செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : புதன், 12 அக்டோபர் 2022 (15:41 IST)

ரணில் அமைச்சரவை இலங்கையை 'குறைந்த வருமானம் கொண்ட நாடாக' அறிவிக்க ஒப்புதல் அளித்தது ஏன்?

Ranil Cabinet
இலங்கையை மத்திய வருமானம் பெறும் நாடுகளிலிருந்து, குறைந்த வருமானம் பெறும் நாடாக தரமிறக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


இதன்படி, இந்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

சர்வதேச தரப்படுத்தலுக்கு அமைய, இலங்கை மத்திய வருமானம் பெறும் நாடாக காணப்பட்டது.

இந்த நிலையில், மத்திய வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நாடாக இலங்கை இருக்குமானால், நிவாரண அடிப்படையிலான உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் கூறுகின்றார்.

தனிநபர் வருமானத்தின் அடிப்படையிலேயே இந்த தரப்படுத்தல் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

''கடந்த காலங்களில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, தனிநபர் வருமானமும் வீழ்ச்சி கண்டுள்ளது. வரலாற்றை நோக்குவோமானால், 1948ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரையான 56 வருடங்களாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் 5திற்கும் குறைவாக மட்டத்தில் இருந்தது. நாடு சுதந்திரம் பெறும் போது, தனிநபர் வருமானமானது, 120 டாலராக காணப்பட்டது. 56 வருடங்கள் கடந்ததன் பின்னர், தனிநபர் வருமானமானது, 1000 டாலர்களாக காணப்பட்டது.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், பொருளாதாரம் வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. பாரிய உற்பத்தி நடவடிக்கைகள் உருவாக்கப்பட்டன. அந்த பிரதிபலனாக 2014ம் ஆண்டு தனிநபர் வருமானமானது, 3827 டாலர் வரை அதிகரித்தது. இதையடுத்து, இலங்கை குறைந்த வருமானத்தை பெறும் நாடு என்ற பட்டியலிலிருந்து, மத்திய தர வருமானம் பெறும் நாடாக மாற்றம் பெற்றது.

2017ம் ஆண்டு தனிநபர் வருமானம் 4074 டாலராகவும், 2018ம் ஆண்டு 4057 டாலராகவும் காணப்பட்டது. 2019ம் ஆண்டு 3848 டாலராக அந்த தொகை குறைவடைந்தது. 2020ம் ஆண்டு 3695 டாலராகவும், 2021ம் ஆண்டு 3815 டாலராகவும் குறைவடைந்தது. அந்த நிலையில், 2022ம் ஆண்டு தனிநபர் வருமானம் மேலும் குறைவடைந்த நிலையில், அது குறித்து உலக அமைப்புக்கள் நிதி அமைச்சருக்கு அறிவித்தல் விடுத்திருந்தன" அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாடுகள் எவ்வாறு தரப்படுத்தப்படுகின்றன?

குறைந்த வருமானம் பெறும் நாடு :- தனிநபர் வருமானம் 1085 டாலருக்கு குறைவு

கீழ் மட்ட நடுத்தர வருமானம் பெறும் நாடு :- தனிநபர் வருமானம் 1085 - 4255 டாலர்

மேல் மட்ட நடுத்தர வருமானம் பெறும் நாடு :- தனிநபர் வருமானம் 4256 - 13205 டாலர்

உயர் வருமானம் பெறும் நாடு :- தனிநபர் வருமானம் 13205 டாலருக்கு அதிகம்

சுதந்திரத்திற்கு பின்னராக காலத்தில் குறைந்த மத்திய வருமானம் பெறும் நாடாக காணப்பட்ட இலங்கை, மத்திய வருமானம் பெறும் நாடாக 1997ம் ஆண்டு தரமுயர்த்தப்பட்டது.

அதன்பின்னர் 2019ம் ஆண்டு உயர் மத்திய வருமானம் பெறும் நாடாக தரமுயர்ந்திருந்ததுடன், 2020ம் ஆண்டு மீண்டும் குறைந்த மத்திய வருமானம் பெறும் நாடாக தரமிறக்கப்பட்டது.

இவ்வாறான பின்னணியிலேயே, நிவாரண அடிப்படையிலான உதவிகளை பெற்றுக்கொள்ளும் வகையில், சர்வதேச நிறுவனங்களின் தலையீடுகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்துடன் இலங்கையை முன்னர் இருந்த நிலைமைக்கு, குறைந்த வருமானம் பெறும் நாடாக தரமிறக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிவிப்பு

இலங்கை தொடர்ந்தும் நடுத்தர வருமானம் பெறும் நாடாகவே இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையின் கடன் தரமதிப்பீடு குறைக்கப்பட்டதன் காரணமாக புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிடமிருந்து (IBRD) வர்த்தகக் கடன் பெறுவதற்கு இலங்கைக்கு தொடர்ந்தும் சந்தர்ப்பம் கிடையாது என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, சர்வதேச அபிவிருத்திச் சங்கம் (IDA) வழங்கும் சலுகைக் கடன் வசதியைப் பெறுவதற்காக, நடுத்தர வருமானம் பெறும் நாடு என்ற நிலையை தற்காலிகமாக பொருட்படுத்தாது செயற்பட உலக வங்கிக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமெனக் கோரி முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை நேற்று (10) அங்கீகாரம் அளித்துள்ளது.

