36 வருடமாக இங்கிலாந்திடம் தோற்காத நியூஸிலாந்து: இன்று வெல்லப்போவது யார்?
இன்று நடைபெறும் இங்கிலாந்து – நியூஸிலாந்து இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் ரசிகர்களிடையே தீவிர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரையிலான தரவரிசை பட்டியலில் நியூஸிலாந்து மூன்றாவது இடத்திலும், இங்கிலாந்து நான்காவது இடத்திலும் உள்ளன. இன்று நடக்கும் போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அதனால் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யமுடியும் என்ற நிலையில் இரு அணிகளும் மிக பலமாக மோத உள்ளன.
இங்கிலாந்து ஏற்கனவே ஐந்தாவது இடத்தில் இருந்தது. இந்தியாவுடன் ஆடிய மேட்ச்சில் வெற்றி பெற்றதால் தற்போது நான்காம் இடத்திற்கு வந்துள்ளது. எனினும் இந்த முறை வெற்றி பெறாமல் விட்டுவிட்டால் இங்கிலாந்துக்கு அரையிறுதி மதில்மேல் பூனைதான். இங்கிலாந்து தோற்று, அடுத்து நடக்க இருக்கும் பாகிஸ்தான் – வங்கதேசம் மோதலில் பாகிஸ்தான் வெற்றிபெற்றால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு சென்றுவிடும்.
மேலும், 1983 ல் நடந்த உலக கோப்பை போட்டிக்கு பிறகு இதுவரை ஒருமுறை கூட உலக கோப்பை போட்டிகளில் இங்கிலாந்து அணி நியூஸிலாந்தை வென்றதில்லை. இன்று அந்த அவப்பெயரை துடைப்பதற்கு இங்கிலாந்து முயலலாம். தற்போது டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது இங்கிலாந்து அணி.