1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: சனி, 29 ஜூலை 2023 (21:45 IST)

யூ டியூப் பார்த்து 'ஆதி மனித வாழ்க்கை' வாழ காட்டுக்குள் சென்ற சகோதரிகள் பிணமாக மீட்பு - நடந்தது என்ன?

Forest
மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் எப்படி வாழ்வது என்று யூட்யூப் வீடியோக்களை அவர்கள் பார்த்திருந்ததாக அவர்களின் சகோதரி ஜாரா தனது பேட்டியில் தெரிவித்திருந்தார்.
 
அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்திற்கு உட்பட்ட ஸ்பிர்ங்ஸ் பகுதியில் வாழ்ந்த ஓர் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு வாழ்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் புறவாழ்வைக் கைவிட்டு காட்டுக்குள் வாழ முயன்று உயிரிழந்துள்ளனர்.
 
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தொலைதூர மலைப் பிரதேசத்தில் உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்ப உறுப்பினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
புறவாழ்க்கையை முற்றிலுமாகக் கைவிட்டு மாறுபட்ட வாழ்க்கை முறை ஒன்றைப் பின்பற்ற அவர்கள் முயன்றதாகத் தெரிய வந்துள்ளது.
 
இயற்கையோடு இணைந்து காட்டுக்கு உள்ளே அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பிய அவர்கள் ராக்கி மலைத்தொடரில் இருந்த தொலைதூர மலைப் பிரதேசத்திற்குச் சென்றனர்.
 
ஆனால் அங்கு நிலவியல் சூழலை எதிர்கொண்டு பிழைத்திருக்க முடியாமல் மூவரும் உயிரிழந்துள்ளனர்.
 
ரெபெக்கா வான்ஸ், அவரது 14 வயது மகன், மற்றும் ரெபெக்காவின் சகோதரி கிறிஸ்டின் ஆகிய மூவரும் அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் ஸ்பிரிங்ஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள். தொலைதூர மலை முகாம் ஒன்றில் இவர்களின் சிதைந்த உடற்கூறுகள் அண்மையில் கண்டெடுக்கப்பட்டன.
 
கடும் பனியின் தாக்கம் அல்லது பட்டினியின் காரணமாக அவர்கள் இறந்திருக்கலாம் என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
கடந்த கோடை காலத்தில் அங்கு முகாமிட்ட இந்த மூவரும் குளிர்காலத்தில் இறந்ததாகத் தெரிகிறது.
 
 
இதன் காரணமாக அவரும், அவரது மகன் மற்றும் சகோதரி கிறிஸ்டினும் இந்தப் புறவாழ்க்கையை விட்டு விலகி தனியாக வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துள்ளார். இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்கு சில தினங்களுக்கு முன் அளித்த பேட்டியில் கூறியிருந்தார் ரெபேக்காவின் மற்றொரு சகோதரியான ட்ரோவாலை ஜாரா.
 
ஆனால், தங்களது வாழ்வின் நடுத்தர வயதில் (நாற்பதுகளில்) இருந்த கிறிஸ்டின், ரெபேக்கா இருவரும் தங்களது வீட்டைத் தாண்டி, வெளி உலகில் வாழும் அனுபவம் இல்லாமல்தான் இருந்தனர்.
 
எனவே இந்த அனுபவத்தைக் கற்றுணரும் நோக்கில், மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் எப்படி வாழ்வது என்பது குறித்து யூட்யூப் போன்ற தளங்களில் அவர்கள் வீடியோக்களை பார்த்திருந்ததாகவும் ஜாரா தனது பேட்டியில் தெரிவித்திருந்தார்.
 
“நடைமுறை வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, ஆள், அரவமற்ற இடத்தில் வாழ்வது எப்படி என்பதை விளக்கும் காணொளிகளை இணையத்தில் காண முடியாது.
 
எனவே, இதுகுறித்த அனுபவமில்லாத காரணத்தால், மனிதர்களே வாழாத இடத்தில் அவர்களால் வாழ முடியாமல் போனது. புதிய சூழலை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இல்லாமல் இருந்ததாலும், பட்டினியின் காரணமாகவும் அவர்கள் இறந்திருக்கலாம்” என்று கொலராடோ ஸ்பிரிங்ஸ் கெஸட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஜாரா வருத்தத்துடன் கூறினார்.
 
