வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 17 ஆகஸ்ட் 2019 (19:33 IST)

இந்தியாவில் கட்டாயம் பயணிக்க வேண்டிய 15 இடங்கள்

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்திற்கு முன்பு, இந்தியர்கள் நாட்டின் 15 சுற்றுலா தளங்களுக்கு பயணிக்க முயற்சிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி சுதந்திர தின விழாவில் பேசினார்.

செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து பேசிய அவர், "இந்தியர்கள் சுற்றுலாவிற்காக வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள் என்பது நமக்கு தெரியும். ஆனால், 2022ஆம் ஆண்டு, இந்தியா தனது 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும். அதற்குள் இந்தியர்கள் நாட்டிலுள்ள 15 சுற்றுலா தளங்களுக்கு சென்றுவர யோசிக்க வேண்டும்," என்று அவர் பேசினார்.

அவரின் கருத்தின்படி, நாட்டிலுள்ள சுமார் 10 கோடி மக்கள் இந்த குறைந்தபட்ச 15 இடங்களுக்கான பயணத்தை மேற்கொண்டாலும், அது 150 கோடி பயணங்களாகும்!

பல்வேறு மொழி, கலாசாரம், உணவு என வேற்றுமையில் ஒற்றுமையை கொண்டாடும் இந்தியாவில், மக்கள் பயணிக்க சிறந்த இடங்கள் பல இருந்தாலும், அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 இடங்களை தொகுத்து வழங்குகிறது பிபிசி.
 
உதகமண்டலம், தமிழ்நாடுவிமானம்: கோவை விமான நிலையத்திலிருந்து ஏறத்தாழ 88 கி.மீ

ரயில்: மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து 40 கி.மீ

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி என்று அழைக்கப்படும் உதகமண்டலம்., மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் 2240 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 1800களில் வெள்ளையர்களால் மேம்படுத்தப்பட்ட இந்த பகுதி தோடர் இன மக்களின் பூர்விக இடமாகவும் உள்ளது.

கன்னியாகுமரி, தமிழ்நாடு

விமானம்: திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து 67 கி.மீ

ரயில்: திருக்குறள் எக்ஸ்பிரஸ் மற்றும் ஜம்மு தவி ஹிம்சாகர் ஆகிய ரயில்கள் கன்னியாகுமாரி ரயில் நிலையம் சென்றடையும்.

இந்திய நாட்டின் தென்கோடி பகுதியான கன்னியாகுமாரி ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், கேப் கொமொரியன் என்று அழைக்கப்பட்டது.

133 அடி உயரமுள்ள திருவள்ளுவரின் சிலையோடு கம்பீரமாக காட்சியளிக்கும் கடற்கரை பகுதியில், ஒரே நேரத்தில் சூரியன் மறைவதையும் நிலவின் உதயத்தையும் பார்க்க மாலையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

காசிரங்கா தேசிய பூங்கா, அஸ்ஸாம்

விமானம்: ராவ்ரியா விமான நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட 74 கி.மீ - திமாபூர் விமான நிலையத்திலிருந்து 83 கி.மீ

யுனஸ்கோ பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட இந்த தேசிய பூங்கா, ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களுக்கு பெயர்போனது.

உலகின் பல பகுதிகளிலிருந்தும் இங்கு வரும் மக்கள், யானை மீது ஏறி அமர்ந்து, ஒற்றை தந்தம் கொண்ட காண்டா மிருகத்தை பார்ப்பது மிகவும் அதிசயமான காட்சி.

காசிரங்காவை சென்றடைய சாமின் ஜோர்ஹட்டிலுள்ள ரவுரியா விமான நிலையம் செல்வது உதவியாக இருக்கலாம். அங்கிருந்து, 74 கி.மீ பயணித்தால் கசிரங்காவை அடையலாம். அதைத்தவிர நாகாலாந்து மூலமாக பயணிப்பவர்கள், திமாபூர் விமான நிலையத்தில் இறங்கி 83 கி.மீ தூரம் பயணிக்க வேண்டும்.

தாஜ் மஹால், உத்தர பிரதேசம்

தாஜ் மஹால் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தாஜ் மஹாலைத்தொடர்ந்து, அதே நகரில் பிரபல வதேபூர் சிக்கிரி கோட்டையும் அங்கு அமைந்துள்ளது. பல்வெறு ரயில் சேவைகள் மற்றும் வசதியான சாலை வசதிகளை கொண்டது ஆக்ரா நகரம். இதனால், விமானம் அல்லது ரயில் மூலம் பயணிப்பவர்கள் பெரும்பாலும் டெல்லியிலிருந்து தாஜ்மஹாலை அடைகின்றனர்.

