ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 மார்ச் 2023 (12:49 IST)

கொரிய நாடகங்கள் இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற இதுதான் காரணம்

K Drama
தென் கொரியாவை சேர்ந்த பெண் ஒருவர் தவறுதலாக வட கொரியாவின் எல்லைக்குள் நுழைந்துவிடுகிறார். அவரை வட கொரியாவை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் மீட்டு பத்திரமாக அவரது தாய்நாட்டுக்கே அனுப்பி வைக்கிறார்.

இரு நாட்டிலும் இருவரும் சேர்ந்து வாழ்வது கிட்டதட்ட சாத்தியமற்றது.

ஆனால் இருவருக்கும் இடையில் காதல் மலர்கிறது. அந்த காதலுக்கு இருநாட்டையும் பிரிக்கும் எல்லைக் கோடும் பல ஆண்டுகளாக இருந்து வரும் பகைமையும் பெரும் தடங்கலாக வந்து நிற்கிறது.

2019ஆம் ஆண்டு வெளியான ‘க்ராஷ் லேண்டிங் ஆன் யு’ என்ற கொரிய நாடகத்தின் கதைதான் இது.

சில சமயங்களில் சில தமிழ்ப் படங்களை காட்டிலும் இந்த கொரிய நாடகங்கள் இளம் தலைமுறையினரை அதிகம் சென்றடைகிறது.

சில கொரிய ட்ராமாக்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டதை அதற்கு உதாரணமாக சொல்லலாம். மென்னையான காதல், வண்ணமயமான காட்சிகள், சுவாரஸ்யமான கதைக்களம், உணர்ச்சிகரமான கதாபாத்திரம் என இந்த கொரிய படைப்புகள், இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக பெண்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு.

இந்தியாவில் முதல்முறையாக இந்த கொரியன் ட்ராமாக்கள் மணிப்பூரில் கால் பதித்தன. 2000ஆம் ஆண்டில் பிரிவினைவாத போராளிகள் பாலிவுட் சினிமாவை அங்கு தடை செய்த பிறகு கொரிய ட்ராமாக்கள் மணிப்பூரின் வழியாக இந்தியாவில் நுழைந்தன. அதன் பிறகு இந்தியா முழுவதும் அது பெரும் புகழ்பெற்றது.

அதேபோல கொரிய நாடகங்களுக்கான வரவேற்பு, பெருந்தொற்று காலத்தில் மேலும் அதிகரித்தது.

2020ஆம் ஆண்டில் பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டபோது முந்தைய வருடத்தை விட, கொரிய நாடகங்களுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை 370 சதவீதம் என்ற அளவில் அதிகரித்தது.

அதேபோல இந்த கொரிய நாடகங்கள் பல பெண்களை மையமாக வைத்து அவர்களுக்கான கதையாக எடுக்கப்படுவது பெண்கள் மத்தியில் இந்த நாடகங்கள் அதிக வரவேற்பை பெற்ற காரணங்களில் ஒன்று என்கிறார் ஃபிஃப்டி டூ என்ற வார இதழின் ஆசிரியரும் கொரிய நாடகங்களின் ரசிகையுமான சுப்ரியா நாயர்.

பாலிவுட் சினிமா என்று சொல்லக்கூடிய ஹிந்தி சினிமாக்களும் இந்த கொரிய நாடகங்களுடன் அதிகம் ஒத்துப்போவதாக கூறுகிறார் சுப்ரியா.

“பாலிவுட் மற்றும் கொரிய நாடகங்கள் இரண்டிலும் அதிகப்படியான உணர்ச்சிமிக்க காட்சிகள், காதல், அதிரடி என அனைத்தும் கலந்திருக்கும். பொதுவாக கொரிய நாடகங்களில் மகிழ்ச்சியான முடிவுகள் இருந்தாலும், அதற்குள் 'கதை' பல மேடு பள்ளங்களை சந்தித்து பார்வையாளர்களை தன் வசப்படுத்தி விடுகிறது” என்கிறார் சுப்ரியா.

தமிழில் நாடகங்களை விட, பல சமயங்களில் கொரிய படங்களை தழுவி திரைப்படங்கள் எடுக்கப்பட்டு அவை வெற்றியும் அடைந்துள்ளன. ஆனால் அதில் சில படங்கள் கொரிய படங்களின் தழுவல் என்று சொல்லப்படுவதே இல்லை என்பது ஒரு தனிக்கதை.

சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழில் வெளியான பிரின்ஸ் படத்தில் கல்லூரியில் படிக்கும் தனது மகள் அதீதமாக கொரிய நாடகங்களை பார்க்கிறார் என்று தந்தை ஒருவர் புகார் சொல்வார்.

