நண்பருக்கான நன்றிக்கடனை செலுத்தும் தோனி… பேட்டில் இடம்பெற்ற புதிய ஸ்டிக்கர்!
இந்திய அணியில் 2004 ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகமானார் தோனி. தன்னுடைய திறமையான இன்னிங்ஸ்களை வெளிப்படுத்தி 2007 ஆம் ஆண்டே இந்திய டி 20 அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் படிப்படியாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியையும் பெற்று இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினார்.
2007 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை, 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் ஆகிய கோப்பைகளை அவர் தலைமையில் இந்திய அணி வென்றது. 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிய தோனி இப்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரோடு அவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்போது தோனி இந்த சீசனுக்கான பயிற்சியை தொடங்கியுள்ளார். இந்த பயிற்சியின் போது தன்னுடைய பேட்டில் ப்ரைம் ஸ்போர்ட்ஸ் என்ற ஸ்டிக்கரை ஒட்டியுள்ளார். இது தோனியின் நண்பரின் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடையின் பெயராகும். தோனி முதல் முதலில் சர்வதேச கிரிக்கெட் விளையாடிய போது அவருக்காக ஸ்பான்சர் பெற போராடியவர் அந்த நண்பர். அவருக்காக தோனி இப்போது அவரின் கடையின் பெயரை தன்னுடைய பேட்டில் ஒட்டியுள்ளார் என சொல்லப்படுகிறது.