ஒரே மொய் விருந்தில் நான்கு கோடி ரூபாய் திரட்டிய விவசாயி

Last Modified சனி, 27 ஜூலை 2019 (17:33 IST)
தினத்தந்தி: மொய் விருந்தின் மூலம் நான்கு கோடி ரூபாய் திரட்டிய விவசாயி


 
புதுக்கோட்டை அருகே, ஒரு டன் ஆட்டுக்கறி அசைவ உணவுடன் விவசாயி நடத்திய மொய்விருந்தில் ரூ.4 கோடி வசூலானது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
 
"புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சில கிராமங்களில் நலிந்த நிலையில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியாக தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், கல்யாணம், சடங்குகள் போன்ற விழாக்களுக்கு பணத்தேவை இருப்பவர்களும் இந்த மொய் விருந்தை நடத்துவதுண்டு. இந்த விருந்தில் நண்பர்கள், உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டு மொய் செய்வது வாடிக்கையாக நடந்து வருகிறது.
 
இந்த நிலையில் நேற்று வடகாட்டில் கிருஷ்ணமூர்த்தி என்ற விவசாயி பெரிய அளவில் மொய் விருந்து நடத்தினார். இதற்காக பெரிய பந்தல் அமைக்கப்பட்டு, விருந்து வைக்கப்பட்டது.
 
இந்த மொய் விருந்தையொட்டி, சுமார் 50 ஆயிரம் அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு உற்றார், உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டு இருந்தன. 200-க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் 1 டன் ஆட்டுக்கறி சமைக்கப்பட்டு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. அசைவம் சாப்பிடாதவர்களுக்கு சைவ உணவு தனியாக பரிமாறப்பட்டது. சுமார் 100 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
 
இந்த நிலையில் மாலை விருந்து முடிந்த நிலையில் வசூல் செய்யப்பட்ட மொய் பணம் எண்ணப்பட்டது. அதில் ரூ.4 கோடி வரை கிடைத்திருந்தது. இந்த ஆண்டில் இதுவரை நடந்த மொய்விருந்துகளில் தனிநபரின் அதிகபட்ச மொய் வசூல் இது என்று கூறப்படுகிறது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் மேலும் படிக்கவும் :