நிஜத்திலும் பல கல்லூரி பெண்கள் கொரிய நாடகங்களை விரும்பி பார்க்கின்றனர். ஒரு கட்டத்தில் அது தொடர்பான பொருட்களையும் விரும்பி வாங்குகின்றனர்.
BBC

இதற்கு சாட்சியாகத்தான் இயர் ஃபோன், விதவிதமான பைகள், மேக் அப் பொருட்கள் என கொரிய நாடகங்களில் வருவதை போன்றே இருக்கும் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் அங்காங்கே முளைக்க தொடங்கியுள்ளன.

'ஹோம் டவுன் சா சா சா' என்கிற கொரிய நாடகம் போன்ற சில நாடகங்கள் தமிழ், மலையாளம் மற்றும் தெலுகு ரசிகர்களுக்கு அதிகம் பிடித்திருக்கலாம்.

“இதில் நகரத்தை சேர்ந்த ஒரு பெண் அழகான கிராமம் ஒன்றிற்கு செல்கிறார். அங்கு உள்ளூர் மக்களால் கவரப்பட்டு, அதிகப்படியான கவர்ச்சியற்ற ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார்,” என்கிறார் சுப்ரியா.

"சில சமயங்களில் பாலிவுட், கோலிவுட் படங்களில் வருவதை போன்று ஒரு பெண்ணை துரத்தித் துரத்தி காதல் செய்வது, காதலில் எல்லாம் இயல்பு என்பது போல சித்தரிப்பது போன்ற தவறான கதை களம், கொரிய நாடகங்களிலும் இடம் பெறுகின்றன," என்கிறார் அவர்.

ஆனால் கொரிய ட்ராமாக்களை பொறுத்தவரை காதம் மட்டுமல்ல காதலை தாண்டிய பெண்களின் பிற விருப்பு வெறுப்புகளையும் காட்டுவதால் இந்திய பெண்களுக்கு இதன் மீதான ஆர்வம் அதிகமாகவுள்ளது.

எடுத்துக்காட்டாக பாலிவுட்டில் ஆமிர் கான் நடிப்பில் தங்கல் திரைப்படமும், கொரிய நாடகமான 'வெயிட் லிஃப்டிங் ஃபேரி கிம் போக் ஜூ' ஆகிய இரண்டுமே 2016ஆம் ஆண்டில் வெளியானது. இரண்டுமே விளையாட்டு வீராங்கனைகள் பற்றிய கதை.

“டங்கல் திரைப்படம் ஆமிர்கானை குறித்தே சுழலும் கதையாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் வெயிட் லிஃப்டிங் ஃபேரி நாடகமோ முழுக்க முழுக்க ஒரு இளம் பளுதூக்குதல் வீராங்கனை குறித்ததாக இருக்கும். தங்கல் திரைப்படம் ஒரு தந்தையின் தியாகத்தை செல்வதாகவும், கடைசியில் அந்த ஆண் சொல்வதே நடக்கும் என்பது போலவே இருக்கும். ஆனால் வெயிட் லிஃப்டிங் ஃபேரி ஒரு இளம் வீராங்கனையின் போராட்டத்தை மையப்படுத்தி இருக்கும்.

இரு படங்களுமே வீராங்கனைகளின் அர்பணிப்பு, கடின உழைப்பு ஆகியவற்றை பேசினாலும் அது சொல்லப்பட்ட விதத்தில் பெரும் வித்தியாசமுண்டு” என்கிறார் சுப்ரியா நாயர்.

அதேபோல கொரிய நாடகங்கள் பொதுவாக 8 – 16 எபிசோட்டுகளை மட்டுமே கொண்டுள்ளது. கொரிய நாடகங்களின் மெல்லிய காதல் களத்தில் பெண்கள் நடத்தப்படும் விதமும் பார்வையாளர்களை ஈர்ப்பதாக உள்ளது.

ஒரு கட்டத்தில் ஒரே கதை ஒரே களம் என தேங்கி விடாமல் பல்வேறு கதைகளத்தில் நாடகங்கள் பயணிப்பதும் அதிக வரவேற்பை பெறுவதற்கான காரணமாகவும் உள்ளது.

கொரிய வரலாற்று நாடகங்கள் பல வற்றிலும் பெண்கள் முன்னணி கதாப்பாத்திரங்களாக இருப்பது வரவேற்கத்தக்க விஷயம் என்றும் கூறும் சுப்ரியா நாயர், இந்தியாவில் சாதி மதம் கடந்து பெண்கள் இயங்குவது பரவலாக காட்டப்படுவதில்லை என்கிறார்.

“கொரிய நாடகங்கள் பல பெண் எழுத்தாளர்களால் எழுதப்படுகிறது என்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம்.” என்கிறார் சுப்ரியா.

வட கொரியா மற்றும் தென் கொரியாவின் எல்லை கடந்த கதை களத்தை உருவாக்கி அதில் காதலை மலரச் செய்தது போல ஒரு சுவாரஸ்யமான கதை தொடர்ந்து வரவேற்பை பெற்றுக் கொண்டுதான் இருக்கும் என்கிறார் அவர்.