இக்கட்டான நிலையிலுள்ள நாடுகளுக்கு சலுகை அடிப்படையிலான உதவி வழங்கும் உலக வங்கியின் கீழ் இயங்கும் அமைப்பாக சர்வதேச அபிவிருத்திச் சங்கம் செயல்படுகிறது.

இதன்படி, இடைநிலை சலுகைக் கடன் திட்டத்தை (Reverse graduation) மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே பின்பற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த முறை "gap" என்று அழைக்கப்படுகிறது, மேலும் இந்தோனேசியா உட்பட 12 நாடுகள் ஏற்கனவே இந்த முறையைப் பயன்படுத்தி கடன் பெற்றுள்ளன.

இலங்கை தன்னை தரமிறக்கிக் கொண்டதன் ஊடாக, பிச்சை எடுப்பதற்காக தனக்கு பிச்சைகாரன் என்ற அந்தஸ்த்தை கொடு என இலங்கை கோருகின்றது எனகின்றார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி.

''இலங்கையை பொருத்த வரை, 2022ம் ஆண்டுக்குரிய தலா வருமானமாக உலக வங்கி சொல்வது, 3820 டாலர். இந்த 3820 டாலர் என்பது கீழ் மட்ட நடுத்தர வருமானம் பெறும் நாடு என்ற வகுப்புக்குள் தான் இலங்கை இடம்பிடிக்கும். 2021ம் ஆண்டு ஜுலை முதல் 2022ம் ஆண்டு ஜுலை வரையிலான காலப் பகுதியை அடிப்படையாகக் கொண்டே இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆகஸ்ட், செப்டம்பர், ஒக்டோபர் இந்த மூன்று மாத காலப் பகுதியில் பெரியதொரு வீழ்ச்சி ஏற்பட்டதாக எங்களால் சொல்ல முடியாது. 3820 டாலரிலிருந்து 1085 டாலராக குறைந்து விட்டது, எங்களை குறைந்த வருமானம் பெறும் நாடாக அறிவியுங்கள் என கேட்க முடியாது.

நான் பிச்சைகாரன் ஆகிவிட்டேன், பிச்சை எடுப்பதற்காக எனக்கு பிச்சைகாரன் என்ற அந்தஸ்த்தை கொடு என்று அரசாங்கம் கேட்கின்றது. இப்படி அறிவிப்பதற்கு முக்கியமான ஒரு காரணம் இருக்கின்றது. சர்வதேச நாணய நிதியம், குறிப்பாக உலக வங்கியிடம் கடன் வாங்க போகும் போது, இரண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. உலக வங்கி என்பது ஐந்து நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு அமைப்பு. சர்வதேச அபிவிருத்தி முகவர் என்ற நிறுவனமும், அபிவிருத்தி மற்றும் மீள்கட்டமைப்பிற்கான சர்வதேச வங்கி என்று நிறுவனமும் இந்த இடத்தில் முக்கிய இடத்தை பெறுகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களின் ஊடாகவே கடன்கள் நாடுகளுக்கு வழங்கப்படும்.

சர்வதேச அபிவிருத்தி முகவர் என்பது குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கு சலுகை அடிப்படையில் கடன்களை வழங்கும் நிறுவனம். மற்றையது, உலக வங்கியின் அங்கத்துவ நாடுகளுக்கு கடன் வழங்க வேண்டும் என்றால், அது அபிவிருத்தி மற்றும் மீள்கட்டமைப்பிற்கான சர்வதேச வங்கியின் ஊடாகவே முன்னெடுக்கப்படும். அபிவிருத்தி மற்றும் மீள்கட்டமைப்பிற்கான சர்வதேச வங்கியினால் வழங்கப்படும் கடன்கள் வட்டி வீதம் குறைந்தாலும், சலுகைகள் கிடைக்காது. இந்த அறிவிப்பின் ஊடாக சலுகைகள் கடன்கள் இல்லாது போயுள்ளது.

இதனால், நாங்கள் வறிய நாடாக மாறியுள்ளோம், எங்களுக்கு கடனை தாருங்கள் என இலங்கை அரசாங்கம் கேட்கின்றது. கடன்களை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியாக இது காணப்படுகின்றது. எனினும், நாட்டின் கௌரவத்திற்கு இதுவொரு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்" என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.