பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!
தமிழ் திரையுலகில் பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார். அவருக்கு வயது 72.
தமிழ் மட்டுமின்றி, மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருந்த கமலா காமேஷ் பல திரைப்படங்களில் குணச்சித்திர கேரக்டர்களில், குறிப்பாக அம்மா கேரக்டரில் நடித்திருந்தார்.
அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் அறிமுகமான கமலா காமேஷ் முதல் படத்திலேயே ஹீரோவுக்கு அம்மாவாக நடித்திருந்தார் என்பதும், அதன் பின்னர் கடலோர கவிதைகள் உள்பட பல படங்களில் நடித்திருந்தார். விசுவின் சம்சாரம், அது மின்சாரம் என்ற படத்தில் கோதாவரி என்ற கேரக்டரில் நடித்திருந்த கமலா காமேஷ் கேரக்டர், இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நினைவில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
1974 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் காமேஷ் என்பவரை கமலா காமேஷ் திருமணம் செய்து கொண்டார். நடிகை உமா ரியாஸ் இவரது மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த கமலா காமேஷ் இன்று சென்னையில் காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Edited by Mahendran