வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2022 (15:15 IST)

தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா? - விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

Dejavu
நம்மில் பலருக்கு முதல்முறையாக நடக்கும் அனுபவங்கள், பார்க்கும் இடங்கள் போன்றவை ஏற்கெனவே நடந்தவையாகத் தோன்றும். இதை தேஜாவு என்கிறார்கள். இது சற்று வினோதமாக இருப்பதால், அமானுஷ்யங்களுடன் தொடர்புபடுத்தி நீண்ட காலமாகப் பேசப்பட்டு வருகிறது.

இன்னும் சிலர் இதை மறுபிறவி என்பார்கள். 1870-களில் 'ஏற்கெனவே பார்த்தது' என்று பொருள்படும்படியாக பிரெஞ்சு மொழியைப் பயன்படுத்தி தேஜாவு என இதற்குப் பெயர் வைத்தவர் எமிலி போயராக். இவர் பிரெஞ்சுத் தத்துவ ஞானி.

இவர் பெயர் வைத்தாரே தவிர துல்லியமான விளக்கம் எதையும் கூறவில்லை. அதனால் மறுபிறவி அமானுஷ்யம் என்பது போன்ற பல கற்பிதங்கள் தேஜாவுக்கு கூறப்பட்டு வந்தன. பல ஹாலிவுட் திரைப்படங்கள் முதல் தமிழ்த் திரைப்படங்கள் வரை தேஜாவு பற்றிப் பேசியிருக்கின்றன. ஆனால் அவையும் அறிவியல் ரீதியாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவை அல்ல.

உண்மை என்னவென்றால் தேஜாவு என்று கூறப்படும் அந்த உணர்வு பற்றி யாராலும் 100 சதவிகிதம் விளக்கம் தர முடியவில்லை.

ஆனால் உளவியல் ஆராய்ச்சியாளர்கள், இதற்கு பல வகையான சாத்தியக்கூறுகளைக் கூறுகின்றனர். மூளை, அதன் நினைவுதிறன், அறிவாற்றல் உள்ளிட்டவற்றை இணைக்கும் வகையிலான கோட்பாடுகள் அவை.

ஒரு சூழ்நிலையை நாம் முழுமையாக அறிந்துகொள்வதற்கு முன்பு, நமது மூளை அதை விரைவாகவும் மேம்போக்காகவும் உள்வாங்குகிறது. சிறிது நேரத்தில் நாம் அதை முன்பே பார்த்தது போன்ற ஒரு அதிர்ச்சியைப் பெறலாம். இதை பிளவுபட்ட சிந்தனை என்கிறார்கள்.

இதேபோல மற்றொரு கருத்துருவும் உண்டு. மூளையின் அரைக் கோளங்களிலிருந்தும் நமது எண்ணங்கள் டெம்போரல் லோப் எனப்படும் மூளையின் பொட்டு மடல் பகுதிக்குள் நுழைகின்றன. அப்போது ஒன்று மற்றொன்றை விட ஒருசில மில்லி விநாடிகள் தாமதமாகச் செல்கிறது. இந்த தாமதமான தருணத்தில் தான் தேஜாவு ஏற்படுகிறது என்று சில விஞ்ஞானிகள் விளக்குகிறார்கள்.

தேஜாவு பற்றி ஆய்வு செய்வதில் உள்ள சிக்கல் என்னவென்றால், அப்படியொன்று நடப்பது வரை காத்திருக்க முடியாது என்பதுதான் என்று கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். அதே நேரத்தில் டெம்போரல் லோப் பாதிப்பு உள்ளவர்களை ஆய்வு செய்யும்போது அவர்களுக்கு அடிக்கடி தேஜாவு நடப்பதை அறிய முடிகிறது என்கிறார்கள் மற்றொரு தரப்பு விஞ்ஞானிகள்.

2012 இல், ஒரு ஆய்வு மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களை வெவ்வேறு முப்பரிமாணச் சூழல்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையின் காத்திருப்பு அறை, திரையரங்கம் போன்றவை அதில் இடம்பெற்றிருந்தன. அந்த நேரத்தில் பலருக்கு தேஜாவு போன்ற அனுபவங்கள் ஏற்பட்டன. அதனால் தேஜாவூ என்பது நமது நினைவுடன் தொடர்புடையது என்று அறிய முடிகிறது.
Brain

ஆனால் 2014-ஆம் ஆண்டில் நடந்தப்பட்ட மற்றொரு ஆய்வு வேறு மாதிரியான முடிவுகளைக் கொண்டிருந்தது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு 'படுக்கை', 'தலையணை', 'தூக்கம்', 'கனவு' போன்ற சொற்கள் காட்டப்பட்டன. ஆனால் இவற்றுக்கெல்லாம் பொதுவான 'தூக்கம்' என்ற சொல் காட்டப்படவே இல்லை.

முதலிலேயே ஆங்கில எழுத்து 'எஸ்' இல் தொடங்கும் சொற்கள் ஏதாவது தென்படுகிறதா என்பதைப் பார்த்துக் கூறவும் என்று அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. பலர் அப்படிச் சொல் எதுவும் தோன்றவில்லை என்று உறுதியாகக் கூறினார்கள். ஆனால் தங்களுக்கு தூக்கம் அதாவது 'Sleep' என்ற சொல் காட்டப்பட்டதாக சிலர் கூறினார்கள். இது தேஜாவுவுக்கு சமமான அனுபவமாக அவர்களுக்கு இருந்தது. தேஜாவுவின் போது மூளையை ஸ்கேன் செய்த நிபுணர்கள் இந்த முறையைப் பயன்படுத்தினர்.

அவர்கள் தேஜாவு என்பது மூளையின் நினைவகத்தில் ஏற்படும் பிரச்னையல்ல. மாறாக முன்மூளையில் ஏற்படும் மாற்றம் என்று அவர்கள் கூறுகின்றனர். இந்தப் பகுதிதான் நாம் எடுக்கும் முடிவுகளுக்குக் காரணமாகிறது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் தேஜாவு ஏற்படுகிறவர்களுக்கு நினைவாற்றல் மிகச் சிறப்பாக வேலை செய்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இவை எவையும் தேஜாவு பற்றி முழுமையாக விளக்கவில்லை. தேஜாவு என்பது பேரலல் யுனிவெர்ஸ் என்று கூறப்படும் வேறொரு பிரபஞ்சத்துக்குச் செல்லும் வழியாகவும் இருக்கலாம். இல்லையெனில் காலத்தில் ஏற்பட்ட பிளவாக இருக்கலாம். வருங்கால ஆராய்ச்சிகள்தான் முடிவு செய்ய வேண்டும்.