செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 15 ஜூலை 2021 (12:17 IST)

போதை ஊசிகள் வியாபாரம்: கோவை இளைஞர்கள் இலக்காவது எப்படி?

கோவை மாநகர பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து பெருமளவில் போதை ஊசி வியாபாரம் நடைபெற்று வருவதாக சமீபத்தில் புகார்கள் எழுந்தன.
 
இதனை உறுதி செய்யும் விதமாக போதை ஊசி தொடர்புடைய குற்றச்சம்பவங்கள் நகரில் அடுத்தடுத்து பதிவாகியுள்ளன.
 
போதையால் கொலை
கடந்த மாதம் மதுக்கரை அருகே போதை ஊசியால் ஏற்பட்ட தகராறில், 18 வயது சிறுவன் 22 வயது வாலிபரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
 
இருவரும் பெயின்டிங் வேலை செய்து வந்துள்ளனர். போதை ஊசி பழக்கமுடைய அந்த வாலிபர், சிறுவனோடு சேர்ந்து சென்று போதை ஊசி வாங்கி வந்துள்ளார். வாலிபருக்கு சிறுவன் தான் போதை ஊசி செலுத்தியுள்ளார்.
 
போதை தலைக்கேறிய வாலிபர், மீண்டும் போதை ஊசி வாங்கி வருமாறு கூறியுள்ளார். போதை ஊசி வாங்க பணமில்லை என கூறிய சிறுவனின் செல்போனை பறித்துக் கொண்ட வாலிபர், சிறுவனின் பெற்றோரை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டிற்கு சென்று அரிவாளை எடுத்து வந்து வாலிபரை வெட்டிக்கொன்று விட்டு தலைமறைவானதாக காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது.
 
வாலிபரை கொலை செய்யும்போது அச்சிறுவனும் போதையில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
 
போதை மாத்திரைகள்
கோவையில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளின் புழக்கம் அதிகமில்லாத போதும், மருத்துவர்கள் பரிந்துரையின்றி விற்கக்கூடாத வலிநிவாரண மாத்திரைகளை சட்டவிரோதமாக சிலர் வாங்கிப் பயன்படுத்தி போதை நிலைக்கு செல்கின்றனர்.
 
ஜூன் மாத இறுதியில் கோவில்மேடு பகுதியில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்குரிய வகையில் இளைஞர்கள் சிலர் இருந்துள்ளனர்.
 
மேலும், அவர்களிடம் வலிநிவாரணத்துக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களிடமிருந்தும் 650 மாத்திரைகள் மற்றும் ரூ.11,100 பணம் ஆகியவற்றை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
 
விசாரணையில், வலி நிவாரண மாத்திரைகளை பொடியாக்கி செலைன் நீரில் கரைத்து, போதைப் பயன்பாட்டுக்காக ஊசி மூலம் உடலில் செலுத்த கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
 
போதை ஊசி வீடியோ
உக்கடத்தை அடுத்துள்ள புல்லுக்காடு பகுதியில் இளைஞர்கள் ஒன்று கூடி, கை நரம்புகளில் போதை ஊசி போட்டுக்கொள்ளும் காணொளிகள் கடந்த வாரம் வெளியாகி பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்தது.
 
கோவை மாநகர காவல்துறை தலைவரின் உத்தரவின்பேரில் வீடியோவில் இருந்த இளைஞர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
 
இதனையடுத்து, குனியமுத்தூர் மற்றும் கோவைப்புதூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 7 இளைஞர்களை காவல்துறையினர் கண்டுபிடித்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் 18 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
விசாரணையில், ஒரு வருடத்திற்கு முன்பு அந்த வீடியோ எடுக்கப்பட்டதாக இளைஞர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். சட்டவிரோத வலி நிவாரணி மாத்திரை விற்பனை குறித்தும், இதன் பின்னனியில் உள்ளவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
 
ஆன்லைன் போதைச் சந்தை
 
போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள், வலி நிவாரண மாத்திரைகளை ஆன்லைனில் சட்டவிரோதமாக வாங்கி உபயோகிப்பதாக தெரிவிக்கிறார் கோவை மாவட்ட உதவி மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் எஸ்.குருபாரதி.
 