கொலராடோவின் ஸ்பிரிங்ஸ் பகுதியைச் சேர்ந்த மூவரின் மரணத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், உரிய பரிசோதனைகள் முடியும் வரை அதற்கான காரணத்தை வெளியிடப்பட மாட்டாது எனவும் மூவரின் மரணம் குறித்து விசாரித்து வரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதனிடையே, குன்னிசன் தேசிய வனப்பகுதியில் உள்ள கோல்ட் க்ரீக் கேம்ப் கிரவுண்டில் கடந்த ஜூலை 9ஆம் தேதி, மோசமாக சிதைந்திருந்த இருவரின் உடல் எச்சங்களைக் கண்டதாக மலையேறும் நபர் ஒருவர் கூறினார்.
 
குன்னிசன் பகுதியைச் சேர்ந்த விசாரணை அதிகாரியான மைக்கேல் பார்னஸ் கூறும்போது, “கூடாரத்தில் இரண்டு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மற்றொரு நபரின் உடல், கூடாரத்துக்கு வெளியே சுமார் 9,500 அடி (2,900 மீ) உயரத்தில் கண்டெடுக்கப்பட்டது,” என்று தெரிவித்தார்.
 
இறந்த மூன்று பேரில், பதின்ம வயது சிறுவனின் பெயர் வெளியிடப்படவில்லை.
 
அவர்கள் மூவரும் தாங்கள் வாழ விரும்பிய பகுதியில் ஒரு வசிப்பிடத்தைக் கட்ட முயன்றதாகத் தெரிகிறது. ஆனால் அதற்குள் குளிர்காலம் வந்துவிட்டால், வீடு கட்டும் தங்களின் முயற்சியைக் கைவிட்டு, கூடாரத்திற்கு உள்ளே நேரத்தைச் செலவிட்டதாக, ஏபி நியூஸ் செய்தி நிறுவனத்திடம் பார்ன்ஸ் தெரிவித்தார்.
 
குளிர்காலம் முன்கூட்டியே வந்ததன் காரணமாக, அவர்கள் கூடாரத்தில் உயிர்வாழும் நிலையில் இருந்தார்களா என்பதை எண்ணும்போது தனக்கு வியப்பாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
 
 
அத்துடன், “காடுகள், மலைகள் நிறைந்த பகுதிகளில் உயிர் வாழ்வது எப்படி, எவ்வாறு உணவு தேடுவது என்பதை விளக்கும் புத்தகங்கள் அவர்களிடம் நிறைய இருந்தன. ஆனால் அவையெல்லாம் மளிகைக் கடை பொருட்களைப் போல் குவிந்திருந்தன,” என்றும் தெரிவித்தார் பார்ன்ஸ்.
 
கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், ரெபெக்கா தனது மகன் மற்றும் சகோதரி கிறிஸ்டின் உடன் ஜாரா வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அவர்கள் தங்களது புதிய வாழ்க்கைப் பயணம் குறித்து எடுத்துரைத்து விட்டு, அவரிடமிருந்து விடை பெற்றனர்.
 
“அவர்களின் திட்டத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நாங்கள் அவர்களைத் தடுக்க முயன்றோம். ஆனால் அவர்கள் எங்களின் பேச்சைக் கேட்கவில்லை என்பதுடன், எதற்கும் தயாராக இருந்தனர்” என்கிறார் ஜாரா கண்ணீர் மல்க.
 
அமெரிக்காவின் ஸ்பிரிங்ஸ் மாகாணத்தில் பொதுவாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் கோடை காலமாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்த முறை அங்கு, ஒரு மாதத்திற்கு முன்பே பனிக்காலம் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது.
 
இதை எதிர்பார்க்காத சகோதரிகள், முன்பே பனிக்காலம் தொடங்கியதால் அதற்குள் அவர்களுக்கான இருப்பிடத்தைக் கட்டி முடிக்கவும் முடியாமல் உணவுத் தேவையையும் பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.