புத்தகயா, பிஹார்

பிகாரிலுள்ள பிரபல இடங்களில் ஒன்று புத்தகயா. இந்து மற்றும் புத்த மதங்களை தழுவுவோருக்கு இந்த தளம் புனித இடமாக விளங்குகிறது. புத்தருக்கு இங்குதான் ஞானம் கிடைத்து என்ற நம்பிக்கையும் உள்ளது. பல்கு நதிக்கரையில் அமைந்துள்ள பரபரப்பான நகரமான கயா, மேலும் பல கோவில்களை கொண்டுள்ளது.

கயாவிற்கு செல்ல சாலை, ரயில் மற்றும் விமான சேவைகள் பல ஊர்களிலிருந்து இருந்தாலும், விமானம் மற்றும் ரயில் பயணங்களே உகந்ததாக கருதப்படுகிறது.

கஜுராஹோ, மத்திய பிரதேசம்

சிலை மற்றும் வேலைபாடுகளுக்கு மிகவும் பெயர்போன இடம் கஜுராஹோ. மத்திய பிரதேசத்தின் புந்தேல்கண்ட் பகுதியில் அமைந்துள்ள இந்த பிரபல சுற்றுலாத்தளம், மிகவும் சிறிய நகரம் ஆகும். இந்தியாவின் கட்டடக்கலைக்கு மிகவும் சிறந்த எடுத்துக்காட்டாக கருதப்படுவது கஜுராஹோ.

கஜுராஹோவிற்கு செல்ல சாலை, ரயில் மற்றும் விமான பயணங்களை மேற்கொள்ள முடியும். டெல்லி மற்றும் வாரணாசியிலிருந்து விமான வழியாக கஜுராஹோ விமான நிலையத்தை அடைய முடியும். அங்கிருந்து 8 கி.மீ தூரத்தில் இந்த ஊரை அடைய முடியும்.

வாரணாசி, உத்திர பிரதேசம்

பனாரஸ் அல்லது வாரணாசி நகரம் இந்து, பௌத்தம் மற்றும் சமண மக்களின் புனித இடமாக கருதப்படுகிறது. கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள இந்த நகரம், இந்துக்களின் புனித நீராடும் நகரமாக உள்ளது. சார்நாத், காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் இங்குள்ளன.

வாரணாசியை சென்றடைய பல்வேறு விமான சேவைகள் உள்ளன. மேலும், சென்னை, டெல்லி, மும்பை என இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களிலிருந்தும் வாரணாசிக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

சசன் கீர், குஜராத்

குஜராத்தின் சோம்நாத் மாவட்டத்திலுள்ள கீர் வனப்பகுதியில்தான் ஆசியாவின் சிங்கங்கள் வாழ்கின்றன. இந்த பகுதியில் வாழும் மக்கள் மல்தாரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இந்த மக்களின் வாழ்க்கைமுறை தனித்துவமான கலாசாரத்தை குஜராத் மக்களிடம் சேர்க்கிறது. இங்கு சிங்கங்கள் சுதந்திரமான வாழ்கின்றன. சில நேரங்களில் அவற்றை அருகாமையிலுள்ள கிராமங்களிலும் பார்க்க முடிகிறது. 1931ஆம் ஆண்டு 20ஆக இருந்த இந்த சிங்கங்களின் எண்ணிக்கை 2015இல் 523ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் இங்கு மட்டுமே நான்கு கொம்புகள் கொண்ட மான்களை காண முடியும்.

டையூவின் விமான நிலையத்திலிருந்து 64 கி.மீ தொலைவில் உள்ளது கீர் காடுகள். மேலும், ராஜ்கோட் பகுதியிலிருந்து 170 கி.மீ சாலை வழியாக பயணித்தும் இதை அடையமுடியும்.

கச் பாலைவனம், குஜராத்

கச் பாலைவனத்தில், இரண்டு பாலைவனங்கள் உள்ளன. 30 ஆயிர்ம் சதுர கி.மீ பரந்து விரிந்துள்ள இந்த இடம் பார்ப்பவர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், அங்கு `ரன் உத்சவ்` என்ற பெயரில் விழா கொண்டாடப்படுகிறது. சிறந்த உணவு, இசை, கலாசாரம் என களைக்கட்டுகிறது இந்த விழா. இது மட்டுமின்றி, குஜராத்தின் அகழ்வாராச்சி பகுதிகளில் ஒன்றான துவாலாவீரா இங்கிருந்து 280 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

புஜ் விமான நிலையத்திலிருந்து 53 கி.மீ தூரத்தில் இந்த பாலை வனத்தை அடைய முடியும். மேலும், அதே ஊரிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புஜ் ரயில் நிலையம் பாலை வனப்பகுதியிலிருந்து 70 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

ராமப்பா ஆலயம், தெலங்கானா

ராமலிங்கேஸ்வரர் அல்லது ராமப்பா ஆலயம் என்று அழைக்கப்படும் இந்த கோவில் வாரங்கல் மாவட்டத்திலுள்ள பாலம்பெட் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் 1213ஆம் ஆண்டை சேர்ந்தது என்றும் கூறப்படுகிறது.

