வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2024 (19:23 IST)

நாய்களை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற உலக புகழ் பெற்ற முதலை நிபுணர் - பிடிபட்டது எப்படி?

Adam Britton

எச்சரிக்கை: இந்தச் செய்தியில் உள்ள விஷயங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

ஆஸ்திரேலியாவில் பல நாய்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, பிரிட்டனின் புகழ்பெற்ற முதலை நிபுணருக்கு மொத்தம் 10 ஆண்டுகள், 5 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட செய்தி ஒட்டுமொத்த நாட்டையே திடுக்கிடச் செய்துள்ளது.

 

பிபிசி மற்றும் நேஷனல் ஜியோகிராஃபிக் போன்ற நிறுவனங்களுடன் பணியாற்றியுள்ள முன்னணி விலங்கியல் நிபுணரான ஆடம் பிரிட்டன், விலங்குகளுடன் உடலுறவு கொள்ளுதல் மற்றும் விலங்கு வன்கொடுமை தொடர்பான 56 குற்றங்களைச் செய்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

 

சிறார் மீதான பாலியல் துன்புறுத்தல் பதிவுகள் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார்.

 

ஆஸ்திரேலிய வடக்குப் பிரதேசத்திற்கான உச்சநீதிமன்றம், 53 வயதான ஆடம் பிரிட்டன் விலங்குகளை இறக்கும் வரை சித்ரவதை செய்வதைப் படம் பிடித்து அவற்றைப் புனைப் பெயர்களில் ஆன்லைனில் பகிர்ந்து வந்ததாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்தது.

 

அவரது ஒரு வீடியோவில் இருந்து துப்பு கிடைக்கும் வரை, இந்தப் பாலியல் துன்புறுத்தல்கள் பல ஆண்டுகளாகக் கவனிக்கப்படாமல் இருந்தது. ஏப்ரல் 2022ஆம் ஆண்டில் கிராமப்புறத்தில் இருக்கும் அவரது டார்வின் ப்ராபர்ட்டி என்ற இடத்தைச் சோதனையிட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அங்கு அவரது மடிக்கணினியில் சிறார் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான வீடியோ பதிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

 

ஆடம் பிரிட்டன் செய்த குற்றங்களின் பெரும்பாலான விவரங்கள் வெளியிட முடியாத அளவுக்குக் கொடுமையாக இருந்தன, அதனால் “இவை நரம்பியல் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்” என தலைமை நீதிபதி மைக்கேல் கிராண்ட் நீதிமன்ற அவையில் இருந்தவர்களுக்கு முன்னெச்சரிக்கை விடுத்தார்.

 

அவையில் வழக்கின் உண்மைகள் வெளியிடப்பட்டபோது, பொதுமக்களில் சிலர் தாங்க முடியாமல் வெளியேறினர். பார்வையாளர் மாடத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் ஆடம் பிரிட்டனை திட்டி, அழுதனர். அவ்வப்போது தலை குனிந்த படி நின்றார்.

 

விலங்குகளை சித்ரவதை செய்து பிரிட்டன் அடைந்த மகிழ்ச்சியானது “அருவருப்பானது" என்று நீதிபதி கிராண்ட் கூறினார்.

 

மன்னிப்பு கேட்ட ஆடம் பிரிட்டன்

"நீங்கள் செய்த இந்த வன்கொடுமை எந்தவொரு சாதாரண மனிதச் செயல்பட்டிற்கும் முற்றிலும் புறம்பானது," என்று அவர் கூறினார்.

 

முழு தண்டனைக் காலத்தையும் அனுபவித்த பிறகு, அவர் செப்டம்பர் 2028ஆம் ஆண்டு மட்டுமே பரோலுக்கு தகுதி பெறலாம். மேலும் அவர் வாழ்நாள் முழுவதும் விலங்குகளை வைத்திருப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

தீவிரமான மற்றும் வித்தியாசமான பாலியல் விருப்பங்களை ஏற்படுத்தும் அரிய வகைக் கோளாறால், அவர் இத்தகைய குற்றங்களைச் செய்தார் என்று ஆடம் பிரிட்டனின் வழக்கறிஞர் வாதிட்டார்.

 

கடந்த வியாழனன்று நீதிமன்றத்தில், தான் செய்த "இழிவான குற்றங்களுக்கு" மன்னிப்பு கோரி பிரிட்டன் எழுதிய கடிதத்தை அவர்கள் வாசித்தனர்.

