#BoycottAliaBhatt… நெட்டிசன்கள் கோபத்தின் பின்னணி என்ன?
டார்லிங் பட நடிகை ஆலியா பட் ஆண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையை ஊக்குவிப்பதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக ஆலியா பட் தனது அடுத்த நெட்ஃபிக்ஸ் திரைப்படமான டார்லிங்ஸை விளம்பரப்படுத்த ஊடகங்களில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் நாளை ஓடிடி தளத்தில் வெளியாகும் இப்படத்திற்கு இப்பொழுதே சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
ஆம், இப்போதெல்லாம் பிரபலங்களின் கருத்துக்களுடன் இணைய பயனர்கள் கருத்து வேறுபாடுகொள்வது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் ஆலியாவுக்கு எதிராக உருவாகியுள்ள எதிர்ப்பு கொஞ்சம் வித்தியாசமானது. டார்லிங் படத்தில் ஆலியா பட் ஆண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையை ஆதரிப்பதாக உள்ளதாக சிக்கல் கிளம்பியுள்ளது.
டார்லிங்ஸ் திரைப்படத்தின் டீஸரில் ஆலியாவின் கதாபாத்திரம் தன் கணவனை சட்டியால் அடிப்பது, முகத்தில் தண்ணீரை ஊற்றுவது, முகத்தை தண்ணீரில் மூழ்க வைப்பது, மற்றும் அவரைக் கொல்வதற்குப் பதிலாக "அவன் அவளை நடத்தியது போலவே" நடத்தத் திட்டமிடுவதையும் சித்தரிக்கிறது.
இதனால் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #BoycottAliaBhatt என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. பெண் இயக்குநர் ஜஸ்மீத் கே ரீன் இயக்கும் இந்த படத்தை நடிகை ஆலியா பட் தயாரித்து நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.