ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 22 டிசம்பர் 2024 (12:07 IST)

கட்டணம் செலுத்தாததால் இண்டர்நெட் இணைப்பு துண்டிப்பு: கடன்கார மாநிலமாக மாறும் தமிழகம்: அண்ணாமலை

Annamalai Stalin
திமுக ஆட்சியில், தமிழகம் கடன்கார மாநிலமாக மாறியிருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
தமிழகம் முழுவதும் உள்ள 385 மாவட்ட கல்வி அலுவலகங்களில் இணையதள இணைப்புக்கான கட்டணம், பல மாதங்களாகச் செலுத்தப்படாததால், இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிய வருகிறது. இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஆசிரியர்களின் சம்பளப் பட்டியல் தயாரிப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிய வருகிறது. 
 
திமுக ஆட்சியில், தமிழகம் கடன்கார மாநிலமாக மாறியிருக்கிறது. சுமார் 8.5 லட்சம் கோடி ரூபாய் வரை கடனில் இருக்கிறது தமிழகம். வாங்கும் கடன் முழுவதும், அன்றாடச் செலவுகளுக்குத் தான் பயன்படுகிறதே தவிர, கடன் வாங்கும் உண்மையான நோக்கத்துக்குப் பயன்படுத்தப்படுவதில்லை என்று, சிஏஜி தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
 
மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கான இணைய தள இணைப்புக் கட்டணம் கூடச் செலுத்த முடியாமல், அன்றாடச் செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலையில் இருக்கிறதென்றால், உண்மையில், திமுக அரசு, தமிழக அரசின் நேரடி வரி வருமானத்தையும், ஜிஎஸ்டியில் தமிழகத்தின் பங்காகக் கிடைக்கும் சுமார் 70% நிதியையும் எந்த வகையில் செலவு செய்கிறது என்ற கேள்வி எழுகிறது. இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது?
 
திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா தமிழக அரசு? முதலமைச்சர் திரு முக ஸ்டாலின்
 அவர்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
 
 
Edited by Siva