வாரங்கல் நகரிலிருந்து 70 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு சாலை மார்க்கமாகவும் செல்ல முடியும். ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து 157 கி.மீ தொலைவில் இது அமைந்துள்ளது.

போரா குகைகள், ஆந்திர பிரதேசம்

நூற்றாண்டுகளுக்கு மேலாக அழகிய கற்களின் மடிப்புகளைக்கொண்டு காலத்தின் சாட்சியாக நிற்கும் போரா குகைகள். 705 மீட்டர் உயரத்துடன், உலகின் மிகப்பெரிய குகைகளுள் ஒன்றாக இதுவும் உள்ளது. கோஸ்தனி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த குகைகளை அழகிய மலைகளும் சூழ்ந்துள்ளன.

விசாகப்பட்டினம் நகரிலிருந்து 90 கி.மீ தொலைவில் அரக்கு பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது போரா குகைகள். ரயில் சேவை மூலம் பயணித்தால், அழகிய 30 குகைகளை கடந்து விசாகப்பட்டினம் ரயில் நிலையம் வழியாக இந்த 100 கி.மீட்டரை 5 மணி நேரத்தில் கடக்க முடியும்.

ஆலுப்புழா, கேரளம்

கிழக்கின் வெனிஸ் நகரம் என்று கருதப்படும் ஆலப்புழா நகரம், அதன் இயற்கை வளத்திற்கு பெயர்போனது. இங்குள்ள படகுகளில் தங்கி, தண்ணீரில் மீன் பிடித்து சாப்பிடுவது சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விஷயமாகும். ஆலுப்புழாவிற்கு நேரடியாக ரயில் மூலமாகவோ, கொச்சின் விமான நிலையத்திலிருந்தும் பயணிக்கலாம்.

ஹம்பி, கர்நாடகம்

யுனஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அங்கிகரிக்கப்பட்ட இந்திய சுற்றுலா இடங்களில் முக்கியமான ஒன்று ஹம்பி நகரம்.

கர்நாடகாவின் ஹொஸ்பெட் பகுதியில் அமைந்திருக்கும் ஹம்பி, பழங்கால நகர கட்டமைப்பின் மீதம், வரலாறு என பலவற்றை அதனுள் கொண்டுள்ளது. பல கோவில்களின் இடமாக காணப்படும் ஹம்பி, பக்தர்களுக்கு மடுமின்றி, பயணங்கள் மீது அதிக ஈடுபாடு உள்ளவர்களுக்கும் விருப்பமான இடமாக உள்ளது.

பொதுப் போக்குவரத்து நிறைந்துள்ள ஹம்பிக்கு விமானம் மூலம் பயணிக்க வேண்டுமென்றால், நீங்கள் பெங்களூருவை விமான நிலையத்தை அடைந்து, அங்கிருந்து ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயிலை பிடிக்கவேண்டும்.

அமிர்தசரஸ் சாகிப், பஞ்சாப்

சீக்கியர்களின் முக்கிய நகரமாக உள்ளது அமிர்தசரஸ். இங்குள்ள ஹர்மந்திர் சாகீப் என்று அழைக்கப்படும் பொற்கோவில், இந்த நகரின் முக்கிய இடமாக உள்ளது.

1919ஆம் ஆண்டு, ஏப்ரல் 13ஆம் தேதி, ஆங்கிலேய ராணுவ அதிகாரியான ஜெனரல் எட்வர்ட் டயரால் பலரும் கொல்லப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தேரிய இடமும் இங்குதான் உள்ளது.

ராமாயணத்தை எழுதிய வால்மிகியின் ஆசிரமமான பகவான் வால்மிகி திரத் ஸ்தல் அமிர்தரஸில் உள்ளது. மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான வாகா - அட்டாரி எல்லை அங்கு அமைந்துள்ளதால், அமிர்தசரஸிற்கு செல்லும் யாரும், எல்லையில் மாலை வேளையில் நடக்கும் கொடி இறக்க நிகழ்ச்சியை தவற விடுவதில்லை.

போக்குவரத்தை பொருத்தவரையில், சாலை, ரயில் மற்றும் விமானம் என அனைத்து வசதிகளையும் கொண்ட நகரம் அமிர்தசரஸ்.

