ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 2 ஜூன் 2024 (18:46 IST)

நெதன்யாகு அரசை கவிழ்ப்போம் என அமைச்சர்கள் மிரட்டல் - இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட காஸா போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஏற்றுக்கொண்டால் அமைச்சரவையிலிருந்து விலகி, கூட்டணி ஆட்சியை கவிழ்ப்போம் என இரு தீவிர வலதுசாரி அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



நிதியமைச்சர் பெஸோலெல் ஸ்மாட்ரிக் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஈடமார் பென்-கவிர் இருவரும், ஹமாஸை அழிப்பதற்கு முன்பாக எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமும் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால், போர் நிறுத்தத்தை நெதன்யாகு ஆதரித்தால், தான் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் யாயிர் லாபிட் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் ஆயுதக்குழு அழித்து, அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கும் வரை நிரந்தர போர் நிறுத்தம் கிடையாது என, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
மூன்று பகுதிகள் கொண்ட இந்த திட்டம் ஆறு வார போர் நிறுத்தத்துடன் தொடங்கும். கூடவே இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) காஸாவில் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் இருந்து வெளியேறும். அனைத்து பணயக் கைதிகளையும் விடுவித்தல், நிரந்தர “சண்டை நிறுத்தம்”, அமெரிக்கா மற்றும் சர்வதேச உதவியுடன் ஒரு பெரிய புனரமைப்புத் திட்டமும் இந்த மொன்மொழிவின்படி செயல்படுத்தப்படும்.

நிதியமைச்சர் பெஸோலெல் ஸ்மாட்ரிக் சனிக்கிழமை தன் சமூக ஊடக பக்கத்தில், “ஹமாஸை அழிக்காமல், அனைத்து பணயக்கைதிகளையும் மீட்காமல் போரை நிறுத்துவதற்கான இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டால் நான் இந்த அரசாங்கத்தின் அங்கமாக இருக்க மாட்டேன் என நெதன்யாகுவிடம் கூறியுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதே வார்த்தைகளை பிரதிபலித்த தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஈடமார் பென்-கவிர், “ஹமாஸை அழிப்பதற்கான குறிக்கோளை கைவிட்டு, போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இது. பயங்கரவாதத்திற்கு வெற்றியாகவும் இஸ்ரேலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாகவும் அமையும் பொறுப்பற்ற ஒப்பந்தம் இது” என தெரிவித்துள்ளார்.

இந்த முன்மொழிவுக்கு உடன்படுவதைவிட “அரசாங்கத்தைக் கலைப்போம்” அவர் கூறினார்.

நெதன்யாகுவின் வலதுசாரிக் கூட்டணி நாடாளுமன்றத்தில் மிகக்குறைந்த பெரும்பான்மையையே பெற்றுள்ளது. ஆட்சியைத் தக்கவைக்க, 6 இடங்களை கொண்டுள்ள ஈடமார் பென்-கவிரின் ஓட்ஸ்மா யெஹுடிட் கட்சி, 7 இடங்களை கொண்டுள்ள ஸ்மாட்ரிக்கின் மத சியோனிச கட்சி ஆகியவற்றை அவரது கூட்டணி நம்பியுள்ளது.

இஸ்ரேலின் செல்வாக்குமிக்க எதிர்க்கட்சி தலைவர்களுள் ஒருவரான யாயிர் லாபிட், இஸ்ரேல் பிரதமருக்கு விரைந்து தன் ஆதரவு வழங்க முன்வந்துள்ளார். அவருடைய யேஷ் அடிட் கட்சி 24 இடங்களை கொண்டுள்ளன.

“பென்-கவிர் மற்றும் ஸ்மாட்ரிக் இருவரும் அரசாங்கத்திலிருந்து வெளியேறினால் நெதன்யாகுவுக்கு எங்களின் பாதுகாப்பு வலை இருக்கும்” என்று அவர் கூறினார்.

