செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 28 செப்டம்பர் 2023 (20:55 IST)

சந்திரமுகி-2 விமர்சனம்: வேட்டையன் - சந்திரமுகியாக லாரன்ஸ் - கங்கனா ரசிகர்களை கவர்ந்தார்களா?

CHANDRAMUKI-2
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, ராதிகா, சரத் குமார், லட்சுமி மேனன், மகிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. சந்திரமுகி திரைப்படம், 17 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2005-ஆம் ஆண்டு, இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியானது. ரஜினிகாந்தின் மிகப் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக இந்தப் படம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
 
'சந்திரமுகி' திரைப்படம் 1993-இல் மலையாளத்தில் வெளிவந்த 'மணிச்சித்திரத் தாழு' என்ற திரைப்படத்தின் மறு உருவாக்கம்.
 
மணிச்சித்திரத்தாழு திரைப்படம் பிரபல இயக்குநர் ஃபாஸிலின் இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா, சுரேஷ் கோபி, நெடுமுடி வேணு உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி சுமார் 300 நாட்கள் ஓடியது. மலையாளத்தில் மணிச்சித்திரத்தாழு சூப்பர் ஹிட் ஆகியதால், பி. வாசு அதன் உரிமையைப் பெற்று, 2004ஆம் ஆண்டு கன்னடத்தில் 'ஆப்தமித்ரா' என்ற பெயரில் விஷ்ணுவர்தன், சௌந்தர்யா, ரமேஷ் அரவிந்த் உள்ளிட்டோரின் நடிப்பில் ரீமேக் செய்தார். அத்திரைப்படம் மாபெரும் ஹிட் அடிக்க, ரஜினியை வைத்து, தமிழில் எடுக்கலாம் என முடிவானது. எதிர்பார்த்தபடியே அந்தப் சந்திரமுகி திரைப்படமும் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
 
'மணிச்சித்திரத்தாழு' தமிழ், கன்னடம் தவிர, வங்க மொழியில் 'ராஜ்மொஹோல்' என்ற பெயரிலும் இந்தியில் 'பூல் புலையா' என்ற பெயரிலும் ரீ - மேக் செய்யப்பட்டது.
 
கங்காவும் நகுலனும் கொல்கத்தாவில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு பல வருடம் கழித்து வருகிறார்கள். நகுலன் அவனது குடும்ப மாளிகையில் மனைவியுடன் தங்க முடிவுசெய்கிறான். ஆனால் உறவினர்கள் பலரும் அந்த மாளிகையில் தங்க வேண்டாம், அங்கு பேய் இருக்கிறது எனக் கூறி தடுக்கின்றனர்.
 
மேலும், நகுலனிடம் 150 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த மாளிகையில் வசித்த சங்கரன் தம்பி காரணவர் என்பவர் தஞ்சாவூரில் இருந்து நாகவல்லி என்ற நடன மங்கை ஒருவரை விலைக்கு வாங்கி தன் மாளிகைக்கு அழைத்து வருகிறார். நாகவல்லியின் காதலனான ராமநாதன், ரகசியமாக அந்த ஊருக்கு வந்து அருகில் உள்ள குடிசையில் தங்கி, நாகவல்லியை சந்தித்து வருகிறான்.
 
இந்த விஷயம் தெரிய வந்ததும் சங்கரன் தம்பி, நாகவல்லியைக் கொன்று விடுகிறார். நாகவல்லியின் பேய் அவரைப் பழிவாங்க முயல்கிறது. சில மந்திரவாதிகளின் உதவியுடன் சங்கரன் தம்பி அவளை தெக்கினி என்ற ஒரு அறையில் அடைத்து வைக்கிறார். பிறகு அவரும் தற்கொலை செய்துகொண்டு பேயாகி தெக்கினியிலேயே சிக்கிக்கொள்கிறார். இரவில் நாகவல்லியின் குரல் கேட்பதாக கூறி அவனை கண்டிக்கிறார்கள்.
 
ஆனால், இந்தக் கதையை நகுலனின் மனைவி கங்கா நம்பவில்லை. அந்த அறையில் விலை உயர்ந்த நகைகள், செல்வம் ஏதாவது இருக்கலாம் என்பதால் அப்படிச் சொல்வதாக சந்தேகப்படுகிறாள். அந்த அறையின் சாவியை வாங்கி திறக்கிறாள். இதற்குப் பிறகு வீட்டில் பல விபரீதமான சம்பவங்கள் நடக்கின்றன. கங்காவின் நடவடிக்கைகள் மாறுகின்றன.
 
இதனால் பதட்டமடையும் நகுலன், அமெரிக்காவில் உள்ள தனது நண்பரும் மனநல மருத்துவருமான சன்னியை மாதம்பள்ளி மாளிகைக்கு வரவழைக்கிறான். சன்னி நடந்த விஷயங்களை நிதானமாக ஆராயும்போது, கங்கா மனநலம் பாதிக்கப்பட்டு, தன்னை நாகவல்லியாக கருதி செயல்படுவதை கண்டுபிடிக்கிறார். இது ஒரு மன நோய் எனவும் நகுலனுக்கு நிரூப்பிக்கிறார்.
 
மலையாளத்தில் நகுலனாக சுரேஷ் கோபியும், கங்காவாக ஷோபனாவும், டாக்டர் சன்னியாக மோகன்லாலும் நடித்திருந்தனர்.
 
'மணிச்சித்திரத்தாழு'வின் அனைத்து ரீமேக்குகளிலுமே கிட்டத்தட்ட இதே கதையை சிறிய மாறுபாடுகளுடன் படமாக்கினர். ‘சந்திரமுகி’ திரைப்படமும் இதே தான்.
 
