ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதல்கள் மேரியோபோல் நகரையே கிட்டத்தட்ட தகர்த்திருக்கிறது. அப்போது, பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள், சோவியத் கால கட்டடத்திற்கு அருகே உள்ள அரங்கத்தில் தஞ்சம் புகுந்தனர்.
கடந்த புதன்கிழமையன்று அங்கு குண்டு வெடித்தது. சில நொடிகளில், அந்த கட்டடம் இரண்டாக பிளந்து, சுக்குநூறாகி விட்டது. அதில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை. ஆனால், குண்டு வெடித்தபோது அங்கு என்ன நடந்தது என்பது குறித்து பிபிசியிடம் அந்த தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் முதன்முறையாக விவரித்தனர்.
காலை முழுவதும், வான் பரப்பை ரஷ்யா விமானங்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
27 வயதான ஆசிரியர் மரியா ரடியோநோவ், கடந்த 10 நாட்களாக அந்த அரங்கில் வசித்தார். இவர் தனது இரண்டு நாய்களுடன் தான் வசித்து வந்த ஒன்பதாம் மாடி வீட்டில் இருந்து இங்கு தப்பி வந்திருக்கிறார். கட்டடத்தின் பின்புறத்தில் உள்ள அரங்கு (ஆடிட்டோரியம்) அருகே அவர்கள் முகாமிட்டு இருந்தனர்.
தனது நாய்களுக்காக வெளியில் உள்ள சமையலறையில் இருந்து சில மீன் துண்டுகளை வாங்கி வந்தார். ஆனால், அதன் பிறகுதான் குடிக்க தண்ணீர் இல்லை என்பதை உணர்ந்தார். அதனால், காலை பத்து மணியளவில், அவரது உடைமைகளுடன் நாய்களை கட்டிவிட்டு, தண்ணீர் வழங்கும் வரிசையில் நிற்க நுழைவாயிலுக்கு சென்றார்.
அப்போதுதான், குண்டு வெடித்தது. சத்தம் பெரிய அளவில் கேட்டது. கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது.
பின்னால் இருந்து வந்தவர், அவரை சுவரோரம் தள்ளி காப்பாற்றினார். குண்டுவெடித்தபோது தனது காதில் கடும் வலியை உணர்ந்தார் மரியா. அந்த பெரும் சத்தத்தில், அவரது காது ஜவ்வு கிழிந்து விட்டது என்றே அவர் நினைத்தார். மக்களின் அலறலைக் கேட்ட பிறகே, தனது காது கடுமையாக பாதிக்கப்படவில்லை என்பதை உணர்ந்தார். கதறல்கள் எங்கும் கேட்டன.
குண்டு வெடிப்பு நடந்த தாக்குதலில், ஜன்னல்களுக்கு வெளியே மற்றொருவர் தள்ளப்பட்டார். அவர் தரையில் விழுந்து, அவர் முகம் முழுவதும் உடைந்த கண்ணாடிகளால் மூடப்பட்டன. தனது தலையில் காயப்படைந்த பெண் ஒருவர், அவருக்கு உதவ முற்பட்டார். மேரியோபோல் நகரில் யுக்ரேனிய செஞ்சிலுவைச் சங்க தன்னார்வலராக இருந்தார். அவர் தன் நிலைக்கு வந்த பிறகு, அவரை தடுத்து நிறுத்தினார்.
ஐந்து வயது சிறுவனின் கதறல்
"இருங்கள், அவரை தொட வேண்டாம். நான் என் முதலுதவி பெட்டியை எடுத்து வந்து, இருவருக்கும் உதவுகிறேன்," என்று கூறினேன். ஆனால், அவரது பெட்டி அரங்குக்கு உள்ளே இருந்தது. அந்த பகுதி சிதைந்து போனது.
"அங்கு வெறும் கற்களே இருந்தன. உள்ளே நுழைவது சாத்தியமற்றதாக இருந்தது. இரண்டு மணி நேரம் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. நான் அங்கேயே இருந்தேன். நான் அதிர்ச்சியில் இருந்தேன்," என்கிறார்.
