செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 8 செப்டம்பர் 2021 (11:14 IST)

திருநங்கையை வைத்து நெஞ்சைத் தொடும் விளம்பரம் - ஒரு நம்பிக்கை முயற்சி!

பல்லாண்டு காலமாக தென் இந்தியாவில் செயல்பட்டு வரும் ஒரு பெரிய தங்க நகைக் கடை நிறுவனம், திருநங்கை ஒருவரை தன் விளம்பரத்தில் நடிக்க வைத்திருக்கிறது.
 
சுமார் 1 நிமிடம் 40 நொடிகள் ஓடக்கூடிய விளம்பர காணொளியில் முகத்தில் தாடி மீசையோடும், பெண் தன்மையோடு இருப்பதைப் போலவும் தோன்றும் அவர், கடைசியில் ஒரு நம்பிக்கை மிகுந்த அழகான மணப் பெண்ணாக வருகிறார்.
 
22 வயதான மீரா சிங்கானிய ரெஹானி இவ்விளம்பரத்தில் அந்த திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் உண்மையிலேயே ஒரு திருநங்கை என்பதுதான் இவ்விளம்பரத்தில் கூடுதல் சிறப்பு. இந்த விளம்பரம் கேரளாவைச் சேர்ந்த பீமா ஜுவல்லரிக்காக எடுக்கப்பட்டிருக்கிறது.
அவ்விளம்பரத்தில் திருநங்கையாக மாறுபவருக்கு, ஒவ்வொரு காலகட்டத்திலும், அவரை ஏற்றுக் கொண்டு அவர் குடும்பத்தினரிடமிருந்து அவருக்கு கிடைக்கும் அன்பை வெளிப்படுத்துகிறது. திருநங்கையாக மாறும் அவரின் ஒவ்வொரு கட்டத்திலும் அவருக்கு தங்க நகைகள் பரிசாகக் கொடுக்கப்படுகின்றன.
 
இந்த விளம்பரத்துக்கே 'அன்பைப் போல பரிசுத்தமானது' என்றே பெயரிடப்பட்டு இருக்கிறது. அக்காணொளியை இதுவரை யூடியூபில் சுமார் 10 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 14 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களும் கண்டிருக்கின்றனர். பலரிடமிருந்து இவ்விளம்பரத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்திருக்கின்றன.
 
டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படிக்கும், பகுதி நேர மாடலான மீரா முதலில் இந்த விளம்பரத்தைக் குறித்து கேட்ட போது சந்தேகப்பட்டதாகக் கூறுகிறார்.
 
"யாரோ ஒருவர் என் பாலின அடையாளத்தை வணிக ரீதியில் பயன்படுத்த நான் விரும்பவில்லை. இவ்விளம்பரத்தில் நான் திருநங்கையாக மாறும் படலமும் இருப்பதாகக் கூறிய போது நான் கொஞ்சம் பயந்தேன். திருநங்கையாக மாறுவதற்கு முன் நான் தாடி வைத்த ஆணாக காட்டப்பட்டேன்.
 
"நான் முழு கதையையும், இயக்குநரையும் குறித்து ஆராய்ந்த போது நான் இவ்விளம்பரத்துக்கு சம்மதித்தேன். இந்த விளம்பரத்தை செய்ததற்கு நான் மகிழ்கிறேன். இந்த விளம்பரத்தில் நடித்தது நான் என்னோடு இன்னும் நிம்மதியாக இருக்க உதவியது," என பிபிசியிடம் கூறினார் மீரா.
இந்தியாவில் 20 லட்ச திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. எல்லோரையும் போல திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கும் சட்டத்தின் கீழ் சம உரிமை உண்டு என கடந்த 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அவர்களை துன்புறுத்துவது மற்றும் கேலி செய்வது போன்ற சம்பவங்கள் இன்னமும் தொடர்கதைகளாகவே இருக்கின்றன.
 
திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் பெரும்பாலும் தங்கள் வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்படுகிறார்கள். பலரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆடியும் பாடியும் பிஅல்லது யாசகம் பெற்றோ, பாலியல் தொழிலில் ஈடுபட்டோ பிழைத்து வருகிறார்கள்.
 
கடந்த 2015ஆம் ஆண்டு, திருநங்கை மற்றும் திருநம்பிகள் தொடர்பான சமூக அவலங்கள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக கேரளாவில் மூன்றாம் பாலினத்தவர்களுக்காக தனியே கொள்கைகள் (Transgender Policy) வகுக்கப்பட்டன. ஆனால் இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்தில் காணப்படும் மூன்றாம் பாலினத்தவர் மீதான வெறுப்பு கேரளாவிலும் நிலவிக் கொண்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது
 
இந்த யோசனையை முன் வைத்த போது, தன் சக ஊழியர்கள் அச்சத்தோடு பார்த்ததாகக் கூறுகிறார் இவ்விளம்பரத்தின் சூத்திரதாரியான பீமா நகைக்கடை நிறுவனத்தின் இணைய சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் நவ்யா ராவ்.
 
