ரோஹித்தை ஒருநாள் அணிக்கு கேப்டனாக நியமித்தது ஏன்? சவுரவ் கங்குலி விளக்கம்!
இந்திய ஒருநாள் அணிக்கு கேப்டன் பொறுப்பு வகித்து வந்த கோலி நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் விராட் கோலியும் ஒருவர். ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் கேப்டன்சி மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் டி 20 போட்டிகளின் கேப்டன்சியில் இருந்து விலகினார். ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் கேப்டனாக நீடித்தார்.
ஆனால் இப்போது தென் ஆப்பிரிக்கா தொடருக்கு முன்னதாக அவரிடம் இருந்து ஒரு நாள் அணிக்கான கேப்டன்சியும் பிடிங்கப்பட்டு ரோஹித் ஷர்மா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலில் கோலி தானாகவே கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்த்தோம். அதற்காக 48 மணிநேரம் காத்திருந்தோம். ஆனால் அவர் செய்யாததால் நீக்கப்பட்டார் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் முதல் முறையாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ரோஹித் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பேசியுள்ளார். அதில் கோலி டி 20 கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்யவேண்டாம் என நாங்கள் கூறினோம். ஆனால் அவர் விலகினார். அதனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் இரு வடிவங்களுக்கு இரண்டு கேப்டன்கள் இருப்பது சரியாக இருக்காது என நாங்கள் கருதினோம். ரோஹித் ஷர்மாவின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கேப்டனாக கோலி தொடர்வார் எனப் பேசியுள்ளார்.