27 வயதான வ்லாடிஸ்லாவ் தனது முழு பெயரை பயன்படுத்த விரும்பவில்லை.
அவரும் அன்று காலை அந்த கட்டடத்தை சுற்றிச் சுற்றி வந்தார். அவருக்கு அங்கு சில நண்பர்கள் இருந்தார்கள். அவர்களை காண சென்றிருந்தார். வெடிகுண்டு தாக்குதல் நடந்தபோது, அவரும் நுழைவாயில் அருகே இருந்தார். மற்றவர்களுடன் அவரும் அடித்தளத்திற்கு ஓடினார். 10 நிமிடங்கள் கழித்து, கட்டடம் தீப்பற்றி ஏறிவதை பார்த்தார். பெரும் கூச்சலும் குழப்பமும் நிறைந்திருந்தது.
"கொடூரமான விஷயங்கள் நடந்து கொண்டிருந்தனர்" என்று அவர் கூறுகிறார்.
மக்கள் ரத்தம் சிந்தி கொண்டிருப்பதை வ்லாடிஸ்லாவ் பார்த்தார். சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது.
"ஒரு தாய் கற்களில் காணாமல் போன தமது குழந்தையை தேடிக்கொண்டிருந்தார். அங்கே "நான் சாக விரும்பவில்லை" ஐந்து வயது குழந்தை கதறிக்கொண்டிருந்தது. அதைப்பார்த்து என் இதயம் நொறுங்கி போனது".
அன்று காலை அரங்கு மீது ஒரே ஒரு குண்டு விழுந்திருக்கலாம். அதுவே அழிவை ஏற்படுத்தி இருக்கலாம் என்று பிபிசிக்காக மெக்கின்செ உளவுத்துறை சேவையின் ஆய்வு தெரிவித்துள்ளது.
"கட்டடத்தின் மையப்பகுதியில் ஏவுகணை தாக்கியுள்ளதாக தெரிகிறது. இது விமானத்தில் இருந்து செலுத்தப்படும் கே.ஏ.பி -500 எல் அல்லது அதற்கு ஈடான வகையாக இருக்கலாம்", என்று பிரிட்டனைச் சேர்ந்த குழு கூறுகிறது.
இந்த உடனடி தாக்குதலுக்காக தயார் செய்யப்பட்டது என்று குண்டுவெடிப்பின் தன்மை குறிக்கிறது. அதனால்தான் கீழ்த்தளத்திற்கு செல்ல முடியவில்லை".
இந்த தாக்குதலின் துல்லியத்தன்மையைப் பார்க்கும்போது, திரையரங்கு ஏற்கனவே குறிவைக்கப்பட்ட தளமாக இருக்கக்கூடும். இந்த தாக்குதல் நடப்பதற்கு சில நாட்கள் முன், அதன் செயற்கைக்கோள் படத்தை மக்சார் என்ற அமெரிக்கா நிறுவனம் வெளிட்டுள்ளது. அங்கு ரஷ்ய மொழியில் 'குழந்தைகள்' என்ற வார்த்தை புல்வெளியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது விமானத்தில் இருந்து பார்த்தாலும், துல்லியமாக தெரியும்.
இந்த அரங்கம் தாக்கப்பட்டதை ரஷ்யா மறுக்கிறது. யுக்ரேனில் உள்ள மக்கள் வாழும் இடங்களை ரஷ்ய படையினர் தாக்குவதாக வெளிவரும் தகவலை அந்த நாடு மறுத்துள்ளது. இருப்பினும் எண்ணற்ற குடியிருப்பு கட்டடங்கள் மீதான தாக்குதல்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ளன. மேலும் இதுப்போன்ற தாக்குதல்கள் வேறெங்கும் நடந்ததை விட மேரியோபோலில்தான் கொடூரமாக நடந்துள்ளன.
மேரியோபோலைச் சேர்ந்த புலனாய்வு பத்திரிகையாளர் அண்டிரை மருசோவ், இந்த தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திரையரங்கிற்குச் சென்றிருந்தார்.
