ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 25 மார்ச் 2022 (14:04 IST)

திருமண உறவில் கட்டாய பாலியல் உறவுக்கு உரிமை இல்லை - நீதிமன்றம் என்ன சொல்கிறது?

சமீபத்தில் திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, பெண்களுக்கு புது நம்பிக்கையை அளித்துள்ளது. கணவரின் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் மனைவி, அவர் மீது புகார் அளித்து, அதற்கு நீதி பெற முடியும் என்பதை கர்நாடகா நீதிமன்றம் அளித்த தீர்ப்பு காட்டுகிறது.
 
இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் உள்ள பாலியல் வன்கொடுமை பிரிவை குறிப்பிட்டு நீதிபதி எம். நாகபிரசன்னா இந்தத் தீர்ப்பை அளித்துள்ளார். அதில், சமத்துவத்திற்கான உரிமையை கணவர் மீறுவது குறிப்பிடப்பட்டுள்ளது (14 ஆம் சட்டப்பிரிவு). மேலும், இது (சட்டப்பிரிவு 15-1 குறிப்பிட்ட) பாலினம் அடிப்படையில் பாகுபாடு காட்ட இடமளிக்கிறது.
 
பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு குரல் கொடுக்கும் ஆர்வலர்களும், சட்ட வல்லுநர்களும், இந்த தீர்ப்பை சுவாரஸ்யமானது என்றும், முற்போக்காக இருப்பதாகவும் விவரித்திருக்கின்றனர். ஆயினும், கணவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்படுவதில் இருந்து விலக்கு அளித்திருப்பதில் அவர்களுக்கு கருத்து வேறுபாடு உண்டு.
 
"ஓர் ஆண் என்பவர் ஆண் தான்; ஒரு செயல் என்பது செயலே; பாலியல் வன்கொடுமை என்பது பாலியல் வன்கொடுமையே. அது ஆண் என்ற 'கணவரால்', பெண் என்ற 'மனைவி' மீது நடத்தப்பட்டாலும் அது பாலியல் வன்கொடுமையே", என்று நீதிபதி நாகபிரசன்னா குறிப்பிட்டுள்ளார்.
"இது திருமணமான பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பெரும் பங்கு வகிக்கும். அவர்கள் தங்களின் கணவருடன் நல்ல நிலைமையில் இருப்பார்கள்", என்று பிபிசியிடம் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறுகிறார்.
 
"அரசியலைமைப்புக்கு சவால் விடுக்கும் வகையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் எந்த வழக்கு நிலுவையில் இருந்தாலும் , இந்திய தண்டணைச் சட்டத்தில் இதுவரை கணவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் விலக்கை இந்த தீர்ப்பு கரைத்திருக்கிறது", என்று பிபிசி இந்தியிடம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக இருக்கும் ஜெய்னா கோத்தாரி கூறுகிறார்.
 
திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமையை குற்றமாக்குவது தொடர்பான இதே விவகாரத்தில் தில்லி உயர் நீதிமன்றம் தனது உத்தரவை மார்ச் 2ஆம் தேதியன்று ஒத்திவைத்துள்ளது. இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை எடுக்க மிகவும் தயக்கம் காட்டிய மத்திய அரசையும் கண்டித்துள்ளது. பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கருத்துக்காக இன்னும் காத்திருக்கும் நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது.
 
ஆனால், முதலில், நீதிபதி நாகபிரசன்னாவை இந்த 90 பக்க தீர்ப்பை எழுத வைத்த வழக்கு என்ன என்பதை பார்ப்போம். இந்த வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
 
வழக்கின் பின்னணி என்ன?
காவல்துறையிடம் அளித்த புகாரில், ஒடிசாவை சேர்ந்த பெண் ஒருவர், தான் 12ஆம் வகுப்பு வரை படித்ததாக கூறியுள்ளார். அவருடைய தாய் அவரை ஹ்ருஷிகேஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார் `` என் வாழ்க்கை (நரகமாக) மாறிய தேதியை நான் நினைவில் கொள்ள விரும்பவில்லை" என்று அவர் கூறுகிறார்.
 
``என் கணவர் எங்களுக்கு தெரிந்த ஒவ்வொரு நபரிடமும், வெட்கமின்றி, நான் பாலியல் உறவுக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறினார். அதே சமயத்தில், என்னை பாலியல் அடிமை போல நடத்தினார்" என்று அவர் கூறியிருந்தார்.
 
தனது மனைவி தன்னுடன் பாலியல் உறவு கொள்ள மறுத்ததாகக் கூறி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைந்துள்ள 'வனிதா சகாயவாணி' என்ற அமைப்பிடம், அவரது கணவர் பொய் புகார் ஒன்றை அளித்தார். பிங்கி' தனக்கான ஒரு வழக்கறிஞரைப் பிடிக்க உறவினரின் உதவியை நாடினார். அந்த வழக்கறிஞர் தனது மனைவியுடன் அவருக்கு உதவினார்.
 
