ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 மே 2024 (16:25 IST)

பாலத்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்த ஸ்பெயின், அயர்லாந்து, நார்வே - இஸ்ரேலுக்கு அழுத்தமா?

Palastine flag in ireland
ஸ்பெயின், அயர்லாந்து, நார்வே ஆகிய நாடுகள் பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. மத்திய கிழக்கில் நடந்து வரும் போரை நிறுத்துவதற்கான அரசியல் தீர்வு காணும் முயற்சியாக இதைக் கருதுவதாகவும் அவை தெரிவித்துள்ளன.

Palastine flag in ireland


இந்நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் இதர ஐரோப்பிய நாடுகளும் இதே செயலைப் பின்பற்றி ஒருங்கிணைவார்கள் என்றும், அதன் வழியாக காஸாவில் போர்நிறுத்தம் மற்றும் ஹமாஸ் சிறைபிடித்து வைத்துள்ள பணயக் கைதிகளை விடுவிக்கவும் இது உதவும் என்றும் அந்நாடுகள் நம்புகின்றன.

இம்மூன்று நாடுகளின் முடிவு இஸ்ரேலின் கோபத்தைத் தூண்டியுள்ள நிலையில், இவை பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நார்வே நாடுகளுக்கான தனது தூதர்களையும் திரும்ப பெற்றுக் கொண்டது இஸ்ரேல் அரசு. அதோடு இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த இஸ்ரேலுக்கான தூதர்களிடமும் தனது கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டது மட்டுமின்றி, அவர்களை அழைத்து ஊடகங்கள் முன்னிலையில் அக்டோபர் 7 தாக்குதலின் சிசிடிவி காணொளியை போட்டுக் காட்டியுள்ளது இஸ்ரேல்.

ஏற்கெனவே இரண்டு சர்வதேச நீதிமன்றங்கள் தெற்கு காஸாவில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் தாக்குதல்களை நிறுத்த உத்தரவிட்டுள்ளது மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு மீது போர்க்குற்றங்கள் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், மூன்று நாடுகள் பாலத்தீனத்தை அங்கீகரிப்பது இஸ்ரேலுக்கு கூடுதல் ராஜதந்திர அழுத்தத்தை ஏற்படுத்தும்.

மேற்குலக நாடுகளும்கூட ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனப் பகுதிகளில் குடியேறியுள்ள இஸ்ரேலியர்கள் மீது பல்வேறு தடைகளை விதித்துள்ளன.

ராஜ்ஜீய ரீதியாக ஒரு நாடு மற்றொரு நாட்டை அங்கீகரிக்கும் செயல்முறையானது நாட்டுக்கு நாடு வேறுபடும். ஆனால் வழக்கமாக பாலத்தீனத்தில் அதன் அங்கீகரிக்கப்பட்ட அரசு அமைந்துள்ள ரமல்லாவில், பாலத்தீனத்தை அங்கீகரிக்கும் நாட்டின் பிரதிநிதிகள் கடிதம் அல்லது குறிப்பிட்ட ஆவணங்களைப் பரிமாறிக் கொள்வர்.

அதன் பின்னர் மேற்கு கரை அல்லது கிழக்கு ஜெருசலேமில் செயல்பட்டு வரும் அந்நாடுகளின் அலுவலகங்கள், தூதரகங்களாக மேம்படுத்தப்படும். அதன் அதிகாரிகள் தூதர்களாக நியமிக்கப்படுவார்கள். 1967 போருக்கு முன் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்டு அறிவிக்கப்பட்ட எல்லைகளின் அடிப்படையில், பாலத்தீனத்தை அங்கீகரிப்பதாக இந்த மூன்று நாடுகளும் தெரிவித்துள்ளன.

அயர்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலத்தீனத்தை நாடாக அங்கீகரிப்பது தொடர்பாக நான்கு மணிநேர விவாதத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், நாடாளுமன்றத்தில் பாலத்தீன கொடி பறக்கவிடப்பட்டது.