'கோவை மாவட்டத்தில் போதை மருந்து விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மருத்துவர்கள் பரிந்துரையின்றி எந்த விதமான மாத்திரைகளையும் விற்பனை செய்ய அனைத்து மருந்தகங்களுக்கும் தடை விதித்துள்ளோம். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளோம்.
 
மேலும், மருந்துக் கடைகளில் இது குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளோம்.
 
சமீபத்தில் வெளியான வீடியோவில் இருந்த இளைஞர்களை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் போதை மாத்திரைகளை அவர்கள் ஆன்லைன் மூலமாக வாங்கியது தெரியவந்துள்ளது.
 
ஆன்லைன் மூலமாக நடக்கும் போதைச் சந்தையை தடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தும் பல்வேறு வழிகளில் போதை ஊசி குறித்து தெரிந்து கொண்டு இளைஞர்கள் பலர் அதற்கு அடிமையாகின்றனர். காவல்துறையின் சைபர் பிரிவின் உதவியோடு ஆன்லைன் போதைப்பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது' என்கிறார் இவர்.
 
பெற்றோர்கள் கவலை
கோவையில் வசித்து வரும் பெயர் குறிப்பிட விரும்பாத பெற்றோர்கள் சிலர் போதை ஊசி விவகாரம் குறித்து பிபிசியிடம் கருத்துக்களை பகிர்ந்தனர்.
 
'கல்லூரி படிப்புக்காக பல மாவட்டங்களில் இருந்தும் பல மாநிலங்களில் இருந்தும் கோவை நகருக்கு இளைஞர்கள் பலர் வந்து தங்கி படிக்கின்றனர். இவர்களை குறிவைத்து சமூகவிரோதிகள் போதைப்பொருட்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்கின்றனர்.
 
நாளடைவில் இவர்கள் போதைக்கு அடிமையாகும் சூழல் உருவாகிறது. தற்போது, வெளியான இளைஞர்கள் போதை ஊசி செலுத்தும் வீடியோ, பார்க்கும் போது பெரும் பதைபதைப்பை ஏற்படுத்துகிறது.
 
ஆன்லைன் தொழில்நுட்பங்கள் மூலமாகவும் போதைப்பொருள் குறித்து அவர்கள் தெரிந்து கொள்கின்றனர். இதனை கண்காணிப்பதும் தடுப்பதும் மிகவும் சவாலாக உள்ளது. குறிப்பாக, கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறது.
 
பெரும்பாலான நேரத்தை இளைஞர்கள் ஆன்லைனில் செலவிடுகின்றனர். படிப்பிற்கான உரிய தகவல்களை பெற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்களா? அல்லது சமூக விரோத செயல்கள் குறித்து கற்றுக் கொள்கிறார்களா? என்பதை அருகிலிருந்து கண்காணிப்பது இன்றைய நிலையில் சாத்தியமில்லாத ஒன்றாக மாறியுள்ளது' என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
 
மனநல ஆலோசனை தேவை
போதை பழக்கத்திற்கு ஆளாகியுள்ள நபர்களை மருத்துவர்களிடமும் மனநல ஆலோசகரிடம் அழைத்துச் சென்று மறுவாழ்வுக்கான சிகிச்சையை தொடங்குவது மிகவும் அவசியம் என்கிறார் கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த இளம் மனநல ஆலோசகர் மொகமது இஸ்மாயில்.
 
'போதை ஊசிக்கு அடிமையானவர்களை மீட்பது உடனடியான காரியமல்ல. படிப்படியாக மட்டுமே போதையை மறக்க செய்ய முடியும். அதற்கான பயிற்சிகளும் செயல்பாடுகளும் உள்ளது.
 
