வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (14:22 IST)

சீனாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு வீட்டுப் பாட அழுத்தம் குறைக்க புதிய சட்டம்

சீனாவில் பள்ளி மாணவர்களின் வீட்டுப் பாட அழுத்தம் மற்றும் பள்ளி நேரத்துக்குப் பிறகான சிறப்பு வகுப்புகள் தொடர்பான அழுத்தத்தைக் குறைக்கும் குறிக்கோளோடு ஒரு புதிய கல்விச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
 
குழந்தைகள் போதுமான நேரம் ஓய்வு எடுக்கவும், உடற்பயிற்சி செய்யவும், அவர்கள் அதிக நேரம் இணையத்தில் செலவழிக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறு குழந்தைகளின் பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
 
கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் ஆறு மற்றும் ஏழு வயது குழந்தைகளுக்கான எழுத்துத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. குழந்தைகளின் உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்படுவதாக அப்போது அதிகாரிகள் கூறினர்.
 
இணையத்துக்கும், பிரபல கலாசாரங்களுக்கும் அடிமையாக இருப்பதை குறைக்கும் நோக்கோடு கடந்த ஆண்டு சீனாவில் பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
 
அது தொடர்பான சமீபத்தைய சட்டங்கள், சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவால் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டன. இவ்வமைப்புதான் சீனாவில் நிரந்தரமாக இருக்கும் சட்டமியற்றும் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
 
சட்டம் தொடர்பான முழு விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் பெற்றோர்கள், குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை போதிப்பது, அறிவுசார் மேம்பாடுகள் மற்றும் சமூக பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுக்க அது ஊக்குவிக்கிறது.
இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளூர் அரசாங்கத்தின் பொறுப்பு. அதாவது கல்வி தவிர மற்ற நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்குவது போன்ற பணிகளுக்கு பொறுப்பு.
 
இந்த சட்டம் தொடர்பாக சீன சமூகவலைதளத்தில் கலவையான கருத்துகள் வந்துள்ளன. சில பயனர்கள் நல்ல குழந்தை வளர்ப்புக்கான முன்னெடுப்பு என பாராட்டினர், சிலரோ இச்சட்டத்தில் குறிப்பிடுவதை உள்ளூர் அதிகாரிகளோ அல்லது பெற்றோர்களோ செய்ய முடியுமா என கேள்வி எழுப்புகின்றனர்.
 
"நான் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, வாரம் ஆறு நாட்கள் வேலை செய்கிறேன், நான் இரவு வீட்டுக்கு வந்த பிறகும் குடும்ப கல்வி போதனைகளை மேற்கொள்ள வேண்டுமா? என ஒரு பயனர் கூறியதாக செளத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
"நீங்கள் ஊழியர்களை சுரண்டிவிட்டு, அவர்களை குழந்தை பெற்றுக் கொள்ளச் சொல்லக் கூடாது." கடந்த ஜூலை மாதம், சீனாவில் லாப நோக்கில் முக்கிய பாடங்களை பயிற்றுவிக்கும் இணைய வழி பயிற்சி வகுப்புகளுக்கு தடை விதித்தது அரசு.
அந்த புதிய கட்டுப்பாடுகள், தனியார் பயிற்சித் துறையில் அந்நிய நேரடி முதலீடுகள் வருவதில் பல கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. 120 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட அத்துறையை இச்சட்டம் கடுமையாக பாதித்துள்ளது.
 
இது சீனாவில் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கத் தேவையான செலவுகளைக் குறைக்க அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கை என அப்போது கூறப்பட்டது. ஏற்கனவே சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்கு குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.