வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 23 மார்ச் 2019 (19:02 IST)

"முற்றிலும் வீழ்ந்தது ஐ.எஸ்" - சிரியா ஜனநாயகப் படைகள் அறிவிப்பு

சிரியாவில் தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டதையடுத்து, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் அமைப்பின் காலம் முடிந்துவிட்டதாக அமெரிக்க ஆதரவுள்ள சிரியா ஜனநாயக படைகள் தெரிவித்துள்ளது.
ஜிகாதியக் குழுவின் கடைசி கட்டுப்பாட்டு இடமாக இருந்த பாகூஸில், சிரியா ஜனநாயக படை ஆயுதப் போராளிகள் வெற்றிக் கொடிகளை உயர்த்தி கொண்டாடி வருகிறார்கள்.
 
சிரியா மற்றும் இராக்கில் 88,000 சதுர கிலோ மீட்டர் நிலப் பரப்பளவை ஐஎஸ் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
 
தனது பிராந்தியத்தை அந்த அமைப்பு இழந்து வந்தாலும், இக்குழு சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.
 
எனினும், நைஜீரியா, ஏமன், ஆப்கானிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளில் ஐஎஸ் அமைப்பு தனது இருப்பை தக்கவைத்திருக்கிறது.
 
இறுதி சண்டை
 
கிழக்கு சிரியாவில் உள்ள பாகூஸ் கிராமத்தில் மீதமிருந்த ஆயுதப் போராளிகள் பதுங்கி இருந்த நிலையில், மார்ச் மாதத் தொடக்கத்தில் ஐஎஸ் மீதான இறுதி தாக்குதலை குர்துக்கள் வழிநடத்தும் சிரியா ஜனநாயக படைகள் தொடங்கியது.
 
அப்பகுதியில் அதிக அளவிலான பொதுமக்கள் இருந்ததினால் தாக்குதல் தடைபட்டது. அங்கிருந்து ஆயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும், வெளிநாட்டினரும் இந்த சண்டையில் இருந்து தப்பித்து சிரியா ஜனநாயக படைகளின் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களுக்கு சென்றனர்.
 
பல ஐ.எஸ் அமைப்பினரும் பாகூஸ் கிராமத்தை விட்டுச் சென்றனர். ஆனால், அங்கேயே தங்கியிருந்தவர்களால், தற்கொலை தாக்குதல்கள் மற்றும் கார் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினார்கள்.
 
"ஐ.எஸ் என்று கூறிக் கொண்ட அமைப்பு முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டதை சிரியா ஜனநாயக படைகள் அறிவிக்கிறது" என அதன் ஊடக அலுவலக தலைவர் முஸ்தஃபா பாலி ட்வீட் செய்திருந்தார்.
 
"இந்நாளில் வெற்றிக்கு வழிவகுத்த ஆயிரக்கணக்கான தியாகிகளை நாம் நினைவு கூற வேண்டும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு இறுதியில் ஐ.எஸ் அமைப்பு வீழ்த்தப்பட்டுவிட்டதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க துருப்புகளை திரும்ப பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருப்பதாக கூறினார். இது அமெரிக்காவின் கூட்டணி நாடுகளுக்கு எச்சரிக்கையாக அமைந்ததுடன், அதன் பல மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் பதவி விலகவும் காரணமாக அமைந்தது.
 
இவற்றைத் தொடர்ந்து, அப்பகுதியில் அமெரிக்க படைகள் இருக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.