வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2023 (15:47 IST)

சானியா மிர்ஸாவின் 20 வருட விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்தது!

இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா தமது விளையாட்டு வாழ்க்கையின் கடைசி போட்டியின் முதல் சுற்றில் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

துபாய் ட்யூடி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ்- சானியா இணை, குதர்மெடோவா, சாம்சோனோவா ஜோடியிடம் 4-6, 0-6 என்ற செட்களில் தோல்வியடைந்தது.

இந்த தோல்வியுடன் சானியா மிர்ஸாவின் கிட்டத்தட்ட இருபது வருட விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

இந்த ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி அன்று, சானியா உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதில் 'கண்களில் கண்ணீருடன், இதயத்தில் வலியுடன் என் விளையாட்டு வாழ்க்கையிலிருந்து விடைபெறும் குறிப்பை எழுதுகிறேன்,’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதே போல, 2022ஆம் ஆண்டுதான் தன்னுடைய கடைசி சீசனாக இருக்கும் என கடந்த ஆண்டு ஜனவரியில் சானியா அறிவித்தார். ஆனால் தசை காயம் காரணமாக அவரால் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பங்கேற்க முடியவில்லை.

இந்த நிலையில், அவரது ஓய்வு திட்டம் சில மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பின் "முதல் கிராண்ட்ஸ்லாம் விளையாடி 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய ஓபன் என்னுடைய கடைசி கிராண்ட்ஸ்லாமாக இருக்கும்" என்று சானியா மிர்ஸா கூறினார்.

மெல்போர்ன் மற்றும் துபாய், இவை இரண்டும் டென்னிஸ் டூரின் மையங்கள். கூடவே கடந்த மூன்று தசாப்தங்களில் சானியாவின் விளையாட்டு வாழ்க்கையையும் அவை பிரதிபலிக்கின்றன.

சானியா மிர்ஸா 18 ஆண்டுகளுக்கு முன்பு மெல்போர்னில் தனது 18வது வயதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தபோது அவரைப்பார்த்தேன். மூன்றாவது சுற்றில் தனது அற்புதமான ஷாட்கள் மூலம் செரீனா வில்லியம்ஸுக்கு அதிரடியாக பதில் அளித்துக்கொண்டிருந்தார் சானியா.

சானியாவின் ’அற்புத தருணங்கள்’

அவரது ஃபோர்ஹேண்ட் ஷாட்கள் மற்ற இந்தியப் மகளிரைக்காட்டிலும் ஆக்ரோஷமாக இருந்தன.
Sania Mirza

இஸ்லாமோபோபியாவின் சகாப்தத்தில் அந்த இளம் முஸ்லிம் வீராங்கனை, தான் யார், தான் என்ன அணிய வேண்டும் என்பதை அறிந்திருந்தார்.

அவரது குட்டைப் பாவாடைகளும், துணிச்சலான செய்திகளுடன் கூடிய டி-ஷர்ட்டுகளும் பழமைவாதிகளை கலக்கமடையச்செய்தன. சானியா டாப் லெவலில் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்தார். விஜய் அமிர்தராஜ் (தரவரிசையில் 18 வது இடம்) மற்றும் ரமேஷ் கிருஷ்ணன் (தரவரிசையில் 23 வது இடம்) ஆகியோருக்குப் பிறகு இந்தியாவின் சிறந்த வீராங்கனை என்ற சாதனையையும் சானியா படைத்தார்.

ரமேஷ் கிருஷ்ணனுக்கு 22 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் 30 வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை சானியா பெற்றார். இதற்குப் பிறகு 16 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் சானியா டென்னிஸ் மைதானத்தில் நீடித்து வந்தார்.

2007, ஆகஸ்ட் 27 ஆம் தேதி சானியா, உலகின் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 27 வது இடத்தைப்பிடித்தார். அவர் ஹைதராபாத்தில் நடைபெற்ற WTA பட்டத்தை வென்றார் மற்றும் மூன்று முறை WTA இன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

அடுத்த நான்கு ஆண்டுகள் அவர் உலகின் முதல் 35 வீரர்களில் இருந்தார். அதன் பிறகு அடுத்த நான்கு ஆண்டுகள் வரை அவர் உலகின் முதல் 100 வீரர்களில் ஒருவராக கணக்கிடப்பட்டார். ஆனால் முழங்கால் மற்றும் மணிக்கட்டு காயங்கள் அவரது ஒற்றையர் விளையாட்டு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தன. ஆனால் அதற்குப் பிறகு இரட்டையர் டென்னிஸ் பிரிவில் விளையாடத் துவங்கிய சானியா தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.

பல பட்டங்களை வென்ற சானியா

இரட்டையர் டென்னிஸில், அவர் 43 WTA பட்டங்களை வென்றார் மற்றும் 2015 இல் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார். இதில் ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களும் அடங்கும்.
Sania Mirza

கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றார். மார்ட்டினா ஹிங்கிஸுடன் ஒரே ஆண்டில் விம்பிள்டன், யுஎஸ் ஓபன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வென்றார்.

43 டபிள்யூடிஏ பட்டங்களை வென்றுள்ள சானியா, டபிள்யூடிஏ இரட்டையர் பிரிவில் 23 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 2022 இல் கூட, செக் குடியரசின் லூசி ஹ்ரடேக்காவுடன் க்ளே கோர்ட்டில் இரண்டு WTA இறுதிப் போட்டிகளில் பங்கேற்றார்.

