ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 13 மார்ச் 2023 (09:29 IST)

இந்திய குடும்ப அமைப்புடன் தன்பாலின திருமணத்தை ஒப்பிட முடியாது - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!

தன்பாலின திருமணம் தொடர்பாகத் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.
 
அதில், கணவன், மனைவி மற்றும் அவர்களது உறவில் பிறந்த குழந்தைகளை உள்ளடக்கிய இந்திய குடும்பம் என்ற கருத்துடன் தன்பாலின திருமணத்தை ஒப்பிட முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
 
தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமானதாக அங்கீகரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் மார்ச் 13ஆம் தேதி விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த வழக்கில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
 
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவின் நகல் பிபிசிக்கு கிடைத்தது. அதில், உச்ச நீதிமன்றத்தால் இந்திய தண்டனை சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 377 (இயற்கைக்கு மாறான பாலுறவு) குற்றமற்றதாக மாற்றப்பட்ட போதிலும், நாட்டின் மற்ற சட்டங்களின் கீழ் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் அடிப்படை உரிமையை மனுதாரர்கள் கோர முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
 
“கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் எனப்படும் இந்திய குடும்பக் கருத்துடன் தன்பாலின உறவை ஒப்பிட முடியாது” என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதிலில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
ஒன்றாக வாழ்வது, ஒரே பாலினத்துக்குள் உறவு கொள்வது போன்றவற்றை கணவன், மனைவி, குழந்தைகள் என்ற இந்திய குடும்பம் தொடர்பான கருத்துடன் ஒப்பிட முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
 
ஆண் கணவனாகவும் பெண் மனைவியாகவும் இருந்து அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளால், அவர்களையே தந்தையாகவும் தாயாகவும் ஏற்றுகொள்ள முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
 
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்காதது அடிப்படை உரிமைகளை மீறுவது ஆகாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.