 

"அப்பாவி விலங்குகளுக்கு நான் இழைத்த வலி மற்றும் பாலியல் கொடுமைகளுக்கும் அதன் விளைவாக எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகத்தினருக்கு நடந்த துன்பத்திற்கும் மிகவும் வருந்துகிறேன்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் அவரது குடும்பத்திற்கு இது குறித்து ஏதும் தெரியாது என்றும், “நீண்டகால சிகிச்சை பெற்று இதிலிருந்து மீண்டு வர முயல்வேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

பல ஆண்டுகளாக நடந்த துன்புறுத்தல்

மேற்கு யார்க்ஷயரில் பிறந்து, பிரிட்டனில் வளர்ந்த ஆடம் பிரிட்டன், 20 ஆண்டுகளுக்கு முன்பு முதலைகள் குறித்து வேலை செய்வதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்றார்.

 

விலங்கியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர், தனது நிபுணத்துவத்தால் உலகளவில் புகழ் பெற்றார். சர் டேவிட் அட்டன்பரோ “லைஃப் இன் கோல்ட் பிளட்” (Life in cold blood) என்னும் ஆவணப்படத் தொகுப்பில் வந்தபோது அவருடன் இணைந்து இந்நிகழ்ச்சியில் பணியாற்றியுள்ளார்.

 

"அவர் விலங்குகள் மத்தியில் ஓர் அமைதியான, ஆனால் உணர்ச்சிமிக்க பாதுகாவலராகத் தான் தோன்றினார்," என உள்ளூர் மக்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

 

ஆனால் அவரிடம் விலங்குகள் மீது ஓர் “ஆழ்ந்த பாலியல் ஆர்வம் இருந்துள்ளது” என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. “இதுபோன்ற எண்ணம் கொண்ட மக்களுடன்” ரகசியமாகப் பகிரப்பட்ட இணைய குறுஞ்செய்திகள் மூலம், இவர் 13 வயதில் இருந்து குதிரைகளைத் தொந்தரவு செய்யத் தொடங்கியது தெரிய வந்தது.

 

"நான் ஒரு குழந்தையாக இருந்தபோது விலங்குகளைத் தொந்தரவு செய்தேன், ஆனால் அதைக் குறைத்துக்கொண்டேன். கடந்த சில ஆண்டுகளில் நான் மீண்டும் அதைச் செய்யத் தொடங்கினேன். இப்போது என்னால் அதை நிறுத்த முடியவில்லை. ஆனால் இதை நான் விரும்பவில்லை” என நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

கடந்த பத்து ஆண்டுகளாக, ஆடம் பிரிட்டன் தனது செல்லப் பிராணிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் மற்றவர்களின் நாய்களையும் தன்னிடம் ஒப்படைக்குமாறு உரிமையாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

"என் நாய்கள் எனக்கு குடும்பம் போன்றவை. எனக்கு வரையறைகள் உள்ளன" என்று அவர் ஒரு டெலிகிராம் உரையாடலில் கூறியிருக்கிறார்.

 

"நான் மற்ற நாய்களை மட்டுமே மோசமாகப் பயன்படுத்துகிறேன். அவற்றுடன் எனக்கு எந்த உணர்வும் இல்லை, அவை எனக்குப் பொம்மைகளைப் போன்றவை மட்டுமே” என்றும் அவர் பேசி இருக்கிறார்.

 

மற்றவர்களுக்கும் பயிற்சி

அவர் குறைந்தது 42 நாய்களை சித்திரவதை செய்துள்ளார், அதில் 39 நாய்களைக் கொலை செய்துள்ளார் என, பிபிசியால் பார்க்கப்பட்ட நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

 

அவர் கைது செய்யப்படுவதற்கு 18 மாதங்களுக்கு முன்பு அவர் செய்த குற்றங்கள் மட்டுமே அந்த ஆவணங்களில் இருந்தாலும், அதுவே 90 பக்கங்களுக்கு மேல் விவரிக்கப்பட்டுள்ளன.

 

கம்ட்ரீ ஆஸ்திரேலியா (Gumtree Australia) என்ற ஆஸ்திரேலிய விற்பனைத் தளம் ஒன்றின் மூலம் செல்லப் பிராணிகளை பயணம் அல்லது பணிப் பொறுப்புகளின் காரணமாக விலங்குகளுக்கான விடுதிகளில் விடுவதில் தயக்கம் காட்டி வந்தவர்களை ஆடம் பிரிட்டன் கண்டறிவார்.

 

அது போன்றவர்களுடன் “நன்றாகப் பேசி, நட்பு கொண்டு” அவர்களின் செல்லப் பிராணிகளை வளர்க்க ஒப்புதல் பெறுவார். அப்படி அவரிடம் கொடுக்கப்படும் செல்லப் பிராணிகள் பற்றிய சமீபத்திய தகவல்களை உரிமையாளர்கள் கேட்டால், அவர் அவ்விலங்குகளின் பழைய புகைப்படங்களையும் பொய்யான கதைகளையும் அனுப்பி சமாளித்துவிடுவதாக நீதிமன்றத்தில் கூறினார்.