அவரது ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை கைப்பற்ற வேண்டும் என்று அவரது கணவனும், அவரது பெற்றோரும் விரும்பினர். மேலும் அவருடன் செல்ல வேண்டாம் என்று மகளையும் வற்புறுத்தினார்கள். பிங்கிக்கு அவரது மாமியாருடன் ஏற்பட்ட சண்டையின் போதுதான், ​​​​அவரது கணவர் அவரது கைபேசியை மட்டுமல்ல, அவரது விரல்களையும் உடைத்துள்ளார். இந்த சம்பவம் காரணமாக, அக்கம்பக்கத்தினர் வெளியே வந்தனர் இறுதியாக அவர் தனது மகளை தன்னுடன் அழைத்துச் சென்றார்.
 
காவல்துறையினருக்கு அவர் அளித்த புகாரில், "எனக்கு திருமணம் நடந்த நாள் முதல், நான் அவருக்கு பாலியல் அடிமையாகிவிட்டேன். பாலியல் சார்ந்த திரைப்படங்களில் வரும் காட்சிகளைப் பிரபலிக்கும் வகையில், நான் செயற்கையான பாலியல் உறவு வைத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தப்பட்டேன்; நான் கர்ப்பமானபோதும், அவர் பாலியல் உறவு வைத்துக்கொள்ளுவதில் இருந்து என்னை விடவில்லை. கருவில் என் குழந்தை கலைந்தபோது கூட, அவர் தொடர்ந்து பாலியல் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். அப்போதுகூட விட்டுவைக்க அவர் நினைக்கவில்லை" என்று கூறுகிறார்.
 
`என் கணவர் முற்றிலும் மனிதாபிமானமற்றவர். அவர் என் மகளுக்கு முன்பாக, இயற்கைக்கு மாறாக பாலியல் உறவு கொள்ளும்படி என்னை வற்புறுத்தினார். பல சந்தர்ப்பங்களில் அவர் அவளை அடித்து என்னுடன் வலுக்கட்டாயமாக பாலியல் உறவு கொண்டார். உலகில் எந்தப் பெண்ணும் வெளிப்படுத்த விரும்பாத எண்ணற்ற பாலியல் துன்புறுத்தல்கள் நடந்துள்ளன. புகாரில் உள்ள எனது பெயரையும் என் மகளின் பெயரையும் வெளியிடாமல் என் கணவரைத் தண்டிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், "என்று அவர் அளித்த புகார், அந்த தீர்ப்பில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
 
``என் கணவர் என் மகளை பள்ளியிலிருந்து சீக்கிரம் வரவழைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என்பதை அறிந்து நான் மிகவும் வெளியில் சொல்லமுடியாத வேதனை அடைந்தேன். மேலும் நானும் என் மகளும் படும் துன்பங்களை எந்த மகளும் தாயும் அனுபவிக்க விரும்பவில்லை'' என்று அந்த பெண் கூறுகிறார்.
 
விசாரணை எப்படி நடந்தது?
 
2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி, 506, 498ஏ 323, 377 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (POCSO) பிரிவு 10-ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த காவல்துறை, முக்கியமாக, ஐ.பி.சி பிரிவு 376 ஐ சேர்த்தனர். அதாவது கணவருக்கு எதிராக மனைவி அளித்த பாலியல் வன்கொடுமை புகார் சேர்க்கப்பட்டது.
 
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபோது, ​​செஷன்ஸ் நீதிமன்றமான போக்சோ சிறப்பு நீதிமன்றம், பாலியல் வன்கொடுமை விதிகளையும் உள்ளடக்கிய குற்றச்சாட்டுகளை உருவாக்கியது. இந்த நிலையில்தான் ஹிருஷிகேஷ் கீழமை நீதிமன்றத்தில் வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
 
நீதிபதி நாகபிரசன்னா தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது: மனுதாரரின் மிருகத்தனமான செயல்களை மனைவி சகித்துக்கொள்ளும் வகையில் புகாரின் உள்ளடக்கம் உள்ளது. இது எரிமலை வெடிப்பதைப் போன்றது. புகாரில் கூறப்பட்டுள்ள உண்மைகளின் அடிப்படையில், ஐபிசியின் 376-ஆவது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களை செஷன்ஸ் நீதிபதி உணர்ந்து குற்றச்சாட்டைப் பதிவு செய்ததில் எந்தத் தவறும் இல்லை.''
 
மேலும், " 9 வயதான தனது மகளின் முன்னிலையில், மனைவியுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட மனுதாரர் எவ்வளவு கொடூரமாக நடத்து கொண்டிருக்கிறார். மகளின் அந்தரங்க உறுப்புகளையும் அவர் தொட்டு, பாலியல் துன்புறுத்தல் செய்து இருக்கிறார்.
 
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கு நாட்டையே உலுக்கிய பிறகு அமைக்கப்பட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையிலான கமிட்டி பரிந்துரைத்த திருத்தங்களை, இந்த தீர்ப்பு சுட்டிக்காட்டுகிறது.
 
