சகல ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர பூஜை...!
சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளிதரும் தீபாவளி திருநாளில் நாம் செய்யும் விரத பூஜையின் மூலம் சகல ஐஸ்வர்யங்களையும் பெற முடியும். அதில் மிக முக்கியமான பூஜை லட்சுமி குபேர பூஜை.
செல்வ வளங்களை வழங்கிடும் மகாலட்சுமியையும், நவநிதிகளையும் வைத்துள்ள குபேரரையும் ஒரு சேர பூஜை செய்வதன் மூலம் நமது செல்வ நிலை உயரும். தரித்திரம் நீங்கும். இதற்கு மிகவும் உன்னதமான நாள் தீபாவளி திருநாள்.
மகா விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் மகாலட்சுமி தீபாவளி தினத்தில் நமது இல்லம் தேடி வந்து அருள் பாலிக்கிறாள். தீபாவளி தினத்தின் மாலை 6 மணிக்கு முன்பே லட்சுமி குபேர பூஜை செய்வது நல்லது. நமது இல்லம் மகாலட்சுமியை வரவேற்க அலங்காரம் அணிவகுப்பு செய்திட வேண்டும். வாசலில் வண்ண கோலமிட்டு பூஜையறையில் குபேர கோலம் இட வேண்டும்.
மகாலட்சுமியின் திருவருளால் அனைத்து செல்வங்களும் அதாவது தனம், தான்யம், மக்கட் செல்வம், வீடு, தைரியம், வீரம், அறிவு என அனைத்தையும் பெற முடியும்.
திரேதா யுகத்தில் ஸ்ரீமுக ஆண்டு, தனுசு ராசி, பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர் குபேரர். தந்தையார் விஸ்வரஸ், தாயார் சுவேதாதேவி. சிறந்த சிவ பக்தனாகிய குபேரன் இந்திரனுக்கு இணையாக புஷ்பக விமானத்தில் பயணித்த பெருமை பெற்றவர். சிவனின் அருள்பெற்று அளகாபுரிக்கு அரணாக விளங்கிய குபேரன் வடதிசைக்கு அதிபதியாகவும் திகழ்கிறார்.
குபேரன் திருமுத்துகுடையான் கீழ் தாமரை மலர் மீதுள்ள ஆசனத்தில் ஒரு அபயமுத்திரையுடன் அமர்ந்திருக்கிறார். அவரது இருபுறமும் சங்க நிதி, பதும நிதி, என்ற தன தேவதைகள் வீற்றிருப்பர். அவர் தன் அருகே இரத்தினங்களை உதிரும் கீரிப்பிள்ளை வைத்திருப்பார். இத்தகைய சிறப்புமிக்க குபேரனை மகாலட்சுமியுடன் இணைந்து பூஜை செய்வதன் மூலம் குறைவற்ற செல்வநிதியை வாரி வழங்குவார்.