1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (13:30 IST)

100வது டெஸ்ட்டில் 8000 ரன்களை கடந்தார் விராட் கோலி!

இலங்கை – இந்தியா டெஸ்ட் போட்டியில் தனது 100வது டெஸ்ட் போட்டியில் 8000 ரன்களை கடந்துள்ளார் விராட் கோலி. 

 
இந்திய பேட்ஸ்மேன்களில் முக்கியமானவராக விளங்குபவர் விராட் கோலி. தோனிக்கு பிறகு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வந்த கோலி தற்போது அனைத்து வகை போட்டிகளிலும் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். இன்று நடைபெற்று வரும் இலங்கை – இந்தியா டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடி வரும் நிலையில் இது அவரது 100வது டெஸ்ட் போட்டியாகும்.
 
இதனை கௌரவிக்கும் வகையில் விராட் கோலிக்கு 100 எண் பொறித்த தொப்பியை தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பரிசாக வழங்கியுள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் கோலியின் இந்த 100வது டெஸ்டை ஹேஷ்டேகுகள் மூலம் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தனது 100வது டெஸ்ட் போட்டியில் 8000 ரன்களை கடந்துள்ளார் விராட் கோலி. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8000 ரன்களைக் குவித்த 6வது இந்திய வீரர் என்ற பெருமையையும், இந்த மைல் கல்லை எட்டும் ஐந்தாவது வேகமான பேட்டர் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார். 
 
அதாவது சச்சின் டெண்டுல்கர் (15921), ராகுல் டிராவிட் (13288), சுனில் கவாஸ்கர் (10122), விவிஎஸ் லட்சுமண் (8781), வீரேந்திர சேவாக் (8586) ஆகியோர் 8000 ரன்களைக் கடந்த பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் 8000 ரன்களைக் குவித்த 33வது பேட்டர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.
 
மேலும் சச்சின் டெண்டுல்கர் (200), ராகுல் டிராவிட் (163), விவிஎஸ் லட்சுமண் (134), அனில் கும்ப்ளே (132), கபில்தேவ் (131), சுனில் கவாஸ்கர் (125), திலீப் வெங்சர்க்கார் (116), சவுரவ் கங்குலி (113), இஷாந்த் சர்மா (105), ஹர்பஜன் சிங் (103), மற்றும் வீரேந்திர சேவாக் (103) ஆகியோருக்குப் பிறகு 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 12வது இந்தியர் கோலி என்பது கூடுதல் தகவல்.