1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 14 மே 2020 (23:13 IST)

emdesivir: கொரோனா வைரஸ் மருந்து தயாரிக்கும் இந்தியா, பாகிஸ்தான் - 127 நாடுகளுக்கு பலன்

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் கோவிட்-19 சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டிசீவர் (Remdesivir) மருந்தை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த கைலீட் எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று கையெழுத்திட்டுள்ளது.

அமெரிக்காவின் கைலீட் மருந்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள காப்புரிமை பெறப்படாத மருந்துகளைத் தயாரிக்கும் ஐந்து நிறுவனங்களிடம் கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம் 127 நாடுகளுக்கான வைரஸ் மருந்தை தயாரிப்பதற்கு உதவும்.

ரெம்டிசீவர் மருந்து கொரோனா வைரஸ் தொற்று உண்டானால், அதன் அறிகுறிகள் தென்படும் காலத்தை 15 நாட்களிலிருந்து 11 நாட்களாக குறைக்கிறது என்று உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.

ரெம்டிசீவர் இபோலா நோய்த் தொற்று சிகிச்சைக்காக முதல் முதலில் உருவாக்கப்பட்டது. உடலில் உள்ள உயிரணுக்களில் வைரஸ் இனப்பெருக்கம் செய்வதற்கு உதவும் நொதியத்தை (enzyme) தாக்குவதன் மூலம்

உடலுக்குள் வைரஸின் எண்ணிக்கை அதிகரிப்பதை இந்த மருந்து தடுக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஐந்து மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், கைலீட் நிறுவனத்திடமிருந்து இரண்டு ரெம்டிசீவர் மருந்தை தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை பெறும். இதன் மூலம் அந்த மருந்து உற்பத்தி செய்யப்படும் அளவு அதிகரிக்கும் என்று கைலீட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார நிறுவனம் கோவிட்-19 உண்டாக்கிய பொது சுகாதார அவசர நிலை முடிவுக்கு வந்துவிட்டது என்று அறிவிக்கும் வரையோ கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான மருந்து அல்லது அதை தடுப்பதற்கான தடுப்பூசி ஆகியவற்றில் ஒன்றை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிக்கும் வரையிலோ காப்புரிமை கட்டணம் எதுவும் வாங்காமல் இந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் என்றும் அந்த நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிப்லா லிமிடட், பெரோஸான்ஸ் லேபரட்டரிஸ், ஹெட்ரோ லேப்ஸ், ஜூபிலியன்ட் லைஃப் சயின்சஸ், மற்றும் மைலன் ஆகிய நிறுவனங்கள், கைலீட் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.