ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 11 மார்ச் 2019 (19:20 IST)

சிரியா போர்: ஐ.எஸ். வசமிருக்கும் கடைசி ஊரில் கடும் சண்டை

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் கடைசியாக உள்ள பாகூஸ் கிராமத்தில் நடக்கும் சண்டையில் துப்பாக்கியுடன் ஓடும் சிரியா ஜனநாயகப் படை உறுப்பினர் ஒருவர்.
சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தீவிரவாதக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி ஊரில், அந்தக் குழுவுக்கும் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் சிரியா ஜனநாயக படைக்கும் இடையில் கடும் போர் நடந்து வருகிறது.
 
சிரியாவின் கிழக்குப் பகுதியில், இராக் எல்லைக்கு அருகே அமைந்துள்ள பாகூஸ் என்ற ஊரில் அந்த சண்டை தற்போது நடந்து வருகிறது.
 
இந்த கிராமம் அமெரிக்க ஆதரவு பெற்ற படைகளின் வசமானால், 2014-ம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் தாங்கள் அமைத்ததாக கூறிய கலீபேட் என்ற ராஜ்ஜியம் முடிவுக்கு வந்ததாக, அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் முறைப்படி அறிவிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 
இந்தப் பகுதியை ஐ.எஸ். இழந்தாலும், இந்தப் பிராந்தியத்திலும், உலகின் பிற பகுதிகளிலும் தாக்குதல்களை நடத்தும் சக்தியுள்ள அமைப்பாகவும், பாதுகாப்பு அச்சுறுத்தலாகவும் ஐ.எஸ். நீடிக்கும் என்று நோக்கர்கள் கருதுகிறார்கள்.
 
இதனிடையே பாகூஸில் ஐ.எஸ். அமைப்புடன் நேருக்கு நேர் கடும் மோதல் நடந்துவருவதாக அதனுடன் மோதி வரும் சிரியா ஜனநாயகப் படையின் ஊடக அலுவலகத்தின் தலைவர் முஸ்தஃபா பாலி ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட் இதோ:
 
 
சிரியா மற்றும் இராக்கில் ஒரு காலத்தில் 88 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை கட்டுப்படுத்தி, அப்பகுதியில் இருந்த 80 லட்சம் மக்கள் மீது கொடும் ஆட்சியை செலுத்தி, எண்ணெய், வழிப்பறி, கொள்ளை, கடத்தல் ஆகியவற்றின் மூலம் பல நூறுகோடி டாலர்களை ஈட்டிவந்த ஐ.எஸ். குழு தற்போது சில நூறு சதுர மீட்டர் பரப்பளவுக்குள் சுருங்கிவிட்டது.
 
 
பாகூஸ் மீது நடக்கும் தாக்குதலின்போது விமான எதிர்ப்புத் துப்பாக்கியுடன் காணப்படும் சிரியா ஜனநாயகப் படையைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர்.
 
ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு (இந்திய நேரம் இரவு 9.30) தொடங்கிய சண்டையில், சிரியா ஜனநாயகப் படை மற்றும் அதன் ஆதரவுப் படைகளின் விமானங்கள் ஐ.எஸ். குழுவின் ஆயுதக் கிடங்குகள் மீது குண்டுமாரி பொழிந்தன. ஐ.எஸ். குழுவின் முகாம் ஒன்று தாக்குதலில் தீப்பிடித்து எரிந்தது.
 
மார்ச் 1-ம் தேதி கடும் விமான மற்றும் பீரங்கித் தாக்குதல் நடத்திய பிறகு, ஐ.எஸ். பிடியில் பொதுமக்கள் சிலர் மனிதக் கேடயங்களாக இருப்பதால் தங்கள் தாக்குதல் வேகத்தை மட்டுப்படுத்துவதாக அறிவித்தது சி ஜ ப.
 
இதையடுத்து கடந்த திங்கள்கிழமை 3,500 பொதுமக்கள் அந்த ஊரில் இருந்து வெளியேறினர். மறுநாள் 500 ஐ.எஸ். படையினர் சரணடைந்தனர்.
 
புதன்கிழமை மேலும் 2,000 பேர் பாகூஸில் இருந்து வெளியேறினர் என்று ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. அவர்கள் சிஜப சோதனைச் சாவடியில் சோதிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு அதன் பிறகு அவர்களுக்கு உணவும் நீரும் வழங்கப்பட்டது.
 
அத்துடன் கடந்த ஒரு மாதத்தில் 4,000 ஐ.எஸ். போராளிகள் சரணடைந்துள்ளதாகவும், அவர்களால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த சிரியா ஜனநாயகப் படை போராளிகள் 5 பேர் விடுவிக்கப்பட்டதாகவும் சிஜப ஊடக அலுவலகத் தலைவர் முஸ்தஃபா பாலி தெரிவித்துள்ளார்.
 
தற்போது சிரியா ஜனநாயகப் படையின் இலக்கு எளிமையானது. சில கூடார முகாம்கள்தான் அந்த ஊரில் உள்ளன. அவையும் நாலாபுறமும் தரை மற்றும் வான் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
 
சிறிது சிறிதாக தாக்குதலை அதிகரிக்கும் அணுகுமுறையை அந்தப் படை கையாள்கிறது. பகூஸை தாக்குவது, அதன் பிறகு சண்டை நிறுத்தம் செய்து ஐ.எஸ். ஆதரவாளர்கள், பிணைக் கைதிகள், குழந்தைகள் வெளியேறுவதை ஊக்குவிப்பது என்பதாக அதன் அணுகுமுறை உள்ளது.
 
மேலும் மக்களை வெளியேற்றுவதற்காக ஞாயிற்றுக்கிழமை அங்கே டஜன் கணக்கில் லாரிகள் வந்தன. ஆனால், கொஞ்சம் பேர்தான் வெளியேறி வந்தனர். தற்போது நடப்பது உண்மையில் இறுதிப் போராக இருக்கலாம். அல்லது, மக்களை வெளியேற்றுவதற்கான உத்தியாகவும் இருக்கலாம்.
 
ஆனால், சண்டை எளிமையாக இருக்காது. நாட்டு வெடிகள் மூலம் ஐ.எஸ். அந்தப் பகுதியையே சல்லடையாக்கி வைத்திருக்கிறது. ஆனால் இன்னமும் அவர்களிடம் வெடிபொருள்களும், ஆயுதங்களும் நிறைய உள்ளன.
 
எனவே, நீண்ட நாள் எடுக்காவிட்டாலும்கூட, ஐ.எஸ். படையின் கடைசி புகலிடத்தை பிடிப்பதற்கு மேலும் சில நாள்கள் ஆகும். ஐ.எஸ். தலைவர்கள் ஏற்கெனவே அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 
அமெரிக்க செனட் சபையில் ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்ட உலக அளவிலான அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் ஐ.எஸ். குழு அச்சுறுத்தலாக நீடிப்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
 
உடனடியாக புதிய பிரதேசத்தைப் பிடிக்க ஐ.எஸ். முயலாமல் போகலாம். ஆனால், சுன்னி முஸ்லிம்களின் பிரச்சனைகளைப் பேசியும், சமூக ஸ்திரத்தன்மை இல்லாத நிலையைக் காட்டியும், பாதுகாப்புப் படைகள் பரவி இருப்பதாலும் சிறிது காலம் கழித்து மீண்டும் இழந்த பிராந்தியங்களை மீட்டெடுக்க ஐ.எஸ். உறுப்பினர்கள் முயல்வார்கள் என்கிறது அந்த அறிக்கை.