செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 24 பிப்ரவரி 2022 (10:46 IST)

அஜித்தின் வலிமை - சினிமா விமர்சனம்

நடிகர்கள்: அஜீத், ஹிமா குரேஷி, சுமித்ரா, கார்த்திகேயா, சுந்தர்; இசை: யுவன் ஷங்கர் ராஜா, ஜிப்ரான்; ஒளிப்பதிவு: நீரவ் ஷா; இயக்கம்: எச். வினோத்.
 
'நேர் கொண்ட பார்வை' படத்திற்குப் பிறகு அஜீத்தும் எச். வினோத்தும் இணைந்திருக்கும் படம் இது. அஜீத்தின் திரைப்படங்களிலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்றுகூடச் சொல்லலாம். எச். வினோத்தின் முந்தைய படங்களான 'சதுரங்க வேட்டை', 'தீரன்: அதிகாரம் ஒன்று', 'நேர்கொண்ட பார்வை' படங்கள் சிறப்பாக அமைந்திருந்ததும் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.
 
அர்ஜுன் (அஜீத்) ஒரு சிறப்பான காவல்துறை அதிகாரி. குற்றம்செய்பவர்களின் கையை உடைத்துவிட்டு, அவர்கள் குடும்பத்திற்கு பணம் உதவிசெய்யும் நல்ல மனம் படைத்தவர். ஆனால், அண்ணன் குடிகாரர். தம்பிக்கு வேலையில்லை. இந்தச் சூழலில் சென்னையில் பெரும் குற்றங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. சங்கிலி பறிப்பு சம்பவங்கள், போதைப் பொருள் தொடர்பான நிகழ்வுகள், கொலைகள் பெரும் எண்ணிக்கையில் நடக்கின்றன.
 
இந்தக் குற்றங்களைத் தடுக்கும் பொறுப்பு அர்ஜுனுக்கு வழங்கப்படுகிறது. மூன்று குற்றங்களையும் செய்வது ஒரே கும்பல் என்பதைக் கண்டுபிடிக்கிறார் அர்ஜுன். புலனாய்வு முக்கிய கட்டத்தை நெருங்கும்போது ஒரு திருப்பம். அர்ஜுனின் குடும்பமே பெரும் அபாயத்தில் சிக்குகிறது. அர்ஜுன் என்ன செய்கிறார் என்பது மீதிக் கதை.
 
படத்தின் துவக்கமே பரபரப்பாக அமைந்திருக்கிறது. பைக்குகளை வைத்து நடக்கும் குற்றங்களை முதல் காட்சியிலேயே விறுவிறுப்புடன் காட்சிப்படுத்தி அசரவைத்திருக்கிறார் இயக்குனர். இதற்கடுத்து, இந்தக் குற்றங்களைத் தடுக்க அர்ஜுன் என்ற காவல்துறை அதிகாரியாக அஜீத் வருகிறார் என்று சொல்லவும், படம் இன்னும் சூடுபிடிக்கிறது. பிறகு, பரபரப்பான பைக் துரத்தல் காட்சிகள், விறுவிறுப்பான ஆக்ஷன் என யோசிக்கவே நேரம் கொடுக்காமல் பரபரக்கிறது திரைக்கதை. இடைவேளையை நெருங்கும்போது ஒரு திருப்பம்.
 
அந்தத் திருப்பம் திரைக்கதைக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த திரைப்படத்திற்குமான திருப்பமாக அமைந்துவிடுகிறது. இடைவேளைக்குப் பிறகும் சண்டைக் காட்சிகளும் துரத்தல் காட்சிகளும் வந்தாலும், படம் தன் விறுவிறுப்பை இழந்துவிடுகிறது. படம் க்ளைமாக்ஸை நெருங்கும்போது, 80களில் வரும் திரைப்படங்களைப் போல கதாநாயகனின் குடும்பத்தையே ஒரு இடத்தில் வில்லன் கட்டித் தொங்கவிட்டு, கொல்லப்போவதாக மிரட்டுகிறார். கதாநாயகன் சரியான நேரத்தில் வந்து காப்பாற்றுகிறார். படம் பார்ப்பவர்களுக்கு, ஹீரோ ஒரு அரை மணி நேரம் முன்னால் வந்திருக்கலாமே என்று தோன்றுகிறது.
 
