1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: சனி, 23 மார்ச் 2024 (23:18 IST)

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமின் மனைவிக்கு புற்றுநோய் பாதிப்பு

Kate Middleton
வேல்ஸ் இளவரசிக்கு புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது சிகிச்சையின் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், "கடினமான மற்றும் நம்ப முடியாத சில மாதங்களுக்கு" பிறகு இது ஒரு "பெரிய அதிர்ச்சி" என்று கூறியுள்ளார் கேத்தரின்.
 
ஆனால், தான் நலமாக இருப்பதாகவும், ஒவ்வொரு நாளும் மன உறுதி அதிகரித்து வருவதாகவும் நேர்மறையாகத் தெரிவித்துள்ளார் அவர்.
 
அவருக்கு என்ன புற்றுநோய் பாதித்துள்ளது என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், இளவரசி முழுமையாக குணமடைவார் என்று கென்சிங்டன் அரண்மனை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
 
கேத்தரின் வெளியிட்ட வீடியோவில், ஜனவரி மாதம் தனக்கு அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்தபோது இந்த புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்படவில்லை என்று கூறியுள்ளார்.
 
"அறுவை சிகிச்சைக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே எனது மருத்துவக் குழுவினர் நான் முன்தடுப்பு கீமோதெரப்பியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறினார்கள். நான் இப்போது அந்த சிகிச்சையின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறேன்," என்று இளவரசி தெரிவித்துள்ளார்.
 
பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் கீமோதெரபி சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புற்றுநோயின் வகை உட்பட எந்தவிதமான தனிப்பட்ட மருத்துவ தகவல்களையும் பொதுவெளியில் பகிரமாட்டோம் என்று கூறியுள்ளது அரண்மனை நிர்வாகம்.
 
தனது வீடியோவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்துப் பேசியுள்ள 42 வயதான இளவரசி கேத்தரின், “இதே போன்ற புற்றுநோயால் ஏதாவது வகையில் பாதிக்கப்பட்டுள்ள, துன்பத்தை எதிர் கொண்டுவரும் நபர்கள் நம்பிக்கையை கைவிட வேண்டாம். நீங்கள் தனியாக இல்லை,” என்று தெரிவித்துள்ளார்.
 
இளவரசிக்கு ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட (விவரங்கள் வெளியிடப்படவில்லை) அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வருவதற்கு சில நாட்கள் எடுத்துக் கொண்டதாகவும், இப்போது தனது குடும்பத்தை உறுதிப்படுத்துவதே தனது முன்னுரிமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
“எங்களது இளம் குடும்பத்தின் நலனுக்காக இதைத் தனிப்பட்ட முறையில் கையாள நானும் வில்லியமும் எங்களால் முடிந்தவற்றைச் செய்து வருகிறோம்.”
 
மேலும், "ஜார்ஜ், சார்லோட், லூயிஸ் ஆகியோருக்கு எல்லாவற்றையும் சரியான முறையில் விளக்கி, நான் நலமாகி விடுவேன் என்று புரிய வைக்க, மன உறுதியை ஏற்படுத்த எங்களுக்கு நேரம் எடுத்துக்கொண்டது," என்று கூறியுள்ளார் இளவரசி.
 
 
தனது குடும்பத்திற்கு தற்போது இதிலிருந்து மீண்டு வர சில காலம், அதற்கான இடைவெளி மற்றும் தனிமை தேவை என்றும் இளவரசி கேட் தெரிவித்துள்ளார்.
 
வெள்ளிக்கிழமை இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே இளவரசியின் உடல்நிலை குறித்த செய்தி அரசருக்கும் ராணிக்கும் தெரிவிக்கப்பட்டது. மேலும் மன்னர் சார்ல்ஸும் ஏற்கெனவே புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வருகிறார்.
 
மன்னர் சார்ல்ஸ், கேத்தரின் இருவரும் ஒரே நேரத்தில் லண்டன் கிளினிக் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கு இளவரசி கேத்தரினுக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மன்னருக்கு விரிவடைந்துள்ள புரோஸ்டேட்டை சரி செய்வதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
 
பக்கிங்ஹாம் அரண்மனையின் செய்தித் தொடர்பாளர், "செயலைப் போலவே கேத்தரீனின் பேசும் தைரியத்திற்காகவும் அரசர் மிகவும் பெருமைப்படுகிறார்," என்று கூறியுள்ளார்.
 
சில நாட்கள் இருவரும் ஒன்றாக மருத்துவமனையில் நாட்களைக் கழித்த பிறகு, “கடந்த சில வாரங்களாகத் தனது அன்பான மருமகளுடன் அரசர் நெருக்கமாக இருந்து வருகிறார்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
கேட் குறித்து இளவரசர் ஹாரி மற்றும் மேகன் அனுப்பியுள்ள செய்தியில், "கேட் மற்றும் குடும்பத்தினர் விரைவில் ஆரோக்கியம் பெற மற்றும் குணமடைய நாங்கள் விரும்புகிறோம். மேலும் அதை அவர்களால் தனிப்பட்ட முறையில் அமைதியுடன் செய்ய முடியும் என்று நம்புகிறோம்," என்று கூறப்பட்டுள்ளது.
 
 
இளவரசி கேத்தரின் உடல்நிலை காரணமாக, அவரும், இளவரசர் வில்லியமும் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வில் அரச குடும்பத்துடன் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மேலும் இளவரசியின் அதிகாரபூர்வ பணிகளுக்கும் அவர் விரைவில் திரும்ப வாய்ப்பில்லை.
 
பிப்ரவரி 27 அன்று நினைவு தின நிகழ்வில் இளவரசர் வில்லியம்ஸ் பங்கேற்காமல் போனதற்கும், இளவரசிக்கு புற்றுநோய் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதே காரணம் என்று தெரிவித்திருந்தது கென்சிங்டன் அரண்மனை.
 
ஜனவரி மாதம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இளவரசி உடல்நலம் குறித்து தீவிரமான சமூக ஊடக வதந்திகள் மற்றும் ஊகங்களை இந்தத் தம்பதியினர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. குறிப்பாக கிறிஸ்துமஸுக்கு பிறகு இளவரசி எந்த அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை.
 
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது குடும்பத்தினர் வழங்கும் ஆதரவு குறித்துப் பேசியுள்ள இளவரசி, "வில்லியம் என் பக்கத்தில் இருப்பது ஆறுதலையும் உறுதியையும் தருகிறது,” என்று தெரிவித்துள்ளார்.
 
"உங்களில் பலரும் காட்டிய அன்பு, ஆதரவு மற்றும் கருணை எங்கள் இருவருக்கும் அவ்வளவு முக்கியமானது, அது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது” என்று கூறியுள்ளார் அவர்.
 
இளவரசி வெளியிட்டுள்ள வீடியோவை பிபிசியின் தயாரிப்புப் பிரிவான பிபிசி ஸ்டுடியோஸ் புதன்கிழமை காட்சிப்படுத்தியதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து பிபிசி நியூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கென்சிங்டன் அரண்மனையின் இந்த அறிவிப்பு இன்று பிற்பகல் பிற ஊடகங்களோடு சேர்த்து பிபிசிக்கும் வழங்கப்பட்டதாக” தெரிவித்துள்ளது.