சானியா தனது விளையாட்டு வாழ்க்கையின் கடைசி போட்டியை துபாயில் விளையாடினார். அங்குதான் தனது மகன் மற்றும் கணவருடன் (பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மல்லிக்) அதிக நேரத்தை அவர் செலவிடுகிறார்.

மெல்போர்னிலிருந்து துபாய் வரையிலான பயணம் இடர்பாடுகள் எதுவும் இல்லாது போலத் தோன்றினாலும் அது சானியாவின் ஆளுமைக்கு முற்றிலும் எதிரானது. ஏனெனில் அவரது கேரியரில் அவ்வப்போது பல சர்ச்சைகளையும் சந்திக்க வேண்டியிருந்தது

இந்திய டென்னிஸின் முதல் சூப்பர் ஸ்டார்

அவர் இந்திய டென்னிஸின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார். ஆனால் உண்மை என்னவென்றால், சானியா மிர்ஸா மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஆகிய இருவருமே இந்திய விளையாட்டு உலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டார்கள்.
Sania Mirza

டென்னிஸ் மிகவும் பரவலான மற்றும் கவரக்கூடிய சர்வதேச விளையாட்டாக இருப்பதால், சாய்னாவை விட சானியாவின் புகழ் அதிகமாக இருந்தது.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு சானியா தன்னுடைய சமகாலத்து இந்திய பெண் விளையாட்டு வீரர்களிடமிருந்து மிகவும் வித்தியாசமாக காணப்பட்டார். அவர் வெட்கப்படவும் இல்லை, பயப்படவும் இல்லை. அவர் புதிய மில்லினியம் தலைமுறையின் வீராங்கனை, தன்னம்பிக்கை கொண்டவர், வெளிப்படையாக பேசுபவர், அச்சமற்றவர் மற்றும் தைரியமானவர்.

2005ல் இந்தியா டுடே இதழுக்காக அவரை முதல்முறையாக நேர்காணல் செய்தேன்.

"முஸ்லிம் பெண்கள் மினி ஸ்கர்ட் போடக்கூடாது என்று சிலர் சொல்கிறார்கள், சமூகம் உங்களை நினைத்து பெருமை கொள்கிறது என்று சிலர் கூறுகிறார்கள். வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தில் அல்லாஹ் என்னை மன்னிப்பார் என்று நம்புகிறேன். ஆனால் செய்யவேண்டியதை செய்துதான் ஆகவேண்டும்,” என்று அவர் சொன்னார்.

அப்படி தான் செய்ய விரும்பியதை இரண்டு தசாப்தங்களாக செய்து வருகிறார் சானியா . குறிப்பாக சானியாவின் வேகமான ஃபோர்ஹேண்ட் ஷாட்கள், நீண்ட காலத்திற்கு மக்கள் மனதில் நினைவிருக்கும்.

சர்ச்சையின் நிழல்

இந்த ஷாட்டுகள் இந்திய டென்னிஸ் வரலாற்றில் அழியாததாக இருக்கும். சானியா மிர்சா டென்னிஸ் வீராங்கனையாக இருந்ததோடு கூடவே சூப்பர் செலிபிரிட்டியாகவும் இருந்ததால், 'ஸொஸைட்டி' போன்ற பத்திரிகைகளின் பக்கங்களிலும் அவரை நாம் பார்த்திருக்கிறோம்.
Sania Mirza

ஆனால் சானியா மிர்ஸா எந்த மிகப்பெரிய சிறப்புக்காக நினைவுகூறப்படுகிறாரோ அதை உணர மட்டுமே முடியும். வெள்ளிக்கிழமையன்று ஓய்வு பெறுவதாக அறிவித்த உணர்ச்சி ததும்பிய பதிவிலும் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சானியாவுக்கு ஆறு வயதாக இருந்தபோது, ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் கிளப் கோர்ட்டின் பயிற்சியாளருடன் சண்டையிட்டார். ஏனென்றால் டென்னிஸின் வித்தைகளைக் கற்றுக்கொள்வதற்கு சானியாவின் வயது போதாது என்று பயிற்சியாளர் கருதினார்.

டென்னிஸ் கோர்ட்டில் விளையாடும்போது சானியாவின் ஸ்டைல் முற்றிலும் மாறுபட்டது. போட்டி மிகவும் கடினமானதாக இருக்கும்போது, ஸ்கோர்லைன் மிக நெருக்கமாக இருக்கும்போது அதாவது அழுத்தம் அதிகரிக்கும் போது, சானியா தனது தலைமுடியை இறுக்கிக்கட்டி, கைகளால் கால்களை தட்டி, போட்டியிடத் தயாராகிவிடுவார்.

எப்படி வாழ வேண்டும் என்று சொல்லப்பட்டதோ அப்படிப்பட்ட பெண்ணாக டென்னிஸ் கோர்ட்டுக்கு வெளியே அவர் இருந்தார். தேவையில்லாமல் பல சர்ச்சைகளை அவர் சந்திக்க வேண்டியிருந்தது. மெய்க்காப்பாளர்களுடன் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் அளவிற்கு பழமைவாதத்தை எதிர்த்துப் போராடினார். ஆனால் இரண்டு தசாப்தங்களாக சானியா பின்வாங்கவும் இல்லை, நிற்கவும் இல்லை.

அவரது விளையாட்டு வாழ்க்கையின் போதும், அவரது சொந்த வாழ்க்கையின் போதும்., மற்ற விளையாட்டு வீரர்களும், அவரது லட்சக்கணக்கான ரசிகர்களும் சானியாவின் மேஜிக்கை பல முறை பார்க்கமுடிந்தது.