வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 30 அக்டோபர் 2020 (10:47 IST)

அபிநந்தன் விடுதலை: எம்.பியின் பேச்சால் பதறிய பாகிஸ்தான் ராணுவம் - என்ன நடந்தது?

இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தன் கடந்த ஆண்டு எல்லை தாண்டி பாகிஸ்தானில் பாராசூட் மூலம் குதித்து சிறைப்பிடிக்கப்பட்டபோது, அவரை விடுவித்திருக்காவிட்டால் அன்றிரவே இந்தியா போர் தொடுக்கும் என்ற அச்சத்தாலேயே அவரை இம்ரான் கான் அரசு விடுவித்தது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி எம்.பி.க்கள் பேசியதாக கூறப்படும் நிகழ்வு, பாகிஸ்தான் அரசியலில் பதற்றத்தை தீவிரமாக்கியிருக்கிறது.

கடந்த புதன்கிழமை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சி எம்.பி அயாஸ்சாதிக் பற்றிய தகவல்கள் வியாழக்கிழமை பரவலாக இந்திய ஊடகங்களில் ஒளிபரப்பாகின.

இது தொடர்பாக பேசிய அயாஸ் சாதிக், "இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் பிடிபட்டபோது அவரை விடுவிப்பது தொடர்பாக நடக்கவிருந்த கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி, ராணுவ தளபதி பாஜ்வா ஆகியோர் இருந்தனர். குரேஷியின் கால்கள் நடுநடுங்க, தலையில் வியர்வை சொட்டச்சொட்ட அவர் காணப்பட்டார். ஆனால், அந்த கூட்டத்தில் பிரதமர் இம்ரான் கலந்து கொள்ள மறுத்து விட்டார். இதனால் கூட்டத்தில் பேசிய குரேஷி, கடவுளின் அனுகிரகத்துக்காக தயவு செய்து நம்மிடம் பிடிபட்டவரை இந்தியாவிடமே ஒப்படைத்து விடுங்கள். இல்லாவிட்டால் இரவு 9 மணிக்கு பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கும் என்று கூறினார்." என்று தெரிவித்தார்.

அயாஸ் சாதிக், பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகராகவும் இருந்தவர்.

இதனால், அனுபவம் வாய்ந்த அவரது நாடாளுமன்ற பேச்சு அடங்கிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.

இது குறித்த இடுகைகளுக்கு பதலளிக்கும் விதமாக கருத்து பதிவிட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஜே.பி. நட்டா, "இந்தியாவில் நடப்பவற்றைத்தான் காங்கிரஸ் இளவசர் நம்ப மாட்டார். அது நமது ராணுவமானாலும் சரி, அரசானாலும் சரி. அவர்கள் நம்பும் பாகிஸ்தானில் நடந்ததையாவது கண்ணைத்திறந்து அவர் பார்க்கட்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் எம்.பி அயாஸ் சாதிக்கிடம் திடீரென அபிநந்தன் விவகாரத்தை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய தேவை ஏன் வந்தது என கேட்கப்பட்டது.

அதற்கு அவர், "தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்க நாங்கள் விருமப்வில்லை. உண்மையை பேசியதற்காக எங்களை பாகிஸ்தானில் ஆளும் கட்சியினர் திருடர்கள் என்பார்கள், மோதியின் நண்பர்கள் என பேசுவார்கள். காஷ்மீர் விவகாரத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த அரசுக்காக நாங்கள் ஆதரவாகவே இருந்தோம். ஆனால், இந்த அரசுக்கு எதிர்கட்சியை மதிக்கத் தெரியவில்லை" என்று தெரிவித்தார்.

தகவலை மறுக்கும் பாகிஸ்தான் அமைச்சர்

ஆனால், சாதிக்கின் கூற்றை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மொஹம்மத் குரேஷி மறுத்துள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் ஆஃப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தனது விளக்கத்தில், "நாட்டில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்பற்ற வகையில் பேசுவதை நினைத்து வருத்தமாக இருக்கிறது. அழுத்தத்தால்தான் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்ததாக ஒரு முன்னாள் சபாநாயகர் பேசுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. உளவுத் தகவல் அடிப்படையில் அனைத்து நாடாளுமன்ற கட்சித் தலைவர்களிடமும் நடந்த நிகழ்வை விவரிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அபிநந்தன் பிடிபட்ட நாளில் அவரது விவகாரம் குறித்து விளக்கப்பட்டது. ஆனால், அரசியல் ஆதாயத்துக்காக அந்த விவகாரத்தை சாதிக் பயன்படுத்துவது ஆச்சரியம் அளிக்கிறது," என்று ஷா மொஹம்மத் குரேஷி கூறினார்.