"இது பல பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முக்கியமான தங்குமிடம் என்பது அனைவருக்கும் தெரியும்" என்கிறார். இவர் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் யுக்ரைன் என்ற ஆதரவு குழுவின் முன்னாள் தலைவரான மருசோவ் இருந்தவர். "அங்கு பொதுமக்கள் மட்டுமே இருந்தனர்." என்கிறார்.
தாக்குதல் நடந்த புதன்கிழமையன்று,, அவர் நகரத்தை ஆய்வு செய்ய காலை 06:00 மணிக்கு அந்த கட்டிடத்தின் உச்சிக்கு சென்றிருந்தார். விமானங்களின் சத்தம் அப்போதும் காற்றில் ஒலித்துக் கொண்டிருந்தன. ரஷ்ய விமானங்கள் திரையரங்கு இருந்த பகுதியில், அசோவ் கடல் பகுதியில் காலை முழுவதும் ஷெல்களும் குண்டுவீச்சுகளும் நடத்தியதாக அவர் கூறுகிறார்.
"நகரத்தின் மையப்பகுதி தீ மற்றும் தொடர்ச்சியான வெடிப்புகளால் மூடப்பட்டிருப்பதை நான் கண்டேன்," என்று அவர் கூறுகிறார்.
அன்று காலை திரையரங்குக்கு அருகில் ராணுவ விமானங்கள் "வட்டமடித்தபடி இருந்தன". "அவை வேறு எங்காவது குண்டுகளை வீசியிருக்க வேண்டும்" என்பதை மரியா நினைவுகூர்ந்தார். ஆனால், அந்தப் பகுதியில் ராணுவ விமானங்கள் பறப்பது அசாதாரணமானது அல்ல. அத்தகைய விமானங்களின் ஒலியை அவர் வழக்கமாகவே கேட்பதுண்டு.
தாக்குதல் குறித்து இன்னும் பல விவரங்கள் தெளிவாக கிடைக்கவில்லை. நாடக அரங்கில் 1,000 பேர் வரை தஞ்சம் அடைந்ததாகக் கருதப்படுகிறது. கட்டடத்தில் மறைந்திருந்த மற்றவர்களின் கூற்றுப்படி, சிலர் அதன் நிலத்தடி பதுங்குக் குழி அல்லது வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க பயன்படுத்தப்படும் பதுங்குமிடத்தில் மறைந்திருப்பதாகத் தோன்றியது. வேறு சிலர் நெரிசலான தாழ்வார நிலத்தடி தளங்களில் வசிப்பதை மரியா கண்டார்.
பிபிசி இந்த நபர்களுடன் பேசியதில் இருந்து, அரங்கத்தின் வளாகம், அதன் தாழ்வாரங்கள் மற்றும் மைதானங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருந்திருக்க வேண்டும் என்ற ஒரு விஷயம் தெளிவாகிறது.
தாக்குதல் நடந்த மறுநாள், 130 பேர் மீட்கப்பட்டதாக நகர கவுன்சில் கூறியது. பலர் உயிர் பிழைத்திருக்கலாம் என்று மற்றொரு செய்தியும் வந்தது. ஆனால் அதன்பிறகு எந்த தகவலும் இல்லை. இந்த நகரம் மிகவும் நம்பிக்கையற்ற நிலையில் உள்ளது. அங்கு எத்தனை பேர் இருந்தனர்? எத்தனை பேர் உயிர் பிழைத்தார்கள் என்பதற்கான தெளிவான எண்ணிக்கை இருக்கவில்லை.
திரையரங்கிற்குள் இருந்த நாட்களில், மரியாவின் வீடாகவே அந்த பகுதி இருந்தது. ஒரு ஆடிட்டோரியம் ஹாலில் சரவிளக்குகள் ஒளிரூட்டப்பட்டன. அவரது நாய்கள் குறித்து சில புகார்கள் எழுந்ததால், அவர் மேடைக்கு அருகே இருந்த சிறிய பகுதியில் வசித்தார். அங்கு சுமார் 30 பேர் இருந்தனர். வெடிகுண்டு தாக்கியதில் அவர்கள் அனைவரும் இறந்திருக்க வேண்டும் என்று தாம் நம்புவதாக அவர் கூறுகிறார். நல்லவேளையாக சம்பவம் நடந்தபோது வெளியே வந்திருக்கிறார்.
குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு அவரால் அவரது நாய்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை, அது விரக்தியின் ஒரு தருணம்: "எனது நாய்கள் எல்லாவற்றையும் விட எனக்கு முக்கியமானவை," என்கிறார் அவர்.
பலர் கட்டடத்திலிருந்து வெளியே வருவதை பார்த்ததாக விளாடிஸ்லாவ் கூறுகிறார், மரியாவும் அதைப் பார்த்தார்.
மேரியோபோல் நகரை விட்டு மேற்கொண்ட பயணம்
"சிலர் தங்கள் உடைமைகளுடன் இருந்தனர். என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை, அந்தப் பகுதி இன்னும் ஷெல் தாக்குதலுக்கு உள்ளானது," என்று அவர் கூறினார். நாடக அரங்கிற்கு வெளியே வெளியே நின்று அவரும் சேதத்தைப் பார்த்தார். வேறொரு தங்குமிடம் தேடுவதில் அர்த்தமில்லை என்பதை அவர் உணர்ந்தார். சில மணிநேரங்கள் திகைத்திருந்தார். , இறுதியில் அவர் வெளியேறினார்.
அந்த நகரத்தில் இருந்து செல்லும் வாகனங்களை நிறுத்தி ஏற அவர் முயற்சி செய்தார். "மக்கள் பீதியில் இருந்தனர்; யாரும் என்னை காரில் ஏற்றிக்கொள்ளவில்லை", என்ற அவர் பின் கடற்கரையோரம் நடக்க தொடங்கியதாக தெரிவித்தார்.
"நான் மேரியோபோலை விட்டு வெளியேற வேண்டும்." இது மட்டுமே அவரது மனதில் ஓடிக் கொண்டிருந்த வரி.
முதலில் அவர் பிஷிசாங்கா என்ற கிராமத்திற்கு சென்றார். "நான் அங்கு ஒரு பெண்மணியை சந்தித்தேன். அவர் நான் நலமாக இருக்கிறேனா என்று கேட்டார். நான் அழத்தொடங்கிவிட்டேன்," என்றார்.
அவருக்கு தேநீரும், உணவும் அளிக்கப்பட்டது. அன்றைய இரவை நகர்த்தவும் இடம் அளிக்கப்பட்டது. அடுத்த நாள் காலை,அவர் மெலிகைனே என்ற இடத்தை அடையும் வரை நடக்க தொடங்கினார். ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர் இரவு 8 மணியளவில் நடப்பதை நிறுத்தினார். ஒரு நாள் கழித்து அவர் யால்டா என்ற பகுதியை அடைந்தார். அடுத்த நாள், பெர்டெயன்ஸ் என்ற பகுதியை அடைந்தார். "நான் எல்லா நேரமும் நடந்தேன்", என்றார்.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களில் மிகவும் மோசமான பகுதியை மேரியோபோல் கண்டுள்ளது. அங்கு படையெடுத்த ரஷ்ய துருப்புகள் அந்த நகரத்தை சுற்றி வளைத்தன. அவர்கள் வான்வழியாகவும், நில வழியாகவும், சமீப காலமாக கடல் வழியாகவும் இடைவிடாமல் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தாக்குதல்களை நடத்தினர். கிட்டதட்ட ஒரு லட்சம் பேர் இன்னும் சிக்கியுள்ளனர். அங்கு மின்சாரம் இல்லை; எரிவாயு இல்லை; தண்ணீர் இல்லை.
மரியா தனது வீட்டை விட்டு அரங்குகிற்கு செல்லும் போது, இவரது பாட்டி அவருடன் வர மறுத்தார். "இது என்னுடைய குடியிருப்பு; என்னுடைய வீடு; நான் இங்குதான் உயிரை விடுவேன்," என்றார் அவர்.
இன்னும் தனது பாட்டி உயிருடன் இருக்கிறார் என்பதை கேட்க மரியா இப்போதும் காத்துக்கொண்டிருக்கிறார்.