நீதிபதி நாகபிரசன்னா , அந்த குழுவின் பரிந்துரைக்கு முன் சட்டத்தில் என்ன இருந்தது மற்றும் பாலியல் வன்கொடுமை எவ்வாறு வரையறுக்கப்பட்டது என்பதை விரிவாக சுட்டிக்காட்டினார். ஆனால், மற்ற சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டபோது திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமை விவகாரம் திருத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
தீர்ப்பு குறித்து நிலவும் கருத்துகள் என்ன?
"அவர் சட்டத்தை அரசியலமைப்பு கண்ணோட்டத்தில் விளக்கியுள்ளார். அவர் பாலின சமத்துவத்தின் அடிப்படையில் சரியாகப் பார்த்தார். இது பெரிய அளவில், குடும்பத்தில் பெண்களுக்கு சிறந்த இடத்தை நிச்சயம் தரும் '' என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் கீதா தேவி பாப்பண்ணா பிபிசியிடம் தெரிவித்தார்.
 
"தன்னைக் காட்டிலும் தாழ்ந்த பெண்ணாகக் கருதாமல், பெண்களை துணையாகக் கருதுவதுதான் சரியான தீர்ப்பு'' என்கிறார் பாப்பண்ணா.
 
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கீதா ராமசேஷன் பிபிசியிடம் கூறியதாவது: `பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் இருந்து கணவருக்கு விலக்கு அளிக்கும் சட்ட விதியை இந்தத் தீர்ப்பு ரத்து செய்யவில்லை. இந்த விதி ரத்து செய்யப்படாவிட்டால், இது சட்டப் புத்தகத்தில் இருக்கும். அதை அரசு ரத்து செய்ய வேண்டும் '' என்றார்.
 
மற்ற அனைத்து வகையிலும், இந்த தீர்ப்பு ஒரு படி மேலே இருக்கிறது என்று ராமசேஷன் கூறுகிறார். `பாலியல் வன்கொடுமை என்பது குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் குடும்ப வன்முறையும் கூட. வன்முறை இருக்குமானால், அது பாலியல் வன்கொடுமைக்கு சமமானதே. இந்த வகையில், இது ஒரு முன்னேற்றம்.''
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) முக்கிய உறுப்பினர் கவிதா கிருஷ்ணன், "இந்தத் தீர்ப்பு நேர்மறையான ஒன்று ' என்று குறிப்பிட்டார். ஆனால், ``தீர்ப்பு பலவீனமான வாதத்தை முன்வைத்ததாக அவர் நினைக்கிறார். இயற்கைக்கு மாறான பாலியல் உறவு, ஆபாசப் படங்கள் போன்றவற்றின் மீதான தார்மீக சீற்றத்தை, பெண்ணின் சம்மதம் இல்லாமல் நடந்திருப்பதன் மீது கவனம் செலுத்த வேண்டும். இது உண்மையில் பின்தங்கிய நிலைப்பாடே" என்று அவர் கூறுகிறார்.
 
தொடர்ந்து பேசிய அவர், "தீர்ப்பில் பயன்படுத்தப்பட்ட மொழி மிகவும் எதிர்மறையானது. கணவன் காமமாக இருப்பது, மனைவியின் விரல்களை உடைப்பது, குடும்ப வன்முறை மற்றும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவுக்கு அதிக இடம் அளிப்பது மற்றும் விலங்கு போன்ற நடத்தை தொடர்பான குறிப்புகள் உள்ளன. விலங்குகளுக்கு மனைவிகள் இல்லை, அவற்றை அடிப்பதும் இல்லை" என்று தெரிவித்தார்.
 
இருப்பினும், இந்த தீர்ப்பு டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு காத்திருக்காமல் மற்ற பாலியல் வன்முறை வழக்குகளுக்கு ஒரு வழியை ஏற்படுத்தி இருக்கிறது என்றும், பெண்கள் தங்கள் திருமணத்திற்குள் பாலியல் வன்முறை வழக்குகளை பதிவு செய்யலாம் என்றும் கோத்தாரி கருதுகிறார்.
 
இது எதிர்காலத்தில் எத்தகைய திருப்பத்தை ஏற்படுத்தும்?
"ஐபிசியில் பாலியல் வன்கொடுமை சட்டத்தில் இருந்து கணவர்களுக்கு விலக்கு அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் செல்லுபடியை டெல்லி உயர் நீதிமன்றம் எடுத்தாலும், உச்ச நீதிமன்றத்தால் இந்த விவகாரம் தீர்மானிக்கப்படும்" என்று ஜெய்சிங் மற்றும் கோத்தாரி இருவரும் கருதுகின்றனர்.
 
"டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் அணுகுமுறையைப் பார்க்கும்போது, ​​திருமண உறவில் பாலியல் வன்கொடுமையை குற்றமாக்குவதில் ஆர்வம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அது சவாலாக இருக்கலாம்,'' என்கிறார் ஜெய்சிங். நீதிபதி நாகபிரசன்னா, சில மாதங்களுக்கு முன்பு, கருணை அடிப்படையில், மகனைப் போலவே அரசு ஊழியரின் திருமணமான மகளும் வேலை பெற தகுதி பெற்றவர் என்று தீர்ப்பளித்த நீதிபதி ஆவார்.