தோனி உறுதியாக அடுத்த ஐபிஎல்-ல் விளையாடுவார்- சென்னை கிங்ஸ் பவுலிங் பயிற்சியாளர்
தோனி உறுதியாக அடுத்த வருடம் விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் பிராவோ தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்-2023, 16 வது சீசன் இந்தியாவில் நடந்து வருகிறது. மொத்தம் 10 அணிகள் விளையாடிய நிலையில், இப்போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற பிளே ஆப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் அணியை வீழ்த்தியது.15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி 10 வது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தோனி ஓய்வு குறித்த தகவல் வெளியான வண்ணம் இருப்பதால், ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
பிளே ஆப் போட்டி முடிவடைந்த பின்னர், கிரிக்கெட் வர்ணனையாளர் ஹஹர்சா போக்லே தோனியிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு தோனி, நான் இதுபற்றி முடிவெடுக்க இன்னும் 8-9 மாதங்கள் இருக்கின்றன. வரும் டிசம்பர் மாதம் மினி ஏலம் நடக்கவுள்ளது. நான் விளையாடுவேனோ அல்லது வெளியில் இருப்பேனோ… ஆனால் நான் எப்போதும் சிஎஸ்கேவுடன் இருப்பேன். என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், தோனி அடுத்த ஆண்டு விளையாடுவார் என்று சென்னை கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் பிராவோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் 100 சதவீதம் தோனி விளையாடுவார். இம்பேக்ட் விதி அவரை நீண்ட நாட்களுக்கு விளையாட வைக்கும். கடினமான சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது என்று தோனிக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.
இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.