"எந்தவித மெனக்கடலும் இல்லாமல் திரைக்கதையால் படம் சுவாரஸ்யம் கிஞ்சித்தும் இன்றி நகர்ந்து செல்கிறது. ஆரம்பத்தில் இரண்டு குழந்தைகளையும் வெறுத்து ஒதுக்கும் ராதிகா குடும்பத்தை ஒரே சீனில் வசனம் பேசியே திருத்தி விடுகிறார் ஹீரோ லாரன்ஸ். இதுபோன்ற “அவுட்டேட்டட்” ஆன திராபையான காட்சிகள் மட்டுமே படம் முழுக்க நிறைந்துள்ளன. கதாபாத்திர வடிவமைப்புகளிலாவது கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.
 
லட்சுமி மேனன் வீல் சேரில் அமர்ந்து வரும்போதே தெரிந்துவிடுகிறது, அந்த கேரக்டருக்கு என்ன ஆகப் போகிறது என. திரை முழுக்க கதாபாத்திரங்கள் தான் நிறைந்திருக்கின்றனவே தவிர, அவை எதுவும் தெளிவாக எழுதப்படவே இல்லை,” என இந்து தமிழ் இசை காட்டமாக விமர்சித்துள்ளது.
 
"இத்தனை ஆண்டுகளாக லாரன்ஸ் ரஜினியாக நின்றார். லாரன்ஸ் ரஜினியாக நடந்தார். லாரன்ஸ் ரஜினியாகவே மாறிவிட்டார். படத்தில் அறிமுகக் காட்சி தொடங்கி இறுதி வரை தன் ஒவ்வொரு அசைவிலும் ரஜினியை அப்படியே நகலெடுத்து நடித்து வைத்திருக்கிறார்" எனவும் இந்து தமிழ் இசை குறிப்பிட்டுள்ளது.
 
"தமிழ் திரைப்படங்களில் 2000-இல் பின்பற்றப்பட்ட ஹீரோ இண்ட்ரோ சாங், ஃபைட் என பழைய ஃபார்முலாக்களை சந்திரமுகி 2-வில் பின்பற்றியதைப் பார்க்கும்போது டைம் மெஷினில் பயணப்படுவது போன்ற உணர்வு என்றும், வடிவேலு காமெடி சீன்களில் ரசிகர்களை சிரிக்க வைக்க மெனக்கெடுவதையும் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது" என டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.
 
மேலும், "சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரம் உளவியல் பிரச்னைகள் சார்ந்ததாக இருந்தது. ஆனால் சந்திரமுகி-2 படத்தில் கங்கனாவின் கதாபாத்திரம் பேய், தெய்வசக்தி, ஆத்மா என அரதப்பழசான பேய் பட டெம்ப்ளேட்டுகளில் சிக்கிவிட்டது எனவும், கதாபாத்திரங்களில் புதுமையான என்ற ஒன்று இல்லவே இல்லை எனவும், ராதிகா போன்ற மிகவும் திறமையான நடிகையின் கதாபாத்திரம் கூட பலவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
 
"ராகவா லாரன்ஸின் நடிப்பு காமெடி சம்பந்தமான காட்சிகளில் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும், ரஜினி நடித்திருந்த வேட்டையன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். கங்கனாவின் நடனம், அழகு எமோஷன் என எல்லாம் ஒர்க் அவுட் ஆனாலும் கூட, அவரால் ஜோதிகா அளவிற்கு ஈடுகொடுத்து நடிக்க முடியவில்லை என்பதே நிதர்சனம். இதற்கிடையில், லட்சுமி மேனன் நானும் இருக்கிறேன் என்று சந்திரமுகியாக மாறி வெளிப்படுத்திய நடிப்பு அசத்தல்" என ஹிந்துஸ்தான் டைம்ஸ் பாராட்டியுள்ளது.
 
அதே நேரத்தில், தோசை கல்லில், புளிக்காத மாவு ஊற்ற முயற்சித்திருக்கிறார் பி.வாசு எனவும் அந்த பத்திரிகை கூறியுள்ளது.
 
"படத்திற்கு பெரிய பலம் வடிவேலுவின் நடிப்பு. தான் பயந்து ரசிகர்களுக்கு சிரிப்பை கொடுத்து இருக்கிறார். குறிப்பாக லாரன்சுடன் வடிவேலு பேசும் காட்சியில் தியேட்டரில் சிரிப்பு மழை" என மாலை மலர் புகழாரம் சூட்டியுள்ளது.
 
மேலும், "நாயகியாக நடித்திருக்கும் கங்கனா ரனாவத் அழகு தேவதையாக ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். சந்திரமுகியாக நடனம், பயம் என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். லட்சுமி மேனன் பாவமாகவும், சந்திரமுகி ஆத்மா புகுந்தவுடன் ஆக்ரோஷமான நடிப்பையும் வெளிப்படுத்தி அசர வைத்து இருக்கிறார்" எனவும் அது பாராட்டியுள்ளது.
 
சந்திரமுகி-2 பற்றி இந்தியா டுடே நாளிதழ் குறிப்பிடும்போது, ”ரஜினி காந்த், ஜோதிகா நடிப்பில் வெளிவந்த சந்திரமுகியில், வடிவேலுவின் காமெடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால், இதில் வடிவேலுவும் காமெடி பெரிதாக ஒன்றுமில்லை. ரசிகர்கள் ஆங்காங்கே ரசிக்கும்படி அங்கொன்றும், இங்கொன்றும் மட்டுமே இருக்கிறது. வசனங்களும் ரசிக்கும்படியாக இல்லை" என்று தெரிவித்துள்ளது.