வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 ஜூலை 2021 (13:55 IST)

வன்னியர் உள் ஒதுக்கீட்டிற்கான அரசாணை வெளியீடு: விளைவுகள் என்ன?

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. வன்னியர்கள் நீண்ட காலக் கோரிக்கை இதன் மூலம் நிறைவேறியிருந்தாலும், விரும்பிய விளைவுகள் ஏற்படுமா?

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு இல்லையெனக் கூறி பாட்டாளி மக்கள் கட்சி நீண்ட காலமாக போராட்டங்களை நடத்திவந்த நிலையில், 1989ல் இருந்த தி.மு.க. அரசு, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்குள் "மிகப் பிற்படுத்தப்பட்டோர்" என்ற பிரிவை உருவாக்கியது. அதில் வன்னியர் உட்பட வேறு பல சாதியினரும் இடம்பெற்றனர்.

இருந்தபோதும், வன்னியர்களுக்கு எனத் தனியாக 20 சதவீத உள் ஒதுக்கீடு தர வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கோரிவந்தது. இந்த நிலையில், 2021ல் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாக இது தொடர்பாக ஒரு அவசரச் சட்டத்தை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசு, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அளிப்பதாக அறிவித்தது.

இந்த அவசரச் சட்டத்தை முன்மொழிந்து தமிழக சட்டப்பேரவையில் பேசிய அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, "மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் ஆகியோர் பிற சாதியினருடன் போட்டியிட்டு உரிய பலன்களை, சட்டப்படியான பங்கினைப் பெற இயலவில்லை என்பதாலும் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையில், அரசின் நியமனங்களில் வன்னிய குல சத்ரியர்களுக்கு தனிப்பட்ட ஒதுக்கீடு வழங்கக்கோரி அவர்களிடமிருந்து முறைப்பாடு வந்துள்ளது.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினருக்குள் பல்வேறு பிரிவினர்களுக்காக உள் ஒதுக்கீடு வழங்குவதற்காக பல்வேறு சமூகத்தினரால் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஆய்வுசெய்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினரின் சமமான வளர்ச்சியை உறுதிப்படுத்த, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவனர் (வன்னியர்) 10.5 சதவீதம், சீர் மரபினருக்கு 7 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவீதம் என மூன்று பிரிவுகளாக உள் ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்துள்ளனர். ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள அதற்கேற்ப இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நிறைவேற்ற அரசு முடிவுசெய்துள்ளது." என்று கூறினார்.

மேலும் இது தற்காலிகமான ஏற்பாடுதான் என்பதையும், சாதிவாரிக் கணக்கீடு முடிந்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், தென் மாவட்டத்தில் இந்த சட்டத்துக்கு எழுந்த எதிர்ப்பால் தேர்தல் பிரச்சாரங்களின்போது இது தற்காலிக ஏற்பாடு என்பதை சில அமைச்சர்கள் மீண்டும் வலியுறுத்திக் கூறவேண்டிய நிலை ஏற்பட்டது.

தேர்தல் முடிந்து மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. அரசு பதவியேற்ற பிறகு, இந்த உள் ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கான கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வந்தன. இந்த நிலையில்தான், இது தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு ஜூலை 26ஆம் தேதி வெளியிட்டது. இந்த இட ஒதுக்கீட்டை எப்படி அளிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளையும் அறிவித்தது.

இந்த அறிவிப்பை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்றிருக்கிறது. "வன்னியர்களின் சமூக, பொருளாதார பயணத்தில் இது மிகவும் உதவும். உயிரிழப்பு, ரத்த சேதம் ஏற்படக்கூடிய போராட்டங்கள் இன்றி இதைச் சாதித்திருக்கிறோம்" என பிபிசியிடம் கூறினார் அக்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு.

வன்னிய குல சத்ரியர்களுக்கு மட்டுமான இந்த உள் ஒதுக்கீடு குறித்து பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. குறிப்பாக, வன்னியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாவட்டங்களில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வரக்கூடிய 20 சதவீத இடங்களில் பெரும்பாலான இடங்களை வன்னியர்களே பெற்றுவந்த நிலையில், இந்த உள்ஒதுக்கீட்டின் காரணமாக 10.5 சதவீத இடங்களே வன்னியர்களுக்குக் கிடைக்கும் நிலை உருவாகாதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அதேபோல, தென் மாவட்டங்களில் வன்னியர்களே மிகக் குறைவாகவே வசிக்கும் நிலையில், கல்வி நிலையங்களில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு எப்படி நிரப்பப்படும் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.

