வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (00:38 IST)

ஜான்சன் & ஜான்சனின் ஜேன்சன் கோவிட்-19 கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி: ஒரு டோஸ் போதும்

புதிய தடுப்பூசி
 
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் 'ஜேன்சன்' கோவிட்-19 தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டர் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
 
இத்துடன் சேர்த்து இந்தியாவில் இதுவரை ஐந்து கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரகாலப் பயன்பாடு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
ஜேன்சன் கோவிட்-19 தடுப்பூசி (Janssen COVID-19 Vaccine) எனப் பெயரிடப்பட்டுள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி குறித்த 10 முக்கியத் தகவல்களைப் பார்ப்போம்.
 
1.ஏற்கனவே இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ள கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் - வி மற்றும் மாடர்னா ஆகிய தடுப்பூசிகள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை ஒரு டோஸ் செலுத்தினால் போதும். இந்த தடுப்பூசி ஒரேயொரு டோஸ் என்பதால், இந்த மருந்துக்கான மருத்துவமனை அனுமதிகளும், மருத்துவப் பணியாளர்களும் குறைவாகவே தேவைப்படும்.
 
2.பயாலஜிகல் - இ நிறுவனத்துடன் ஜான்சன் அண்ட் ஜான்சன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் இந்தத் தடுப்பூசி தயாரித்து விநியோகம் செய்யப்படும்.
 
3.அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் நடத்திய பரிசோதனையில், மோசமான உடல்நலக் குறைவு ஏற்படாமல் பாதுகாப்பதில் 85 சதவீதத்துக்கு மேல் செயல் திறனைக் காட்டியது ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பு மருந்து.
 
4.கொரோனாவால் மிதமாக பாதிக்கப்பட்டவர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் அதன் செயல்திறன் 66 சதவீதமாக இருக்கிறது.
 
ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி
 
இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி கொரோனா தடுப்பூசி வழங்கல் தொடங்கியது.
 
5.சாதாரண சளியை (common cold) உண்டாக்கும் வைரஸைக் கொண்டு ஜான்சன் & ஜான்சன் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்கப்பட்டிருக்கிறது. சளி வைரஸ் மனிதர்களை பாதிக்காத வண்ணம் தடுப்பு மருந்து உருவாக்கப்படுகிறது. இந்த தடுப்பூசி, கொரோனா வைரஸின் ஒரு பகுதி மரபணுவை நம் உடலுக்குள் பாதுகாப்பாகக் கொண்டு செல்கிறது. நம் உடல் கொரோனா வைரஸை அடையாளம் கண்டு எதிர்த்துப் போரிட, இதுவே போதுமானது என்கிறது அந்த நிறுவனம். ஆக்ஸ்ஃபோர்டு & ஆஸ்ட்ராசெனீகா தடுப்பு மருந்தில் பயன்படுத்தப்பட்ட அதே முறை இது.
 
6. ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் இந்த தடுப்பு மருந்துக்கு அனுமதியளித்த முதல் நாடு அமெரிக்காதான். சென்ற பிப்ரவரி இறுதியில் அமெரிக்கா இந்த அனுமதியை வழங்கியது.
 
7.ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு அரிதாக ரத்தம் உறைதல் கோளாறு உண்டானதால் அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இதன் விநோயோகத்தை சென்ற ஏப்ரல் மாதம் நிறுத்தி வைத்தன. பின்னர் இந்தத் தடை நீக்கப்பட்டது.
 
ஜான்சன் & ஜான்சன் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு & ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசிகள் ஒரே மாதிரி செயல்படுகின்றன. இவற்றால் ரத்தம் உறையும் வாய்ப்பு மிகவும் அரிதானது என்கின்றனர் வல்லுநர்கள்.
 
ஜான்சன் & ஜான்சன் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு & ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசிகள் ஒரே மாதிரி செயல்படுகின்றன. இவற்றால் ரத்தம் உறையும் வாய்ப்பு மிகவும் அரிதானது என்கின்றனர் வல்லுநர்கள்.
 
8.68 லட்சம் பேரில் 6 பேருக்கு மட்டுமே ரத்தம் உறைதல் உண்டானதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (US Food and Drug Administration ) அப்போது தெரிவித்திருந்தது. (இந்தியாவில் 'கோவிஷீல்டு' எனும் பெயரில் விநியோகிக்கப்படும் ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் அரிதினும் அரிதான ரத்தம் உறைதல் கோளாறு சில நாடுகளில் உண்டானது குறிப்பிடத்தக்கது.)
 
9.ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி தொடர்புடைய ரத்தம் உறைதல் கோளாறு 'மிகவும் அரிதானது' என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் அமைப்பான ஐரோப்பிய மருந்துகள் முகமையும் (European Medicines Agency ) கூறியிருந்தது.
 
10.ரத்தம் உறைதல் குறித்த பரவலான கவலைகள் எழுந்தபின், இந்தத் தடுப்பு மருந்தால் கிடைக்கும் நன்மைகள் இதனால் உண்டாக வாய்ப்புள்ள பாதிப்புகளை விடவும் அதிகம் என்று ஐரோப்பிய மருந்துகள் முகமை தெரிவித்தது.