இதுபோல நாயகனின் குடும்பத்தை வில்லன் கட்டித் தொங்கவிடுவதும், கடைசி நேரத்தில் நாயகன் வந்து காப்பாற்றுவதும் எத்தனை படங்களில் வந்துவிட்டது? சுவற்றில் பார்கோடுகளை வரைந்து போதைப் பொருள் கடத்தும் வில்லன், இந்த விஷயத்தையும் புதுமையாக யோசித்திருக்கக்கூடாதா?
 
படத்தில் வில்லனின் செயல்பாடுகளையும் காவல்துறையின் புலனாய்வையும் அதிநவீனமாகக் காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குனர். ஆனால், ஒரு கட்டத்திற்குமேல் இந்தக் காட்சிகள் நம்பகத்தன்மையை இழந்துவிடுகின்றன. காவல்துறைக்குள் நடப்பதாக காட்டப்படும் சம்பவங்களும் குற்றங்களை விசாரிக்கும் விதமும் மிக மேம்போக்காக அமைந்திருக்கின்றன.

ஒரு காட்சியில், குற்றவாளிகளை கதாநாயகன் சிறையிலிருந்து எங்கோ அழைத்துச் செல்லும்போது வில்லனின் ஆட்கள் ஏகப்பட்ட பைக்குகளில் வந்து மீட்டுச் செல்கிறார்கள். கதாநாயகன்தான் சண்டைபோட்டு அதைத் தடுக்க முயல்கிறார், படுகாயமடைகிறார். முடிவில் அவரை துணை ஆணையர் பதவியிலிருந்து இறக்கம் செய்து ஆய்வாளராக மாற்றிவிடுகிறார்கள்.
 
ஆனால், வில்லன் கதாநாயகனையும் நம்மையும் விடுவதாக இல்லை. காவல்துறைவசம் உள்ள ஒரு டன் கொக்கைனை மீட்டுத்தந்தால்தான் நாயகனின் குடும்பத்தை விடுதலைசெய்வேன் என கொக்கரிக்கிறான். இதற்குப் பிறகு கதாநாயகன் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் நம்மை அயர்ச்சியடைய வைக்கின்றன.
 
இதுமட்டுமல்ல, படத்தில் ஏகப்பட்ட அம்சங்கள் மிகப் பழையதாகவும் யூகிக்கக்கூடியதாகவும் அமைந்திருக்கின்றன. இதனால், முதல் பாதி படத்தை ரசித்ததே மறந்துபோய்விடுகிறது.
 
அடிப்படையில் படம் நெடுக பைக் துரத்தல்களும் சண்டைக்காட்சிகளும்தான். அவற்றை இணைக்க ஒரு மெல்லிய, பழைய கதை சரடாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
 
அஜீத் அட்டகாசமாகவே இருக்கிறார். ஒரு சில சென்டிமென்ட் காட்சிகளைவிட்டுவிட்டால், அஜீத் ரசிகர்களுக்கு அவர் வரும் காட்சிகள் விருந்துதான். ஆனால், இந்தப் படத்திலும் எதிரிகள் குறித்து சுட்டிக்காட்டுகிறார் அஜீத். யார்தான் அந்த எதிரிகள்?
 
கதாநாயகியாக ஹிமா குரேஷி. நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பில்லை. தான் வரும் காட்சிகளை சிறப்பாக செய்திருக்கிறார். வில்லனாக வரும் கார்த்திகேயாவுக்கு இந்தப் படம் ஒரு நல்ல அறிமுகம்.
 
படத்தில் சண்டைக் காட்சிகளும் துரத்தல் காட்சிகளும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு இணையாக சிறப்பாக இருக்கிறது நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு.
 
"நாங்க வேற மாரி" பாடல் நன்றாக இருக்கிறது. ஆனால், படத்தின் நீளத்தை (மொத்தம் மூன்று மணி நேரம்) அதிகரித்ததைத் தவிர அதனால் வேறு எந்த விளைவும் இல்லை.
 
சண்டைக் காட்சிகள் அஜீத் ரசிகர்களை வெகுவாகக் கவரக்கூடும். ஆனால், சாதாரண சினிமா ரசிகர்களுக்கு படத்தின் இரண்டாம் பாதியை கடப்பது அவ்வளவு சுலபமாக இருக்காது.