ஆனால், இந்தக் கருத்துக்களைப் புறந்தள்ளுகிறார் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு. "இந்தக் கருத்துகள் வேண்டுமென்றே விவாதத்தை திசைமாற்றுவதற்காகச் சொல்லப்படுபவை. உண்மையில் வன்னியர்களுக்கென வழங்கப்பட்டிருக்கும் இந்த இட ஒதுக்கீடே போதுமானதல்ல. இருந்தபோதும் இதனை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் கூடுதலாக 600 மருத்துவக் கல்லூரி இடங்கள் வன்னியர்களுக்குக் கிடைக்கும். அது குறிப்பிட்டு சொல்லக்கூடிய விஷயம்" என்கிறார் அவர்.

தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்புகளைப் பொறுத்தவரை முன்புபோல, மாவட்டவாரியாக இடஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை. மாநில அளவில்தான் அளிக்கப்படுகிறது. ஆகவே, எந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்புகள் உருவானாலும் அதில் இட ஒதுக்கீடு கிடைக்கும் என்கிறார் பாலு.

"கலைக் கல்லூரிகளைப் பொறுத்தவரை, இதுவரை தென் மாவட்டங்களில் இருந்த கல்லூரிகளில் வன்னிய மாணவர்கள் சேர்ந்ததில்லை. இந்த இட ஒதுக்கீட்டின் மூலம், தென் மாவட்டக் கல்லூரிகளிலும் இங்கிருந்து சென்று மாணவர்கள் சேரும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது" என்கிறார் அவர்.

ஆனால்,தென் மாவட்டங்களில் உள்ள சீர்மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்ற சாதியினர் இந்த அரசாணைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். "இம்மாதிரி ஒரு மிகப் பெரிய முடிவை எடுப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரையும் கலந்து பேசியிருக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள 115 சாதியினர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இது அந்த மக்களின் உரிமைகளைச் சூறையாடுகிறது" என்கிறார் இந்தச் சட்டத்திற்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள 146 சமூகங்களின் சமூக நீதிக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான துரைமணி.

அருந்ததியருக்கு அளிக்கப்பட்ட உள் ஒதுக்கீட்டைப் போல இது இல்லை. அருந்ததியருக்கு அளிக்கப்பட்ட உள் ஒதுக்கீட்டில், போதுமான அருந்ததியர்கள் விண்ணப்பிக்கவில்லையென்றால் அந்த இடங்கள், பட்டியலினத்தின் மற்ற சாதியினரால் நிரப்பப்படும். இந்த ஒதுக்கீட்டில், போதுமான வன்னியர்கள் விண்ணப்பிக்கவில்லையென்றால், அந்த இடங்கள் பொதுப் பிரிவுக்குச் சென்றுவிடும் எனச் சுட்டிக்காட்டுகிறார் துரைமணி.

இந்த உள் ஒதுக்கீட்டை எதிர்த்து, இந்த அமைப்பின் சார்பிலும் வேறு சில அமைப்புகளின் சார்பிலும் உயர் நீதிமன்றம், உச்ச நீதி மன்றங்களில் சுமார் 20 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக தொடர்ந்து போராடப்போவதாக இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

"இம்மாதிரி இட ஒதுக்கீடுகளைக் கொண்டு வரும்போது சரியான தகவல்களைத் திரட்டி, அவற்றை மக்கள் முன்பாக வைத்து அறிவிப்புகளை வெளியிடுவதே சரியாக இருக்கும்" என்கிறார் அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் சம்மேளனத்தின் பொதுச் செயலரான ஜி.கருணாநிதி.

"முதலில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். மாநில அரசின் வேலைவாய்ப்புகள், கல்லூரி இடங்களுக்கு எவ்வளவு பேர் விண்ணப்பித்து, எவ்வளவு பேருக்கு வாய்ப்புகள் கிடைத்தன என்ற விவரங்களைச் சேகரிக்க வேண்டும். இதனை முன்வைத்தே இட ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும். இந்த உள் ஒதுக்கீடு சரியானதாக இருக்கலாம். ஆனால், யாராவது நாளை வழக்குத் தொடர்ந்தால், அதை எதிர்கொள்ள நம்மிடம் தகவல் தேவை. அது தற்போது இல்லை" எனச் சுட்டிக்காட்டுகிறார் ஜி. கருணாநிதி.

தமிழ்நாட்டில், தற்போது 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இதில் 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படுகிறது.