புதன், 13 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (17:06 IST)

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.! அட்டவணையை வெளியிட்ட ஐசிசி.!!

Cricket Shedule
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டது.  இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. 
  
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 3-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.  ஹர்மன்ப்ரீத் கவுர் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.  ஸ்மிரிதி மந்தனா துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.  
 
இந்நிலையில், மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.  அக்டோபர் மாதம் 4ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடனும், அக்டோபர் 9 ஆம் தேதி இலங்கை அணியுடனும், அக்டோபர் 13 ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியுடனும் இந்தியா மோதவுள்ளது.
 
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டியின் இறுதிப் போட்டி அக்டோபர் 20 ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.  மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான ஒட்டுமொத்த பரிசுத்தொகையாக இந்திய மதிப்பில் சுமார் 66.64 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.19.60 கோடியும், ரன்னர் அப் அணிக்கு ரூ.9.80 கோடியும், அரையிறுதிக்கு தகுதி பெரும் அணிக்கு ரூ.5.65 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.