வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2019 (18:07 IST)

பெண் குழந்தைகளே பிறக்காத இந்தியாவின் 132 கிராமங்கள் உண்மையா?

இமயமலைத் தொடரில் அமைந்துள்ள சிறிய மாநிலமான உத்தராகண்டில், கடந்த மூன்று மாதங்களாக 132 கிராமங்களில் ஒரு பெண் குழந்தைகூட பிறக்கவில்லை என்ற செய்தி இந்த வாரத்தின் தொடக்கத்தில் வெளிவந்தபோது, அது பலரையும் பீதியில் ஆழ்த்தியதுடன், அரசாங்க விசாரணைக்கும் வித்திட்டது.


 
மலைகளும், அடர்ந்த வனப்பகுதிகளும் நிறைந்த உத்தரகாசியை சுற்றியுள்ள சுமார் 550 கிராமங்கள் மற்றும் ஐந்து நகர்ப்புற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஒரு பெண் குழந்தைகூட பிறக்கவில்லை என்ற செய்தி வெளிவந்தது. ஏற்கனவே, இந்தியாவில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமான முறையில் அடையாளம் கண்டு பெண் குழந்தைகளை மட்டும் கருவிலே கலைக்கும் சம்பவங்களின் காரணமாக பாலின விகிதாச்சாரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுக்கொண்டிருக்கும் நிலையில், இச்செய்தி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
 
ஆனால், இந்த தகவலின் உண்மைத்தன்மையை பலரும் ஆராயவில்லை.
 
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் இங்குள்ள 132 கிராமங்களில் 216 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், ஒரு பெண் குழந்தைகூட பிறக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அரசு அதிகாரிகளோ இதே காலக்கட்டத்தில் 180 பெண் குழந்தைகள் பிறந்துள்ளதை உறுதி செய்துள்ளனர். ஆனால், இதே காலக்கட்டத்தில் சுமார் 129 கிராமங்களில் ஒரு ஆண் குழந்தைகூட பிறக்கவில்லை என்று அதிகாரிகளின் தரவு கூறுகிறது. மீதமுள்ள 166 கிராமங்களில், 88 பெண் குழந்தைகளும், 78 ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளார்.


 
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் உத்தரகாசியில் 961 குழந்தைகள் பிறந்துள்ளன. அவற்றில், 479 பெண் குழந்தைகள் மற்றும் 468 ஆண் குழந்தைகள் அடக்கம் (எஞ்சியுள்ளவை இறந்து பிறந்திருக்கக் கூடும்). இது தேசிய சராசரியை விட, ஆண்களை காட்டிலும் அதிக பெண்களை கொண்ட மாநிலம் எனும் பெயரை தக்க வைக்கும் வகையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதாவது, உத்தரகாசியை பொறுத்தவரை, 1,000 ஆண்களுக்கு 1,024 பெண்கள் உள்ள நிலையில், தேசிய அளவில் பார்க்கும்போது 1,000 ஆண்களுக்கு 933 பெண்கள் என்பதே சராசரியாக உள்ளது.
 
சுகாதார பணியாளர்கள் மேம்போக்காக எடுத்துக்கொடுத்த தரவை முதலாக கொண்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டதே இந்த தவறான செய்தி பரவியதற்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


 
வியர்வை சிந்தி நாகநதியை உயிர் பெறவைத்த வேலூர் பெண்கள்
கரும்பு தோட்டங்களில் பணி புரிவதற்கு கருப்பையை நீக்கும் பெண்கள்
"பெண் குழந்தைகள் பிறக்காத கிராமங்கள் குறித்த விவகாரத்தில் ஊடகங்கள் தகவலை தவறாக எடுத்துக்கொண்டுள்ளன என்றே எனக்கு தோன்றுகிறது. இதுதொடர்பாக தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை என்பதால் நாங்கள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்" என்று கூறுகிறார் உத்தரகாசி மாவட்ட உயரதிகாரி ஆஷிஷ் சௌகான்.
 
எனவே, ஊடகங்கள் வெளியிட்ட தரவின் உண்மைத்தன்மையை 82 கிராமங்களில் பரிசோதிப்பதற்காக பணியில் 26 அதிகாரிகள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.


 
எங்கே தவறு நேர்ந்தது?
 
ஒருவேளை கிராமம் வாரியாக சென்று கர்ப்பிணிகள் மற்றும் பிறந்த குழந்தைகள் குறித்த தகவலை திரட்டும் சுகாதார பணியாளர்கள் கணக்கீட்டில் தவறு செய்திருக்கக் கூடும் அல்லது நிறைவுசெய்யப்படாத தரவை மையமாக கொண்டு இந்த செய்தி வெளியிடப்பட்டிருக்கலாம்.
 
உத்தரகாசியின் ஏனைய பகுதிகளை போன்று அதிக மக்கள் தொகையை கொண்டதல்ல. இங்குள்ள ஒவ்வொரு கிராமத்தின் சராசரி மக்கள் தொகை சுமார் 500 இருக்கும். அதுவும் குறிப்பாக, சில குக்கிராமங்களில் 100க்கும் குறைவானவர்களே வசிக்கின்றனர். அதுபோன்ற இடங்களில், மொத்தமே 20க்கும் குறைவான குடும்பங்களே வசிக்கின்றன. எனவே, இதுபோன்ற சிறிய கிராமங்களில் பாலின விகிதம் சரியாக இல்லையென்றால், அது ஒட்டுமொத்த மாவட்டத்தையும் பாதிக்கக் கூடும் என்று ஆசிஷ் கூறுகிறார்.
 
நாட்டின் ஏனைய ஊரகப் பகுதிகளுடன் ஒப்பிடும்போது, தங்களது பகுதியில் பாலின அடிப்படையிலான பாகுபாடு குழந்தைகளிடத்தில் காண்பிக்கப்படுவதில்லை என்று உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
 
"ஆணாக இருந்தாலோ, பெண்ணாக இருந்தாலோ, பிறக்கும் குழந்தை நல்ல உடல்நலனுடன் இருக்க வேண்டுமென்று மட்டுமே நாங்கள் பிரார்த்திக்கிறோம்" என்று ரவாத் எனும் உள்ளூர் பெண்மணி கூறியதாக, 'தி ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
மேலும், இங்குள்ள பெண்கள் பொதுவாக ஆண்களைவிட கடின உழைப்பாளிகள், விவசாயம் செய்வது, புல் வெட்டுவது, பால் கறப்பது, சமைப்பது மற்றும் வீட்டு வேலைகளை செய்வது என்று பல்வேறு வேலைகளையும் பெண்களே செய்கின்றனர். ஆண்கள் மத்தியில் மதுப்பழக்கம் அதிகளவில் காணப்படுகிறது.
 
உத்தரகாசியை பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளாக பெண் சிசுக்கொலை தொடர்பாக ஒரு புகார் கூட பதிவு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
"இங்கு பாலினத்தை கண்டறியும் கருவிகள் மொத்தமே மூன்றுதான் உள்ளன. அவையும் அரசு மருத்துவமனைகளில் மட்டும்தான் இருக்கின்றன. எனவே, பெரும் செலவு மிக்க பரிசோதனைகளையோ, கருக்கலைப்புகளையோ செய்வதற்கு பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இப்பகுதி மக்கள் முயற்சிப்பதில்லை" என்று ஆசிஷ் சௌகான் கூறுகிறார்.