போர் நிறுத்தத்தைஏற்றுக்கொள்ளுமாறு இஸ்ரேல் அரசை வலியுறுத்தி, பல்லாயிரக்கணக்கான மக்கள் டெல் அவிவ் நகரில் பேரணி நடத்தியதைத் தொடர்ந்து இந்தப் பிரச்னை எழுந்துள்ளது.

இதில் பெரும்பாலான போராட்டக்காரர்கள் நெதன்யாகுவை பதவி விலகுமாறு வலியுறுத்தினர்.

இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்டு கொண்டு வருவதற்கான பிரசாரத்தை நடத்திவரும் குழு ஒன்று, இஸ்ரேல் பிரதமர் இதனை ஏற்க மறுத்தால் காஸாவில் ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகளின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

பேரணியின் போது தண்ணீரை பீய்ச்சியடித்து கூட்டத்தைக் கலைக்க முற்பட்டதால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. சிலர் காவலில் வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

பணயக்கைதிகளின் குடும்பத்தினர் மற்றும் அரசுக்கு எதிரான பிரசாரக் குழுவினர், பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தைக் கோரியும் நெதன்யாகு பதவியிலிருந்து விலக வேண்டும் அல்லது தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரியும் பேரணிகளில் ஈடுபட்டுவருவதால், டெல் அவிவ் நகரில் இத்தகைய போராட்டங்கள் நிரந்தரமாகிவிட்டன.

காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தை “இறுதிசெய்யுமாறு” இஸ்ரேல் மற்றும் ஹமாஸிடம் எகிப்து, கத்தார் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த மத்தியஸ்தர்கள் சனிக்கிழமை கூட்டறிக்கை வாயிலாக வலியுறுத்தியுள்ளனர்.

"காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் மற்றும் கைதிகளை விடுவிப்பதற்கான தற்போதைய விவாதங்களில் மத்தியஸ்தர்களாக", "அதிபர் ஜோ பைடன் கோடிட்டுக் காட்டிய கொள்கைகளை உள்ளடக்கிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுக்கிறோம்" என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சூனக்கும் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஹமாஸ் இந்த போர் நிறுத்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால் தன் அரசாங்கம் “காஸாவுக்கு அதிகப்படியான உதவிகளை வழங்குவோம்” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டால் “நாங்களும் அதன்படி செல்வோம்” என, முன்னதாக ஹமாஸ் மூத்த அரசியல்வாதி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால், “போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இஸ்ரேலின் நிபந்தனைகள் மாறவில்லை” என, நெதன்யாகுவின் அலுவலகம் சனிக்கிழமை அறிக்கை வாயிலாக தெரிவித்தது.

“ஹமாஸ் ராணுவம் மற்றும் அதன் ஆட்சித்திறன்களை அழித்தல், அனைத்து பணயக் கைதிகளையும் விடுவித்தல், இஸ்ரேலுக்கான அச்சுறுத்தலாக காஸா எப்போதும் இருக்காது என்பதை உறுதி செய்தல்” ஆகிய நிபந்தனைகளை இஸ்ரேல் பட்டியலிட்டுள்ளது.

நிரந்தர போர் நிறுத்தத்திற்கு முன்னதாக “இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்வதை இஸ்ரேல் தொடர்ந்து வலியுறுத்தும்” எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, காஸாவின் தெற்குப்பதியில் எகிப்துடனான எல்லையில் உள்ள ரஃபாவில் சனிக்கிழமையும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்ததாக செய்திகள் வெளியாகின.

வடக்குப் பகுதியில் உள்ள காஸா நகரில் குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

போர் தொடங்கியதிலிருந்து காஸாவில் 36,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக,ஹமாஸால் நடத்தப்பட்டு வரும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் முன்னெப்போதும் இல்லாத வகையில் அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேலை தாக்கியதைத் தொடர்ந்து இந்த போர் தொடங்கியது. ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 252 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.