ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (13:37 IST)

"தமிழர்களையும், தமிழையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது" - ராகுல் காந்தி

"தமிழர்களையும், தமிழையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது; தமிழர்களால் மட்டுமே அது முடியும்" என்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
அடுத்த வாரம், அதாவது வரும் 18ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மாநிலம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
 
அந்த வகையில், இன்று தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, மதுரை ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.
 
இந்நிலையில், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "இந்தியா மொழி, இனம், கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு வேறுபாடுகளை கொண்ட நாடு. அதை புரிந்துகொள்ளாத நரேந்திர மோதி வெறுப்புணர்வு அரசியலை கொண்டு தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறார். தமிழர்களையும், தமிழையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது," என்று அவர் கூறினார்.
 
 
அதுமட்டுமின்றி, பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தொழில்துறைகள் முடங்கியுள்ளதாக ராகுல் காந்தி கூறினார்.
 
"ஆடை தயாரிப்புக்கு பெயர் பெற்ற திருப்பூர், பட்டுக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரம் ஆகியவற்றிலுள்ள தொழில்துறைகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக முடங்கியுள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் செயலிழந்த தொழில்துறைக்கு புத்துயிர் கொடுப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்று ராகுல் காந்தி பேசினார்.
 
 
பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதை திரும்ப செலுத்தாமல் தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் சொகுசாக இருப்பதாகவும். ஆனால், ஆயிரக்கணக்கில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அவதிப்படும் விவசாயிகள் சிறைக்குள் தள்ளப்படும் மோசமான நிலை இருப்பதாகவும் கூறிய ராகுல், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அந்நிலையை மாற்றி காட்டுவோம் என்றும் கூறினார்.
 
"காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுமே ஒத்த கொள்கைகளை கொண்டுள்ளன. இந்த கூட்டணி வெற்றிபெற்றால், தமிழர்கள் தமிழர்களால் ஆட்சி செய்யப்படுவார்கள். ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராவார்," என்று அவர் மேலும் கூறினார்.
 
நாக்பூரிலிருந்து செய்யப்படும் ஆட்சியை மக்கள் அகற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பை மறைமுகமாக ராகுல் விமர்சித்தார்.