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ் விவகாரத்திலும் சரி, அபிநந்தன் விவகாரத்திலும் சரி - எதிர்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்தி வருகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இதே சமயம் பாகிஸ்தான் அமைச்சர் ஃவாத் செளத்ரி, இஸ்லாமாபாதில் உள்ள பிபிசி செய்தியாளர் ஷுமைலா ஜாஃப்ரியிடம் பேசும்போது, புல்வாமா தாக்குதலுக்கு பிறகு நடந்த முழு விவகாரத்தையும் கவனித்தால் உண்மை புரியும். ஆனால், இந்தியாவில் அயாஸ் சாதிக்கின் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் வைத்து தங்களுக்கு சாதகமாக சில ஊடகங்கள் செய்திகளை ஒளிபரப்பி வருவது நேர்மையற்ற நடவடிக்கை என்று குற்றம்சாட்டினார்.

பாகிஸ்தானில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அலி முஹம்மது கான் கூறும்போது, அபிநந்தனை விடுவிக்க எதிர்கட்சி தலைவர் ஷபாஸ் ஷரிஃப், பிபிபி கட்சி இணைத் தலைவர் ஆசிஃப் அலி ஜர்தாரி உள்ளிட்ட தலைவர்கள் இசைவு தெரிவித்தனர் என்று கூறினார்.

ராணுவத்தின் திடீர் விளக்கம்

ஆனால், அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு இந்த விவகாரத்தில் தங்களின் நிலைப்பாடுகளை வியாழக்கிழமை தெளிவுபடுத்திய வேளையில், பாகிஸ்தான் ராணுவம் திடீர் செய்தியாளர் சந்திப்பை வியாழக்கிழமை மாலையில் நடத்தியது.

அயாஸ் சாதிக்கின் நாடாளுமன்ற உரை குறித்து பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள்தொடர்புத்துறை தலைமை இயக்குநர் பாபர் இஃப்திகார் பேசினார். "அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் அரசு எடுத்த முடிவு, பொறுப்புள்ள அரசாங்கத்தின் அடையாளமாக பார்க்கப்பட வேண்டும் என்றும் அதை அரசியல் விவகாரங்களுடன் தொடர்புபடுத்துவது முதிர்ச்சியின்மையை காட்டும் என்றும் தெரிவித்தார். இந்தியாவுக்கு முதலில் தனது பலத்தை காட்டிய பாகிஸ்தான், அதன் பிறகே அபிநந்தனை விடுவிக்கும் விவகாரத்தில் முடிவை எடுத்தது. அபிநந்தனுக்கு இன்னும் ஆறாத காயத்தை பாகிஸ்தான் கொடுத்து அனுப்பியிருக்கிறது," என்று அவர் தெரிவித்தார்.

மீண்டும் விளக்கம் தந்த எதிர்கட்சி எம்.பி
இந்த நிலையில் அயாஸ் சாதிக் செய்தியாளர்களை அழைத்து தனது நாடாளுமன்ற பேச்சு, இந்திய ஊடகங்களில் திரித்து வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.

"அபிநந்தன் இந்தியாவுக்கு இனிப்புகளை கொடுக்க வரவில்லை. பாகிஸ்தான் வான் பகுதிக்குள் நுழைந்த அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தவே அவர் வந்தார். அதனாலேயே அவரை பாகிஸ்தான் சிறைப்பிடித்தது. அந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட்டனர். அதில் இம்ரான் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அவரது சார்பில் பேசிய ஷா மொஹம்மத் குரேஷி, தேசிய நலன்களை கருத்தில் கொண்டு அபிநந்தனை திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்."

"ஆனால், யாருடைய அழுத்தத்தில், யாருடைய கட்டாயத்தின்பேரில் இம்ரான் கான் அந்த முடிவை எடுத்தார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. அபிநந்தனை திருப்பி அனுப்பும் முடிவை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஏன் இவ்வளவு அவசரம் என கேட்டோம். நாட்டின் தலைமை என்ற முறையில் இம்ரான் கான் அரசு இந்த முடிவை எடுத்திருந்தால், அது தலைமையின் பலவீனத்தையே பிரதிபலிக்கிறது என்று நாங்கள் கூறினோம்," என்றார் அயாஸ் சாதிக்.