வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 16 ஜனவரி 2024 (12:49 IST)

யுவராஜ் சிங் சாதனை முறியடிப்பு! 404 ரன்கள் குவித்த கர்நாடக வீரர்..!!

player
19 வயதுக்குட்பட்டோருக்கான கூச் பெஹர் டிராபி டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டியில் கர்நாடக வீரர் பிரகார் சதுர்வேதி 404 ரன்கள் எடுத்து யுவராஜ் சிங் சாதனையை முறியடித்துள்ளார்.
 
இந்தியாவில் நடத்தப்படும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கூச் பெஹர் டிராபி டெஸ்ட் (Cooch Behar Trophy) தொடரின் இறுதிப்போட்டியில் கர்நாடகா மற்றும் மும்பை ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, இதன் முதல் இன்னிங்ஸை விளையாடிய மும்பை அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 380 ரன்கள் எடுத்தது. அவ்வணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஆயுஸ் மாத்ரே 145 ரன்களையும், ஆயுஷ் சச்சின் 73 ரன்களையும் எடுத்தனர்.
 
தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய கர்நாடகா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 223 ஓவர்களை சந்தித்த கர்நாடகா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 890 ரன்கள் குவித்தது. இதில் தொடக்க வீரரான பிரகார் சதுர்வேதி 638 பந்திகளில் 46 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 404 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். இதன்மூலம் கூச் பெஹர் டிராபியின் இறுதிப் போட்டியில் 400 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 

 
முன்னதாக, கூச் பெஹர் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் அடித்த ரன்கள்தான் அதிகபட்சமாக இருந்தது. 1999ஆம் ஆண்டு டிசம்பரில், பஞ்சாப் அணிக்காக விளையாடிய யுவராஜ் சிங் முதல் இன்னிங்ஸில் 358 ரன்களை குவித்ததுதான் சாதனையாக இருந்தது. 
 
பீகார் அணிக்கு எதிராகதான் யுவராஜ் இந்த சாதனையை படைத்திருந்தார். அந்தச் சாதனையை தற்போது பிரகார் சதுர்வேதி முறியடித்துள்ளார். எனினும் இந்தத் தொடரின் லீக் போட்டிகளில் மகாராஷ்டிரா பேட்டர் விஜய் ஜோல், அசாம் அணிக்கு எதிராக 2011-12ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 451* ரன்கள் எடுத்ததே இதுவரை சாதனையாக உள்ளது.