"பீமா ஜுவல்லரியில் அதுவரையான எல்லாம் விளம்பரங்களும் ஆண் -பெண் திருமணங்களின் பெண்களே மணமகள்களாக இருந்தனர். இந்த புதிய விளம்பரத்தை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள், எப்படி எதிரிவினையாற்றுவார்கள் என கவலையோடு இருந்தோம்."
"எங்கள் கடைகள் பெரும்பாலும் கிராமபுறத்தில் தான் இருக்கின்றன. இந்த பாலின பிரச்னைகள் தொடர்பாக அங்கிருக்கும் மக்கள் எவ்வளவு தெரிந்து வைத்திருப்பார்கள் என்றும் எங்களுக்குத் தெரியவில்லை".
 
இத்தனை சந்தேகங்களுக்கு மத்தியிலும், ஒரு சமூக செய்தியை உரக்கச் சொல்லவும், ஒரு விவாதத்தைத் தொடங்கவும் விளம்பரத்தை வெளியிட பீமா நிறுவனம் தீர்மானித்தது.
 
இந்த விளம்பரம் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்பதையும் நவ்யா அறிந்திருந்தார். கடந்த ஆண்டு இரு மதத்தினரை வைத்து தனிஷ்க் வெளியிட்ட விளம்பரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியதும் ஓர் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. சமூக வலைதளங்களில் வலதுசாரியினரின் அழுத்தத்தால் அவ்விளம்பரம் பின்வாங்கப்பட்டது.
 
"இந்த விளம்பரம் ஆண்- பெண் இந்து திருமண முறையையே கேள்விக்கு உட்படுத்துவதால் பலத்த எதிர்வினைகள் வரலாம் என தான் எதிர்பார்த்ததாகக் கூறுகிறார்" மீரா.
 
ஆனால் எதார்த்தத்தில் இவ்விளம்பரம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாக நவ்யா கூறுகிறர்.
 
"இயற்கைக்குப் புறம்பான, சமூகத்தில் இருக்கக் கூடாத ஒரு விஷயத்துக்காக நாங்கள் குரல் கொடுப்பதாக சிலர் விமர்சித்துள்ளனர். ஆனால் நல்ல விமர்சனங்கள் மற்றும் பாராட்டுக்கள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. பல எல்.ஜி.பி.டி.க்யூ. சமூகத்தினரும் இவ்விளம்பரம் தங்கள் மனதைத் தொட்டுவிட்டதாகக் கூறுகின்றனர்" என்கிறார் நவ்யா.
 
இந்த விளம்பரம் முற்றிலும் புரட்சிகரமானது என கூறியுள்ளார் எழுத்தாளர் மற்றும் ஃபயர் வொர்க் என்கிற காணொலி தளத்தில் பிராண்ட் ஆலோசகராக இருக்கும் சுதா பிள்ளை.
 
"ஒரு மலையாள செய்தி தொலைக்காட்சி சேனலில் இந்த விளம்பரத்தைக் கண்டேன். அவர்கள் எந்த நகைகளையும் விற்கமாட்டார்கள் என்று கருதினேன், அது கவனத்தை ஈர்ப்பதற்கான விளம்பரம் என்றால், அதை அவர்கள் செய்துவிட்டார்கள்" என்கிறார் சுதா.
 
"எந்த ஒரு பாரம்பரிய நிறுவனமும் இப்படி ஒரு பெரிய ரிஸ்கை எடுத்து நான் பார்த்ததில்லை. அவர்கள் எடுத்த ரிஸ்க் மிகவும் புரட்சிகரமானது" என்கிறார் சுதா.
 
இன்ஸ்டாகிராமில் இவ்விளம்பரத்தை நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
 
தான் இந்த விளம்பரத்தை இணையத்தில் புகழ்ந்த போது அதை எதிர்த்து பல பழமைவாத இந்தியர்கள் எதிர்வினையாற்றுவார்கள், விமர்சனங்கள் எழும் என்று எதிர்பார்த்ததாகக் கூறுகிறார் சுதா.
 
"சில மாற்றுக் கருத்துகள் இருக்கின்றன. 95 சதவீத கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் நேர்மறையானவையாக இருந்தன, அதுவே மிகப் பெரிய ஊக்கமாக இருக்கிறது." என்கிறார் அவர்.