அமைச்சரவை முறையான முடிவை எடுப்பதற்கு முன்பே, அந்நாட்டு பிரதமர் சைமன் ஹாரிஸ், இதுவொரு ‘வரலாற்றுபூர்வமான மற்றும் முக்கியமான’ நடவடிக்கை என்று பேசினார்.

இந்தப் போர் நிறுத்தத்தை ஊக்குவிப்பதற்காக இதர ஐரோப்பிய நாடுகள் தங்களிடம் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டிய தேவை இருப்பதால், இந்த வழியை அவர்களும் பின்பற்றுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் அவர்.

பாலத்தீனத்தை நாடாக அங்கீகரிப்பதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த பிறகு பேசிய ஹாரிஸ், “பாலத்தீனர்களின் இந்த இருண்ட காலத்தில், அவர்களோடு அயர்லாந்து நிற்கிறது என்ற நம்பிக்கையை இந்த முடிவு வழங்கும் என்று நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.

"சுய நிர்ணயம், சுயாட்சி, பிராந்திய ஒருமைப்பாடு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் பாலஸ்தீனத்தின் சொந்த பொறுப்புகளை அங்கீகரிப்பது உட்பட அரசிற்கான முழு உரிமைகளையும் பாலஸ்தீனம் கொண்டுள்ளது மற்றும் அதை நிரூபிக்க முடியும் என்பது எங்கள் பார்வையின் வெளிப்பாடாகும்."

இதேபோல் நார்வே பாலத்தீனத்தை அங்கீகரித்துள்ள நாள், "நார்வே -பாலஸ்தீன உறவில் சிறப்பான ஒரு நாள்" என்று நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்பன் பார்த் எய்ட் கூறினார்.

ஸ்பெயினில் பாலத்தீனத்தை அங்கீகரிப்பதற்கான நாடாளுமன்ற கூட்டத்திற்கு முன்பு பேசிய அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ், பாலத்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்குவது “வரலாற்று பூர்வமான நீதி வழங்கும் ஒரு விஷயம் மட்டுமல்ல”, அதைத் தாண்டி நாம் அனைவரும் அமைதியை நிலைநாட்ட விரும்பினால், அதற்கான அடிப்படைத் தேவை என்று பேசியுள்ளார்.

அதேநேரம், இதன் மூலம் ஸ்பெயின் இஸ்ரேலை எதிர்க்கவில்லை என்றும், இருநாடு (Two-State Solution)தீர்வை எதிர்க்கும் ஹமாஸை எதிர்ப்பதாகவும் வலியுறுத்தினார் அவர். இந்த மோதலின் மீது தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே ஸ்பெயினின் இலக்கு என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இருப்பினும் ஸ்பெயின் மீதே இஸ்ரேல் கடும் கோபத்துடன் இருப்பது போலத் தெரிகிறது. இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், அக்டோபர் 7 தாக்குதலின் படங்களோடு சேர்த்து ஃபிளமிங்கோ நடனம் மற்றும் இசையோடு கூடிய வீடியோ ஒன்றைத் தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருந்தார். மேலும், அதோடு “ஹமாஸ்: நன்றி ஸ்பெயின்” என்ற வார்த்தைகளையும் எழுதியிருந்தார்.

Israel War


ஸ்பெயின் இந்த வீடியோவுக்கு, “அவதூறு மற்றும் கிளர்ச்சியைத் தூண்டுவது” என்று எதிர்வினையாற்றியது. மேலும், இஸ்ரேல் நார்வே மற்றும் அயர்லாந்து குறித்தும் இதே போன்ற வீடியோக்களை பகிர்ந்தது.

