வியாழன், 7 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 6 அக்டோபர் 2022 (15:35 IST)

வடகொரியா 6-வது முறையாக ஏவுகணை சோதனை!

இரண்டு வாரங்களில் 6-வது முறையாக வியாழக்கிழமை ஏவுகணை சோதனை மேற்கொண்டது வட கொரியா. இந்த சோதனையின்போது 2 ஏவுகணைகள் ஏவப்பட்டன.

 
முன்னதாக, அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொண்ட ராணுவப் பயிற்சியின்போது ஏவப்பட்ட ஏவுகணை தோல்வியடைந்து நடு வழியில் கீழே விழுந்ததற்கு தென் கொரிய ராணுவம் மன்னிப்புக் கோரியுள்ளது. இந்த அமெரிக்க - தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சிக்கு பதிலடியாகவே சமீபத்தில் தாங்கள் ஏவுகணை சோதனைகள் நடத்துவதாக புதன் கிழமை அறிவித்திருந்தது வட கொரியா.

தென் கொரியா மன்னிப்பு கேட்டது ஏன்?

தாங்கள் ஏவிய ஏவுகணை தென் கொரியாவின் கடலோர நகரான காங்க் நியூங் பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதற்கு தென் கொரியா தனது மன்னிப்பை வெளியிட்டது.

வெடிசத்தம் போல கேட்டதாகவும், இரவு முழுவதும் தீ எரிந்து கொண்டிருந்ததாகவும் அந்த நகரின் மக்கள் கூறுகின்றனர். ஆனால், ராணுவமோ, எந்தவித உயிரிழப்பும் இல்லை என்று கூறியுள்ளது. சம்பவம் நடந்து ஏழு மணி நேரம் வரை அது குறித்து அறிந்திருக்கவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

வடகொரியா கடந்த செவ்வாய்கிழமையன்று ஜப்பான் வான்வெளிக்கு மேலே ஏவுகணை ஒன்றை செலுத்தியதற்கு பதிலடியாக தென்கொரியா இந்த ஏவுகணையை ஏவியது. 2017ம் ஆண்டுக்குப் பிறகு முதன் முறையாக வடகொரியா ஜப்பான் வான்வெளிக்கு மேலே ஏகவுகணை செலுத்தி உள்ளது.

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் இணைந்து ராணுவப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிராக தன்னுடைய வலுவை வெளிப்படுத்த வட கொரியா ஏவுகணையை ஏவியது. கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ஜப்பான் கடற்பரப்பு என்று அழைக்கப்படக்கூடிய கிழக்கு கடற்பகுதியில் தென் கொரியாவும் அமெரிக்காவும் பல ஏவுகணைகளை செலுத்தியுள்ளன.

அமெரிக்காவுடன் இணைந்து ஏவுகணைகளை ஏவியது மட்டுமின்றி சில மணி நேரம் கழித்து, தனியாகவும் ஏவுகணைகளை தென்கொரிய ராணுவம் செலுத்தியது. அதில் ஒன்றுதான் ஏவிய தருணத்தில் சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து நொறுங்கிவிட்டதாக அந்நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ளது.

ஹுயுன்மூ-2 என்ற இந்த ஏவுகணை வெடிக்கவில்லை என்று தென்கொரிய ராணுவம் கூறியுள்ளது. இது குறித்து கவலைகள் எழுந்ததற்கு மன்னிப்புக் கோரியுள்ளது. இது குறித்து பேசிய காங்க்நியூங் நகர மக்கள், பிரகாசமான ஒளியை பார்த்ததாகவும், புதன்கிழமையன்று ஒரு மணி அளவில், பெரிய வெடிச்சத்தத்தை கேட்டதாகவும் கூறினர்.

பொதுமக்களில் பலர் வீடுகளில் இருட்டிலேயே முடங்கியிருந்தனர். அவர்களில் பலர் என்ன நடந்தது என்ற கவலையுடன் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டனர். நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களையும் அவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். பிரகாசமான வெளிச்சத்துடன் தீ எரியும் காட்சியும், தூரத்தில் இருந்து புகை வரும் காட்சியும் புகைப்படங்களிலும், வீடியோ காட்சிகளிலும் காணப்பட்டன.

"இந்த வெடிச்சத்தத்தால் பீதி அடைந்தேன். என்னால் தூங்கமுடியவில்லை," என ஒரு பதிவர் கூறியதாக காங்க் வோன் ஐலிபோ செய்தி தளம் தெரிவித்துள்ளது. விமானம் ஏதும் விழுந்து விட்டதா என ஒருவர் கவலை தெரிவித்திருந்தார்.

செவ்வாயன்று வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனை, ஒரு வாரத்துக்குள்ளாக நடத்திய ஐந்தாவது சோதனை ஆகும். பெரும்பாலான வட கொரியாவின் ஏவுகணை சோதனைகள், வான்வெளியில் விமானங்கள் பறக்கும் உயரத்தை விட அதிக உயரத்தில் நடத்தப்பட்டுள்ளன. அண்டை நாடுகளின் விமானங்கள் மீது மோதுவதை தவிர்க்கவே இவ்வாறு அதிக உயரத்தில் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

"ஆனால் ஜப்பான் வான்பரப்பில் ஏவுகணை சோதனையை நடத்துவது, நிஜத்தில் நிகழக்கூடிய ஆபத்துக்களுக்கான எதிர்வினைக்கு வட கொரியா தன்னை தயார்படுத்தி கொள்ள உதவும்" என ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் ஆய்வாளர் அகிட் பாண்டே தெரிவித்தார்.

செப்டம்பர் மாதத்தில் வட கொரியா தன்னை ஒரு அணு ஆயுத நாடாக சுயமாகவே அறிவித்துக் கொள்ளும் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் அணு ஆயுத விலக்கல் தொடர்பான பேச்சுவார்த்தை சாத்தியத்தை வட கொரியா தலைவர் கிம் ஜோங் உன் நிராகரித்திருக்கிறார்.