரி வழங்கிடுவார்.