இந்த சர்ச்சை ஒரு கட்டத்தில் மேலும் ஆழமாக மாறியது. ஸ்பெயின் துணைப் பிரதமர் யோலண்டா டியாஸ், பாலத்தீனியர்களுக்கு "நதியிலிருந்து கடல் வரை சுதந்திரமாக இருக்க வேண்டும்" என்று பேச, இதை இஸ்ரேலிய யூதர்களுக்கு எதிரான அழைப்பு என்றும், இஸ்ரேலை அழிப்பதற்கான பகிரங்கமான அழைப்பு என்றும் இஸ்ரேலியர்கள் எடுத்துக் கொண்டனர்.

இதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் செவ்வாயன்று பதிலளித்திருந்த காட்ஸ், யோலண்டாவை ஹமாஸ் தளபதி முகமது சின்வார் மற்றும் இரானின் உச்ச தலைவர் அலி கமேனியுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

மேலும் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உடனடியாகத் தனது துணைப் பிரதமரை பதவி நீக்கம் செய்யவில்லையெனில், “இஸ்ரேலிய மக்களுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றத்திற்கான தூண்டுதலில் நீங்கள் பங்கேற்றதாக ஆகிவிடும்,” என்றும் கூறியிருந்தார்.

இவ்வாறு இந்த மூன்று நாடுகள் மீதும் எதிர்வினை புரிவதன் மூலம், பிற நாடுகள் இவர்களைப் பின்பற்றாமல் தடுக்க இஸ்ரேல் முயற்சி செய்வதாக தூதர்கள் கருதுகின்றனர்.

ஸ்லோவேனியா, மால்டா மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளும் பாலத்தீனத்தை அங்கீகரிக்க உள்ளதாக சமீப காலத்தில் அறிகுறிகளைக் காட்டியுள்ளன. ஆனால், பெல்ஜியத்தில் தேர்தல் வருவதையொட்டி இந்தத் திட்டத்தை தள்ளி வைத்துள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்துப் பேசிய பெல்ஜியத்தின் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ, பெரிய ஐரோப்பிய நாடுகள் பாலத்தீனத்தை அங்கீகரிக்க காத்திருப்பதாகக் கூறினார். மேலும், ‘அடையாளபூர்வமான செயல்பாடு எதற்கும் தீர்வாகாது,’ என்றும் தெரிவித்தார்.

இதுவரை 139 நாடுகள் பாலத்தீனத்தை முறையாக அங்கீகரித்துள்ளன.

மே 10ஆம் தேதி நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் ஐநா சபையின் முழு உறுப்பினர் அந்தஸ்திற்காக, பாலத்தீனத்தை ஆதரித்து மொத்தமுள்ள 193 உறுப்பு நாடுகளில் 143 நாடுகள் வாக்களித்தன.

தற்போது ஐநா சபையில் பாலத்தீனம் ஒரு சில மேம்படுத்தப்பட்ட உரிமைகளுடன் பார்வையாளர் அந்தஸ்தை பெற்றுள்ளது. இருப்பினும், அதனால் ஐநா சபையில் வாக்களிக்க முடியாது.

பாலத்தீனத்தை அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளும் அங்கீகரித்துள்ளன.

ஐரோப்பாவில் உள்ள ஒரு சில சிறு நாடுகளும் பாலத்தீன அரசை ஏற்கெனவே அங்கீகரித்துள்ளன. அதில் முன்னாள் சோவியத்தை சேர்ந்த நாடுகளான ஹங்கேரி, போலந்து, ருமேனியா, செக்கியா, ஸ்லோவாக்கியா, பல்கேரியா ஆகிய நாடுகள் அடங்கும். இவை 1988ஆம் ஆண்டு நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட நாடுகள். இதுதவிர ஸ்வீடன் மற்றும் சைப்ரஸ் உள்ளிட்ட நாடுகளும் பாலத்தீன அரசை அங்கீகரித்துள்ளன.

ஆனால் பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், மத்திய கிழக்கில் நீண்ட காலமாக நிலவி வரும் மோதலுக்கு வேண்டிய அரசியல் தீர்வின் ஒரு பகுதியாக மட்டுமே பாலத்தீன அரசை அங்கீகரிப்பதாகக் கூறுகின்றன.