கோலி ஒருமுறை பாகிஸ்தான் வந்தால் இந்தியாவின் உபசரிப்பை மறந்துவிடுவார்- முன்னாள் வீரர் கருத்து!
8 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை அடுத்த ஆண்டு பாகிஸ்தான் நடத்துகிறது. இதில் இந்திய அணி கலந்துகொள்வது குறித்து குழப்பமான செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் எப்படியும் இந்திய அணி கலந்துகொள்ளும் என கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இந்த தொடரில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் ஒரே க்ரூப்பில் ஏ பிரிவில் இடம்பெறும் என சொல்லப்படுகிறது. இரு அணிகள் மோதும் போட்டி மார்ச் 1 ஆம் தேதி நடக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இருநாட்டு ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது.
ஆனால் இப்போது மீண்டும் பிசிசிஐ, பாகிஸ்தான் செல்ல முடியாது என ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இலங்கையில் நடத்துமாறும் ஐசிசிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ள கருத்தில் “கோலி, ஒருமுறை பாகிஸ்தானுக்கு வந்து விளையாடினால் அவர் இந்தியாவின் உபசரிப்பை மறந்துவிடுவார். அந்த அளவுக்கு அவருக்கு பாகிஸ்தானில் தீவிரமான ரசிகர்கள் உள்ளார்கள். நாங்கள் இங்கு கோலி விளையாடுவதைப் பார்க்க ஆவலாக உள்ளோம்” எனக் கூறியுள்ளார்.