 

ஆனால் உண்மையில், அவரது இடத்தில் கேமரா பொருத்தப்பட்ட ஒரு கப்பல் கன்டெய்னருக்குள் வைத்து விலங்குகளைப் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதற்கு “கொடுமை அறை” என்று பெயரிட்டு, அந்தப் பதிவுகளைப் புனைபெயர்கள் கொண்டு இணையத்தில் பதிவிட்டு வந்துள்ளார்.

 

தடயமில்லாமல் இதுபோன்ற பாலியல் கொடுமைகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று ஆடம் பிரிட்டன் மற்றவர்களுக்குப் பயிற்சியும் அளித்து வந்துள்ளார்.

 

நாய்களின் எச்சங்களை அகற்றுவது குறித்து கேட்டதற்கு, “அவர் இருந்த டார்வின் என்ற பகுதியின் புறநகரில் இருந்த 8 முதலைகளுக்கும், இன்னும் சில விலங்குகளுக்கும் உணவாக அளித்ததாக” கூறினார்.

 

ஒரு நாய்க்குட்டி உட்படக் குறைந்தது எட்டு நாய்களை பாலியல் வன்கொடுமை செய்த பதிவுகளை, அநாமதேயமாக, அடையாளங்களை வெளிப்படுத்தாமல் யாரோ துப்பு கொடுத்தன் பெயரிலேயே வடக்குப் பிரதேச காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

 

ஆடம் பிரிட்டன் சிக்கியது எப்படி?

பிரிட்டன் வழக்கமாகத் தன்னுடைய வீடியோக்களில் தன்னை அடையாளம் காண்பதைத் தவிர்க்கவும் அல்லது தன் இருப்பிடத்தை மறைக்கவும் பல முயற்சிகளை மேற்கொள்வார்.

 

ஆனால் அவரைச் சிக்க வைத்த ஒரு குறிப்பிட்ட வீடியோவில் டார்வின் நகரிலுள்ள அவரது இடத்தில், ‘சிட்டி ஆஃப் டார்வின்’ என எழுதப்பட்ட பிரகாசமான ஆரஞ்சு வண்ணத்திலான, நாய்களைக் கட்டப் பயன்படுத்தப்படும் கயிறு தெரிந்துள்ளது. அதன் மூலமே அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.

 

கடந்த ஏப்ரல் 2022ஆம் ஆண்டில், இதைக் கண்டுபிடித்த அடுத்த சில வாரங்களுக்குள் போலீசார் ஆடம் பிரிட்டனின் இருப்பிடத்தைக் கண்டறிந்து அவரைக் கைது செய்தனர். அதிலிருந்து தற்போது வரை அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

வீடியோ பதிவு சாதனங்கள், விலங்குகளின் எச்சங்கள் மற்றும் மடிக்கணினிகளை காவல்துறை பறிமுதல் செய்தது. அதில் சிறார்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட பதிவுகள் அடங்கிய 15 கோப்புகளும் இருந்தன.

 

விலங்குகளை துன்புறுத்துபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை இந்த வழக்கு வலியுறுத்துவதாக விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

 

வழக்கு விசாரணையைப் பார்ப்பதற்காக நாடு முழுவதும் இருந்து வந்திருந்த பலர், நீதிமன்றத்திற்கு வெளியே இது பற்றிப் பேசியபோது, இந்தத் தீர்ப்பு ஏமாற்றம் அளித்ததாகக் கூறினர். ஆனால் ஆடம் பிரிட்டன் துன்புறுத்திய செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு இது சற்று ஆறுதல் அளிப்பதாக இருக்கும் என்றும் கூறினார்கள்.

 

விலங்கியல் நிபுணர் ஆடம் பிரிட்டனிடம் நேரடியாகப் பேசுவது போன்ற தொணியில் பேட்டியளித்த ஒரு செயற்பாட்டாளர், "சிறையில் அடைத்து வைக்கப்பட்டு, நீங்கள் இப்போதுதான் சரியான இடத்தில் இருக்கிறீர்கள்" என்று கூறினார்.

 

"மதிப்பிற்குரியவரும், மதிக்கப்பட்டவருமாக இருந்த நீங்கள், இப்போது அறிவியல் சமூகத்திற்கு அவமானமாக இருக்கிறீர்கள்" என்று நடாலி காரி கூறினார்."

 

"இனிமேல் யாரும் உங்களை வியந்து பார்க்க மாட்டார்கள்" என்றும் அவர் தெரிவித்தார்.