1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: புதன், 4 ஜனவரி 2023 (22:27 IST)

கஞ்சிபானி இம்ரான்: பிணையில் வந்த குற்றக்குழு தலைவன் வெளிநாடு தப்பியதாக இலங்கை போலீஸ் தகவல்

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக தப்பிச் சென்றதாக கூறப்படும் இலங்கையின் பிரபல நிழலுலக குற்றச்செயல்கள் குழு தலைவரான கஞ்சிபானி இம்ரானுக்கு பிணை வழங்க கையெழுத்திட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
கொழும்பு நீதிமன்ற மேலதிக நீதவான் கேவிந்த பெரேரா, முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வரும் கஞ்சிபானியை கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என குற்றம்சாட்டி இலங்கை போலீஸ் கைது செய்திருந்தது.
 
அவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி கொழும்பு நீதிமன்றம் பிணை வழங்கியது. மேலும், 50 லட்சம் ரூபா சரீர பிணையில் கஞ்சிபானி இம்ரானுக்கு பிணை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்த பிணை விண்ணப்பத்தில், கஞ்சிபானி இம்ரானின் தாய், சகோதரர் உள்ளிட்ட மூவர் கையெழுத்திட்டிருந்தனர்.
 
கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமை பெற மீண்டும் விண்ணப்பமா?
 
நிபந்தனை அடிப்படையிலான இந்த பிணையின் அம்சமாக அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
 
அத்துடன், மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை, கொழும்பு - மாளிகாவத்தை போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிமன்றம் கஞ்சிபானி இம்ரானுக்கு உத்தரவிட்டிருந்தது.
 
இந்த நிலையில், கஞ்சிபானி இம்ரான், தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் வழியாக தமிழகத்திற்குள் கடந்த டிசம்பர் மாதம் 25ஆம் தேதி நுழைந்துள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவு தகவல் வெளியிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
 
இந்த தகவலை பகுதியளவு உறுதிப்படுத்தும் விதமாக, கஞ்சிபானி இம்ரான், மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆஜராகவில்லை. இந்த தகவலை போலீஸார் நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 4) தெரிவித்தனர்.
 
மேலும், கஞ்சிபானி இம்ரான், ரகசியமான முறையில் வெளிநாடு சென்று விட்டதாக போலீஸார் கூறினர்.
 
இதை கேட்ட நீதிபதி, கஞ்சிபானிக்கு பிணை வழங்க கையெழுத்திட்ட அவரது தாய், சகோதரன் உள்ளிட்ட மூவரை உடனடியாக ஆஜர்படுத்துமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
 
அதன்படி, கஞ்சிபானி இம்ரானின் தாய், சகோதரன் உள்ளிட்ட மூவரை எதிர்வரும் மார்ச் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது ஆஜராக வேண்டும் என்று நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.
 
யார் இந்த கஞ்சிபானி இம்ரான்?
 
இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகம், கொலை உள்ளிட்ட முக்கிய குற்றச் செயல்களில் ஈடுபடும் நிழல் உலக குழுவின் தலைவராக கஞ்சிபானி இம்ரான் என அழைக்கப்படும் மொஹமட் நஜிம் மொஹமட் இம்ரான் செயல்பட்டு வருகிறார்.
 
இலங்கையில் தேடப்படும் பிரதான குற்றவாளியாக இவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், கஞ்சிபானி இம்ரான் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருப்பதாக தெரிய வந்துள்ளது.
 
துபாயில் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி கஞ்சிபானி இம்ரான் உள்ளிட்ட பலர் சர்வதேச போலீஸாரின் ஒத்துழைப்புடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.
 
அவ்வாறு கைது செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரான் உள்ளிட்ட 6 பேர் அதே ஆண்டு, நாடு கடத்தப்பட்ட நிலையில், அவர்களை இலங்கை போலீஸார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
 
பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு கொழும்பு நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் தேதி பிணை வழங்கியது.
 
இவ்வாறான நிலையிலேயே, கஞ்சிபானி இம்ரான், இந்தியா நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இதேவேளை இந்திய உளவுப்பிரிவு வட்டாரங்களில் விசாரித்தபோது, கஞ்சிபானி தமிழ்நாட்டுக்குள் வரவில்லை என்றும் அவர் நேபாளம் வழியாக பாகிஸ்தானுக்குச் சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், கஞ்சிபானி விவகாரத்தில் அவர் இந்தியாவில் இருந்தால் அவரை கைது செய்து நாடு கடத்த வேண்டும் என்று தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிகவில் ஒரு பிரிவுக்கு தலைமை தாங்கும் ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.