ரூப் நகர், பஞ்சாப்

சிந்து சமவெளி நாகரீகம் குறித்து ஆய்வுகள் நடத்தப்படும் இடங்களில் ஒன்றாக ரூப் நகர் உள்ளது. அகழ்வாராச்சி கண்டெடுப்புகளின் அருங்காட்சியகமும் அங்கு அமைந்துள்ளது.

ஹரப்பா சமூகத்தின் முதல் அகழ்வாய்வும் இங்குதான் நடந்துள்ளது. சந்திரகுப்தரின் தங்கம், செப்பு மற்றும் தாமிரம் ஆகிய காசுகள் இங்குதான் கண்டெடுக்கப்பட்டன.

பஞ்சாப்பின் தலைநகரான சண்டிகரிலிருந்து வெறும் 40 கி.மீ தொலைவில் உள்லது ரூப் நகர். இங்கு ரயிலிலும் பயணிக்கலாம்.

டல்லௌசி, இமாச்சல பிரதேசம்

1850ஆம் ஆண்டு, டல்லௌசி பிரபுவால் உருவாக்கப்பட்ட இந்த இடம், அழகிய மலைகளையும், செழிப்பான இயற்கை வளமும் கொண்டது. ஆங்கிலேயர்கள் காலத்து கட்டுமானங்கள் நிறைந்த இந்த பகுதி, பொதுவாக கோடை காலங்களில் அதிக சுற்றுலா பயணிகளை வரவேற்கும்.

சிறந்த சாலை வசதிகள் கொண்ட இந்த மலைப்பகுதிக்கு விமானம் மூலம் பயணிக்க விரும்புவோர் கங்கராவில் உள்ள ஜக்கல் விமான நிலையத்தை அடைந்தபின் சாலை மார்க்கமாக செல்ல வேண்டும். ரயில் பயணம் செய்ய விரும்புவோர், பதான்கோட் ரயில் நிலையத்தில் இறங்கி சாலை வழியாக 87 கி.மீ பயணிக்க வேண்டும்.

அந்தமான் நிகோபார் தீவுகள்

இந்தியாவின் கிழக்குப்பகுதியில் இயற்கை அழகுடன் காட்சியளிக்கும் அழகிய இடம் அந்தமான் நிக்கோபார் தீவுகள். சுமார் 500 சிறிய தீவுகளைக்கொண்ட பெரிய தொகுப்பாக இது உள்ளது. இங்கு 96 வனவிலங்கு சரணாலயங்கள், 9 தேசிய பூங்காக்கள் உள்ளன.

அந்தமானிற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விமான சேவைகள் உள்ளன. அவை போர்ட் பிளேயரில் உள்ள வீர் சாவர்கர் விமான நிலையத்தை அடையும்.

கப்பல் பயணம் மேற்கொள்ள விரும்புவோருக்காகவே மாதத்தின் மூன்று அல்லது நான்கு முறை சென்னை மற்றும் கொல்கத்தாவிலிருந்து கப்பல்கள் அந்தமானிற்கு பயணிக்கின்றன. வானிலை சிறப்பாக இருக்கும் சூழலில், இந்த பயணம் 50-60 மணி நேரம் நீள்கின்றன.
அஜந்தா குகைகள், மகாராஷ்ட்ராமகாராஷ்ட்ராவின் ஔரங்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது அஜந்தா வெரூல் குகைகள். இந்த பௌத்த குகைகள், கி. மு 2ஆம் நூற்றாண்டிலிருந்து 480ஆம் ஆண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று குறிப்பிடப்படுகிறது.
ஔரங்காபாத் நகரிலிருந்து 2.5 மணிநேர பயணத்தில் அஜந்தா உள்ளது. ரூ பகுதி, நகரிலிருந்து 30நிமிட பயணம் மட்டுமே.

தர்கார்லி, மகாராஷ்ட்ரா

அரபிக்கடலின் கடற்கரை கிராமமான தர்கார்லி, அதன் கடற்கரையின் அழகு மற்றும் வெள்ளி கடல் மணலிற்கு பெயர் போனது. 17ஆம் நூற்றாண்டில் மராட்டியர்கள் காலத்தில் கட்டப்பட்ட சிந்துதுர்க் கோட்டை இங்கு உள்ளது. இதன் கிழக்குப் பகுதியில் அமைதியான கார்லி நதி ஓடுகிறது. இங்கு டால்பின்கள் அதிகம் உண்டு.

மும்பை நகரிலிருந்து 546 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்தை நீங்கள் பேருந்து மற்றும் ரயில் மூலம் வந்தடையலாம்.