போதை ஊசி பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பெரும்பாலானோர் மற்ற போதைப் பழக்கங்களை முயற்சி செய்துவிட்டு இதற்கு பழகுபவர்களாகவே இருக்கிறார்கள். இதற்கு காரணம், போதைப்பொருளின் அளவின் அடிப்படையில், உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவு மாறிக்கொண்டே இருக்கும்.
 
எனவே, போதைக்கான அளவும் நாளடைவில் கூடிக்கொண்டே இருக்கும். பல விதமான போதை பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்கள் மிகக் குறைந்த வயதிலேயே போதை ஊசிக்கும் அடிமையாகி வருகின்றனர்.
 
போதைக்கு அடிமையானவர்களை திருத்தி இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர மறுவாழ்வு மையங்கள் அவசியமாகிறது. வீட்டில் இருந்துகொண்டு போதை பழக்கத்தை கைவிடுவது அல்லது குறைக்க முயற்சிப்பது மிகவும் கடினமாகும்.
 
மறுவாழ்வு மையங்களில் அதற்கான பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். முறையான பயிற்சிகள் குறித்த நேரத்தில் வழங்கப்படும். போதையில் இருந்து மீண்டு வரும்போது நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் தற்கொலை எண்ணங்கள் தோன்றும். எனவே, மறுவாழ்வு மையங்களில் உள்ள அறைகளில், தற்கொலை எண்ணங்கள் சிறிதளவும் தோன்றாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். பிளாஸ்டிக் டம்ளர்கள் கூட பயன்படுத்தமாட்டார்கள்.
 
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பழக்கவழக்கங்களை கவனிப்பது மிகவும் அவசியமாகும். அவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள் என தெரிந்ததும் மருத்துவர்களிடமும், மனநல ஆலோசகரிடம் அழைத்துச் சென்று மறுவாழ்வுக்கான சிகிச்சையை உடனடியாக தொடங்க வேண்டும்.
 
கோவை மாவட்டத்தில் சொற்ப எண்ணிக்கையில் தான் மறுவாழ்வு மையங்கள் உள்ளன. எனவே, கூடுதலாக மறுவாழ்வு மையங்களை திறந்து, போதைக்கு அடிமையான இளைஞர்களை மீட்டெடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து நடத்தப்படும் போதை சந்தையை முற்றிலுமாக தடை செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்துகிறார் இஸ்மாயில்.
 
தகவல் தெரிவிக்கவும்
காவல்துறையின் போதைப் பொருட்கள் ஒழிப்பு முயற்சிகளில் பொது மக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என கூறுகிறார் கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் தீபக்.எம்.தாமோர்.
 
இளைஞர்கள் சிலர் போதை ஊசி செலுத்தி கொள்ளும் வீடியோ சமீபத்தில் வெளியாகியது. விசாரணையில் அந்த வீடியோ ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது. தற்போது அதனை சமூகவலை தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
 
மருத்துவர்கள் பரிந்துரையின்றி மாத்திரைகள் வழங்கக் கூடாது என மாநகர காவல்துறை சார்பில் அனைத்து மருந்து விற்பனையாளர்களுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் காவல் துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
போதை பழக்கம் என்பது இளைஞர்களுக்கு மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடியவை. எனவே போதைப் பொருட்கள் ஒழிப்பு முயற்சிகளில் பொது மக்களுடைய ஒத்துழைப்பும் கட்டாயம் தேவைப்படுகிறது. போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்த தகவல்கள் தெரியவந்தால் பொது மக்கள் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் தகவல் அளிக்க வேண்டும். நம் அனைவரின் கூட்டு முயற்சியால் போதைப் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்க முடியும்' என தெரிவிக்கிறார் கோவை மாநகர காவல்துறை ஆணையாளர்.